தேசத்தைப் போலவே!

தேசத்தைப் போலவே நம் வாழ்க்கையும் தெருவில் நிற்கிறது,
இந்த சுதந்திரத் திருநாளில்
உன் நினைவுகளுக்கும் சேர்த்தே
அஞ்சலி செலுத்தி விடுகிறேன்.
என் அன்பே!
தேசத்தைப் போலவே
நம் வாழ்க்கையும்
இன்று
தெருவில் நிற்கிறது!

தலைமுறைகளாய்
வளர வேண்டிய
உறவு
தனிமைகளால்
கேலி செய்யப்படுகிறது.
அன்பு கூட ஒரு வகையில்
அடிமைத் தளைதான்!
அந்த விலங்குகளை
நொறுக்கத்தான்
அடுப்பு மண்டபங்களில்
ஆலோசனை நடத்திப்
படுக்கை அறைகளில்
சுதந்திரப் பிரகடனம்
பண்ணுகிறீர்களா?
ஒரு பெண்ணுக்குத்
தாய்வீடே போதுமென்றால்
தலைவனோடு
தலையணைச் சகவாசம்
தேவையில்லை......
அரசியல் வாழ்கையில்
சில
கோமாளித் தலைவர்கள்
தேசத்தையே
குட்டிச் சுவராக்கி
அதில்
'வால் போஸ்டர்' ஒட்டுகிறார்கள்.
குடும்ப வாழ்க்கையில்
சில கோமாளிக் கிழத் தலைகள்
'வாய் போஸ்டர்? களாலேயே
குட்டிச் சுவர்
கட்டி விடுகிறார்கள்.
மாநிலங்களின் ஒப்பந்தங்கள்
காலாவதி யாகும்போது
கலக்கம் வருகிறது.
மண வாழ்க்கை ஒப்பந்தம்
மதிப்பிழக்கும் போ து
கண்ணீர் வருகிறது......
என் அன்பே
தேசத்தைப் போலவே
நம் வாழ்க்கையும்
இன்று
தெருவில் நிற்கிறது!
அம்மாவின் வார்த்தைகள் மட்டுமே
வேதவாக்கானால்-நீ
தொட்டிலிலேயே கிடந்திருக்கலாம்
கட்டிலுக்கு
வந்திருக்க வேண்டியதில்லை!
மனச் சுமைகள்
அதிகமாகும் போது...
தாங்க முடியாத
தாலிப் பாலங்கள்
தகர்ந்து போகின்றன.
தண்டிக்கப் பட்டது
என்
ஆசைகளல்ல.....
அன்பு தான்!
உன் தாய்
உன்னை அலங்கரிப்பது
ஆபரணங்களால் அல்ல
என் அவஸ்தைகளாலே தான்!
என் கண்கள் காணாத
உன் அலங்காரங்கள்
யாருக்காக?
நான் தென்றலாகத் தானே
வந்தேன்
நீ ஏன் உன் ஜன்னல்களைச் சாத்தினாய்?
உன் வீட்டுக் காற்றுக்குக் கூட
விஷப் பல் முளைத்தது
எப்போது?
உன்னை உதயமாக்க முயன்றதற்காகவா
என்னை
அஸ்தமன மாக்கிவிட்டாய்?
மனச் சுமைகள்
அதிகமாகும் போது.....
தாங்க முடியாத
தாலிப் பாலங்கள்
தகர்ந்து போகின்றன.
என் அன்பே!
இந்த சுதந்திரத் திருநாளில்
உன் நினைவுகளுக்கும்
சேர்த்தே
அஞ்சலி செலுத்தி விடுகிறேன்!
நம்முடைய
இளமையின் பிருந்தாவனத்தில்
இரவும் பகலும்
சருகுகளாகவே உதிர்கின்றன.
மழையைக் கொடுக்காத
இடியால் என்ன பயன்?
சமாதானத்தில் முடியாத
சண்டைகளால்
யாருக்கு லாபம்?
கரையை பற்றிக் கொள்ளாமல்
நதிமகளே உன்னால்
நடக்க முடியுமா?
நம்
இதய வீணைகளின்
நரம்புகளை வருடுபவை
இளைய விரல்களல்ல
முதிய
மரக் கட்டைகள்!
உன்னை நேசித்ததற்க்குப் பதிலாக
நான்
மதுவை நேசித்திருக்கலாம்....
குடியிருப்புக்காவது
குறைவு வந்திருக்காது!
ஒரு மகா காவியத்திற்கு
உன்னை நாயகியாக்கினேன்
நீ
ஒரு கவிதைக்குக் கூட
உருவம் கொட்டுக்காமல்
போய் விட்டாயே!
இந்த நெடிய பாலை வழியில்
ஒரு நொண்டி
ஒட்டகத்தை நம்பிப்
பயணப்பட்ட
என் முட்டாள் தனத்தை
என்ன சொல்லுவது?
என் இளமையின்
பிருந்தாவனத்தில்
இரவும் பகலும்
சருகுகளாகவே உதிர்கின்றன......
என் அன்பே!
இந்த சுதந்திரத் திருநாளில்
உன் நினைவுகளுக்கும்
சேர்த்தே
அஞ்சலி செலுத்தி விடுகிறேன்!


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:34 pm)
பார்வை : 31


மேலே