காலத்தால் அழியா கடன்காரன்

மின்னலும் இடியும் சேர்ந்து,
மிகையாக காதல் செய்ய!
சன்னலில் வந்த சாரல்,
சட்டென்று உள்ளே பாய!
பட்டினித் தாய் வயிற்றில் - சேய்
சட்டென ஒட்டிக் கொள்ள!
ஓட்டியக் குழந்தை சேர்த்து,
உலுக்கினாள் கண்ணீர் மாது.
விடிந்திடும் நாளை நாமும்,
வடித்திடும் கண்ணீர் போகும் - நெற்றி,
படிந்திடும் முடியை கோதி,
பயம் வேண்டாம் கண்ணே என்றாள்.
வட்டிக்கு கொடுத்தோன் தொல்லை,
சட்டியில் சோரோ இல்லை,
கட்டிய கணவன் - தன்னை
தொட்டு ஆறுதலும் சொல்ல,
கண்ணயர்ந்திட்டாள் மாது.
காலையில் கதவு தட்ட,
கடன்காரன் மனதில் ஓட,
கதவினை திறந்தால் மாது.
உடன் கட்சி கொடியை ஏந்தி
ஓட்டுக்கள் கேட்கும் கூட்டம்!
முடமான கணவன் நோக்கி
முகம் மலர்ந்தே அழைத்தாள்.
காலத்தால் அழியா நம்மூர்,
கடன்கார கூட்டம் பாரீர்!
கதவினை மெல்ல நோக்கி,
கவலையை விட்டு வாரீர்!.