பெரியமனுஷி

பெரியமனுஷி......

பாதம்பால் சிரிப்பழகி
சேதாம்பால் உதட்டழகி
செந்தாமரை முகத்தழகி
செவ்வலரி குணத்தழகி

வெளிர்மஞ்ச இடையழகி
தளிர்போல நடைப்பழகி
மலர்வனமா நீ சிரிச்சா
மழையடிக்கும் மனசுக்குள்ள....

அரச மரத்தடியே
ஒசர வீசுதடி
காற்று மனமணக்கும் -உன்
காலுப்பட்டா
பட்ட மரம் நுனி துளிர்க்கும்

விளையாட போனவளே
விடலப்பூ பூத்தவளே
அடிவயிறு வலிக்குதுனு
அழுது நிக்கயில.......

என்னாச்சு ஏதாச்சு
படபடத்து நிக்கயில
பாவிமனம் தவிக்கையில
அமராவதி அக்கா துணையோட

வீடுபோய் சேந்தவளே
வெள்ளையம்மா கிழவிகிட்ட
அவளுக்கு என்னாச்சு
தேம்பி தேம்பி அழுதாளே.....

கேட்டுமுடிக்கும் முன்னே
போக்கேத்தப் பயலே
பேத்தி நேந்துகிட்ட
பெரியமனுஷி ஆகிபுட்டா

தென்னங் கீற்றுகட்டி
பச்சைமட்ட தெருக்குள்ள
பச்சக்கிளி தேவதையா
பேரழகி அடஞ்சுகிட்ட......

வாரம் சிலவாரம்
வஞ்சிக்கொடி உணவுக்கு
கொதித்த கருபட்டியில்
குத்தும்பச்சரிசி மாவுக்கிண்டி

உளுந்தும் நல்லெண்ணையும்
சேர்த்து பதப்படுத்தி
உளுந்துக்களி உனக்குத்தர
உள்நோக்கம் தெரியலையே

கிழவி சொல்லிவிட
கிழக்கு மேற்குதெச
வடக்கு தெக்குதெச
வன்னிமர மூலையில...

நாட்டுக்கோழி முட்டவாங்க
நாலு தெச பறபறந்து
ஊருமுழுக்க நடநடந்து
மன்னார்குடியில் வேடகோழி

விலைக்கு வாங்கி வந்து
வீடுவந்தும் புரியவில்லை
கிளவிசொல்லும் விலங்கவில்ல
கிருக்குவயசு அறியவில்ல.......

உன்னோட பலகாலம் - நீ
உருட்டிவச்ச பலகாரம்
கண்ணோட சிறுதூரம்-நீ
காணாம நகராது கடிகாரம் ..

கருவா குறிச்சியில
என்மனச பரிச்சபுள்ள
கருவிழியும் துங்கலையே
உன்ன காணாத நேரத்துல...

பெருமூங்கில் தோப்புக்குள்
சிருகாத்த நீ நுழைஞ்ச
இடிதாங்கி இல்லாத
இதயத்தில் ஏன் விழுந்த....???


தன்னோடு சுற்றி திரிந்தவள் வயதிற்கு வந்துவிட்டாள்.கிழவி நாட்டு கோழி முட்டை வாங்கி வர சொன்னால் முட்டையிடும்
நாட்டு கோழியையே விலைக்கு வாங்கிவந்தவன் கதை அல்லது
கவிதை..........!

(பெரியமனுஷி
என் கவிதை தொகுப்பில் இருந்து )

எழுதியவர் : nallan (19-Nov-13, 1:16 pm)
சேர்த்தது : nallan
பார்வை : 96

மேலே