தக்க்ஷின் குட் ஈவினிங்
தக்க்ஷின் குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப் யூ.....
தட்டுத்தடுமாறி பிபில் டெலிபோன் ஆப்பரேட்டர் போர்டை ஹேண்டில் செய்து கொண்டிருந்த 1998 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியின் இரவு அது. முதல் நாள் வேலை அதுவும் வாழ்க்கையின் முதல் முதல் வேலை எவ்வளவு கடினமாய் இருக்குமோ அதை விட பலமடங்கு கடினமாயிருந்தது எனக்கு. கிராமப்புற பகுதிகளிலேயே உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த நான் எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ப்ரண்ட் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்திருப்பேன். ஏதோ அடிச்சு மாற்றி பேசுவேன் என்றாலும் ஆங்கில புளூயண்ட்சி என்னிடம் மண்டியிட்டு கதறி அழுது என்னை விட்டு விடு என்று கெஞ்சத்தான் செய்யும்.
என்னுடைய முதல் வேலையின் முதல் இரவு. துணைக்கு ஒரு ஆக்ராக்காரன் அசோக் குமார் சிங் என்று....என் வயதை ஒத்தவன் தான் ஆனால் 21 வயதில் என்னிடம் எம்.என் நம்பியாரைப் போல வில்லத்தனம் செய்த ஆங்கிலம் அவன் நாக்கில் 16 வயதுக் குமரிப் பெண்ணாக நர்த்தனம் ஆடியதுதான் காலத்தின் கோலம். அப்போதைக்கு என்னைக் காப்பாற்ற பாரதத்து கிருஷ்ணனாக அசோக்குமார் சிங்கும் திரெளபதியைப் போல பரந்தாமா என்னைக் காப்பாற்று என்றிருந்த நானும் தத்து பித்து வென்று ஆங்கிலத்தில் அவனிடம் பேசி சமாளித்துக் கொண்டிருந்தேன். அந்த இரவு இன்னும் கொஞ்ச நேரத்தில் மட்டையாகப் போகும் ஒரு குடிகாரனைப் போல ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது....
ரிஷப்சன் குட் மார்னிங் மே ஐ ஹெல்ப் யூ என்று வரவேற்பரையின் தொலைபேசியில் நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த விடியற்காலை... பனிரெண்டரை மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அந்த மனிதரை எவ்வளவு பிசியாக இருந்தாலும் யாராலும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஆஜானுபாகுவான நல்ல தடித்த உருவம், அதற்கேற்ற உயரம், அடர்த்தியான தாடி, தாடிக்கு மேல் தொங்கும் கூர்மையான மீசை, புருவ மத்தியில், நெற்றியில், வயலட், மற்றும் சிகப்பு நிற குங்குமம், கழுத்தில் ஸ்படிகமாலை, ருத்ராட்சம், இன்ன பிற மாலைகள், கையில் ரத்தினம் பதித்த மோதிரங்கள்.... வெள்ளை வெளேரென்று சபாரி..... வாயில் மணக்க, மணக்க மாணிக் சந்த்......
சடாரென்று அவர் வரவேற்பரைக்குள் நுழையவும் நான் போனை வைத்து விட்டு குட் மார்னிங் சார் என்று சொன்னேன். என்னருகில் வந்தார் பவ்யமாய் குட் மார்னிங் மிஸ்டர் தேவேந்தர்....ஹவ் ஆர் யூ? என்று கேட்டவுடன் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது....இது என்னடா வம்பாப் போச்சு இவர பாத்தாலே மிரட்டலா இருக்கே...இவருக்கு எப்டி நம்ம பேரு எல்லாம் தெரியும் என்று யோசித்துக் கொண்டே டெலிபோன் ஆப்பரேட்டர் கேபினில் உட்கார்ந்திருந்த அசோக்குமாரை அதிர்ஷ்ட சாலி தப்பித்தான் என்று நினைத்துக் கொண்டேன்....
ஐய்யம் ஃபைன் சார்.... என்று அழுத்தமான என் தங்கிலீசில் அவருக்கு மறுபடி சொன்ன போது கையை நீட்டி ஹோப் யூ வில் டு த பெஸ்ட் என்று கை குலுக்கி விட்டு ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார் அந்த மனிதர்.....
அவர் அந்தப் பக்கம் போனவுடன் பெல் கேப்டன் ராமமூர்த்தி ஓடி வந்தான்.. என்னிடம்... தேவ் சார்.... அது யாரு தெரியுமா அவர்தான் நம்ம ஹோட்டலோட எம்டி.....பேரு....
ஆனந்த்குமார் டியோகார்
என்று சொன்னான்.....! ஹெச். ஆரை முடித்து விட்டு ஜி.எம்மோடு நேர்முகத்தேர்வு முடிந்த பின்பு நேரே வேலைக்கு அழைக்கப்பட்டதால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. நான் எனக்குப் பின்னாலிருந்த ரிஷப்சன் சுவரில் பித்தளையில் பாலிஷ் செய்யப்பட்டிருந்த வாசகத்தை மீண்டுமொரு முறை வாசித்தேன்... ” த தக்க்ஷின்” என்று எழுதி அதன் கீழே ” டியோகார் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்..” என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆனந்த்குமார் டியோகார் தான் அந்த ஹோட்டலின் எம்.டி. நந்தனம் வெங்கட்நாராயணா ரோட்டில் தேவர் சிலைக்கு வெகு அருகில் இருந்த அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டல்தான் எனக்கு வாழ்க்கையை பிச்சைபோட்டது. வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாழ்க்கை என்பது கற்றுக் கொள்ளல், வாழ்க்கை என்பது நம்பிக்கையோடு இருத்தல் வாழ்க்கை என்பது மற்றவரை மதித்தல், வாழ்க்கை என்பது நாகரீகமாய் இருத்தல், வாழ்க்கை என்பது புதிது புதிதாய் படைத்தல், ரசித்தல்.
எனக்கு எல்லாமே தக்க்ஷின் ஹோட்டல்தான். கூட வேலை பார்த்த மற்ற டிப்பார்மெண்ட் ஆட்கள் எல்லாம் என் ஆங்கிலத்தை அப்போது எள்ளி நகையாடி இருக்கிறார்கள். முதல் ஒரு வருடம் எனக்கு அங்கே நரகமாய் இருந்தது. ஒவ்வொரு நாளையும் அவமானத்தோடு தான் நான் நகர்த்திக் கொண்டிருந்தேன். அஸிஸ்டெண்ட் எஃப் & பி மேனேஜராய் இருந்த ஒரு தங்கத்தமிழன் உன்னை எல்லாம் யார் வேலைக்கு எடுத்தது என்று முகத்திலடித்தாற் போல சொல்லி உன் ப்ரெளனன்சியேஷனே தப்பு தப்பா இருக்கே..... என்று என்னுடன் வேலை பார்த்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை வைத்துக் கொண்டு கிண்டலடித்தான். என்னை அவன் கிண்டலடித்து அந்த பெண்ணை மடக்கவேண்டும் அவ்வளவுதான்....! அவமானம் பிடிங்கித் தின்றது எனக்கு.
எனக்கு முந்திய ஷிப்ட்டில் இருந்தவன் ஒரு விருந்தினரின் விமான டிக்கெட்டை ரீகன்பார்ம் செய்யாமல் மறந்து போனதால் ஏற்பட்ட குழப்பத்தை ஆராய்ந்து யார் தவறு செய்தது என்று முடிவெடுக்கும் முன்னரே.... அது நானாய்த்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கெஸ்ட் ரிலேஷன் எக்ஸியூட்டிவ் ப்ரண்ட் ஆஃபீஸ் லாக் புக்கில்...... வரவேற்பாளன் உத்தியோகத்திற்கு நான் லாயக்கற்றவன் என்றும் மேலும் அந்த நட்சத்திர ஹோட்டலில் என் தகுதிக்கு ஒரு வேலையுமே கிடையாது என்றும் கேவலமாய் எழுதி வைத்திருந்தாள்.....
தவறு என்னுடையது இல்லை என்று புரிந்த பின்னும் நான் போய் அவளிடம் கெஞ்சிக் கேட்டும் அந்த லாக் மெசேஜை அவள் மறைக்கவோ அழிக்கவோ மறுத்து விட்டாள். இதற்கெல்லாம் ஒரே காரணம் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு கிராமப்புற மாணவனாய் மட்டுமே நான் இருந்ததுதான்.
இத்தனைக்கு நடுவே நான் வேர்பிடித்து அங்கே வளர ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அந்த ஒரு காரணம் ஆனந்த்குமார் டியோகார்..... அந்த நிறுவனத்தின் எம்.டி. ஒட்டு மொத்த ஹோட்டலுமே அவருடைய மாருதி ஜிப்ஸி ஜீப்பைக் கண்டாலே அதிரும். ஒரு வார்த்தைப் பிசகினாலும், ஒரு விபரம் தவறாய்க் கூறினாலும் சீட் கிழிந்து போய்விடும் என்ற பயம் எல்லோருக்குள்ளும் இருக்கும். அவர் ஹோட்டலுக்குள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 24 மணிநேரம் எப்போது அவர் வருவார் எப்போது போவார் என்பது யாருக்குமே தெரியாததால் ஒரு வித அச்சத்தோடுதான் எல்லோருமே வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
எம்.டி இஸ் காலிங் யூ..... என்று நுனி நாக்கில் அவருடைய செக்கரட்டரி என்னை ஓர் நாள் அழைத்த போது நான் முதல் ஷிப்ட்டில் இருந்தேன். காலையிலேயே எதற்கு என்னை கூப்பிட்டிருக்கிறார். இவ்வளவு நாள் அப்படி இப்படி ஓட்டி விட்டோமே என்ற பயத்தோடு மெல்ல மெல்ல பேஸ்மெண்ட்டிற்கு சென்றேன். பேஸ்மெண்டில் இருக்கும் அலுவலகத்தைக் கடந்து அவருடைய கண்ணாடி அறைக்குள் நுழைந்த போது மெல்லிய விளக்கொளியும் அவருடைய நாற்காலிக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த சாமிப்படங்களுக்கு இடப்பட்டிருந்த பூக்களின் வாசமும், ஊது பத்தி வாசமும், கம்பீரமாக வெள்ளை சபாரியில் அமர்ந்திருந்த எம்.டி சாரும், அவர் மென்று கொண்டிருந்த மாணிக் சந்த் குட்காவின் வாசனையும், என்று அந்த சூழல் ஒரு மாதிரி பயத்தையும், நடுக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.....
தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன். சிட்...சிட்..மேன்... என்றார். அமர்ந்தேன்.
ஹவ் லாங் ஆர் யூ வொர்க்கிங் ஹியர்...? அதட்டலாய் கேட்டார்.
இன்னைக்கு அனுப்பிடுவாங்க போல வீட்டுக்கு என்ற பயத்தோடு.... மோர் தென்....சி...ச்சிக்ஸ் மன்ந்த்ஸ் சார் என்றேன். வறண்டு போயிருந்த தொண்டையை நனைக்க கூட எச்சில் இல்லாமல் வாய் உலர்ந்து போயிருந்தது.
வாட் யூ வான் டூ ஹேவ்.... காபி... ஆர் டீ.... என்று கேட்டவர்...கெட் டூ காஃபிஸ் என்று ரூம் சர்வீஸுக்கு டயலினார்.
யோவ்... என்னய்யா.. பயந்து நடுங்கிட்டு இருக்க...என்று லோக்கல் தமிழில் பேசிய ஆனந்த்குமார் சார் புனேவுக்கு பக்கத்திலிருக்கும் சங்கிலி என்னும் ஒரு கிராமத்தை சேர்ந்தவராம். சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதை அவரது தமிழ் எனக்குச் சொல்லியது...
இல்லை சார்... என்று மீண்டும் தயங்கிய படியே நுனி நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.
இங்கிலீஷ் தெரியலேன்னா பயப்படக் கூடாதுய்யா.... தெரிஞ்சுக்கணும். டெய்லி எவ்ளோ கெஸ்ட்ஸ் வர்றாங்கோ..., அவுங்க பேசுறத எல்லாம் கவனமா கேட்டுக்க, கூட வேலை பாக்குறவங்க என்ன பேசுறாங்கன்னு கவனி, டெய்லி ஹிண்டு பேப்பர் படி, புரியாத வார்த்தைய எழுதி வச்சுக்க, டிக்சனரியில அர்த்தம் பாரு, அந்த வார்த்தைகள யூஸ் பண்ணி உன்னோட லாக் புக்ல அடுத்த ஷிப்ட் வர்றவனுக்கு லாக் எழுதி வைச்சுட்டுப் போ....
நாய் மாதிரிதான்யா எல்லா விஷயமுமே.... தெரியாதவன், புரியாதவன் வந்தா லொல் லொல்லுன்னு குலைக்கும், பழக்கப்படுத்திக்கிட்டேன்னா... வாலை ஆட்டிக்கிட்டு வந்து காலை நக்கும் அவ்ளோதானே....உன்னோட ஹார்ட் வொர்க்க நான் பாத்துருக்கேன்..... நாலு ஷிப்ட்ன்னாலும் தைரியமா நின்னு கண்டினியூ பண்ற உன்னோட சின்சியாரிட்டிய கவனிச்சு இருக்கேன்....கூட இருக்கவன் எல்லாம் எப்ப யார கால வாரிவிடலாம்னு தான் யோசிப்பான்.... மொத்தத்துல உன் பயத்தை தூக்கி ஓரமா போட்டுட்டு தில்லா வேலையப்பாரு சரியா....என்றார்.
மெல்ல புன்னகைத்த படியே பயத்தோடு காபியை குடித்து முடித்தேன். எழுந்து தேங்க்யூ சார் என்று சொல்லியபடியே கதவைத் திறக்க முயன்ற போது சாக்லேட் பேபி.....என்று அழைத்தார்.... சந்தேகமாய் திரும்பினேன்...
உன்னதான்யா கூப்டேன் போய் ஆக்குபென்ஸி லிஸ்ட்டையும், எக்ஸ்பெட்டட் அர்ரைவல் லிஸ்ட்டையும் எடுத்துட்டு வா என்றார். வெளியே வந்து மெயிண்டெனன்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை கடந்த போது எம்.டியின் வலது கையாயிருந்த மெயின்டெனன்ஸ் டிப்பார்மெண்டின் எச்.ஓ.டி ஹரி அண்ணா என்னை பார்த்து சிரித்தார். பயப்படாம வேலை பாருய்யா என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். ஹரி அண்ணாதான் எம்டியிடம் என்னைப் பற்றி ஏதோ சொல்லி இருக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு....
அவ்வளவுதான்... அன்று முதல் எம்.டி சாருக்கு நான் சாக்லேட் பேபிதான்....! அவர் அடித்த உற்சாக சிக்ஸராய் நான் பறந்து கொண்டிருந்தேன். ஒரு வருடம் முடியும் முன்னரே ப்ரண்ட் ஆஃபிஸ் சூப்பர்வைஸர் ஆக்கினார். ஒன்றரை வருடத்தில் அஸிஸ்டெண்ட் லாபி மேனேஜர் ஆக்கினார். இரண்டு வருடம் முடியும் முன்னரே நைட் டூட்டி மேனேஜர் ஆக்கினார். இரண்டு வருடம் முடிந்து ஒரு நாள் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவருடைய ஜீப்பில் ஏற்றிக் கொண்டு மெளன்ட் ரோட்டிலிருக்கும் ரேமாண்ட்ஸ் ஷோரூம் அழைத்துச் சென்று புதிதாய் பிஸ்கட் கலரில் கோட்டும், சூட்டும் புதிய டைகளும் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்னைக்கு உனக்கு டே ஆஃப் எடுத்துக்கோ...நாளையில இருந்து மார்னிங் நைன் டூ நைட் நைன் உனக்கு டூட்டி என்று சொன்னார், அடுத்த நாள் வேலைக்கு சென்ற போது ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜர் நீதான் என்றார்.....
என்னை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் என் முன்னாலேயே பல சூழல்களில் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.....காலம் வெகு வேகமாய் உருண்டோடியது.
2002ல் துபாய்க்கு வந்த பிறகு எனக்கு தக்க்ஷினில் வேலை பார்த்த அனுபவமே தைரியத்தை கொடுத்தது. புதிய வேலையையும் கொடுத்தது. அப்படி இன்னொரு வேலையில் சேர்ந்த போது யானையைக் கட்டி இழுத்தவனிடம் கொசுவைக் கட்டி இழுக்கச் சொன்னால் என்ன எளிதாக இருக்குமோ அவ்வளவு எளிதாயும் இருந்தது. எப்போதும் தக்க்ஷினை நினைப்பேன் உடனேயே ஆனந்த்குமார் சாரையும் நினைப்பேன். வருடங்கள் வேகமாய் ஓடின. அதற்குப் பிறகு ஏதோ பிரச்சினை காரணமாக தக்க்ஷின் ஹோட்டல் மூடப்பட்டு விட்டதாக சொன்னார்கள். சொந்தப் பிரச்சினையா இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என்று விசாரிக்க கூட அப்போது யாரும் என்னோடு தொடர்பில் இல்லை. விடுமுறைக்கு ஒவ்வொரு வருடமும் செல்லும் போதும் பூட்டிக் கிடக்கும் தக்க்ஷினின் வாசலில் நின்று ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கிளம்புவது எனக்கு வழக்கமாய் ஆனது.
ஹோட்டல் இயங்கிக் கொண்டிருந்த போதே அதை அப்படியே மூடியிருப்பார்கள் போல...ஏனென்றால் இன்னமும் அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் கண்ணாடிக்கு வெளியே அப்படியே எனக்குத் தெரிந்தன. வெளியே இருந்த பார்த்த போது காஃபி ஷாப்பில் அப்படி அப்படியே எல்லாம் இருப்பது தெரிந்தது. அறைகளின் கர்ட்டெய்ன்ஸ் எல்லாம் அப்படியே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்து பார்த்து பிராஸிங்க் செய்யும் தக்க்ஷின் ஹோட்டலின் பித்தளைப் பெயர் மங்கிப் போய் கிடந்தது. அலங்கார விளக்குகள் தூசு படிந்து ஒட்டடையோடு கருத்துக் கிடந்தன. உள்ளே நுழையும் போதே கண்ணாடிகளை ஒற்றை ஆட்காட்டி விரல் வைத்து இழுத்து பார்த்து சிறிதளவு தூசி இருந்தாலும் ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசரைக் கூப்பிட்டு திட்டி இருக்கிறேன்...
எனக்குள் சந்திரமுகி படத்தின் ப்ளாஷ் பேக் போல ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட....என்று கம்பீரமாய் அந்த ஹோட்டல் பீடு நடை போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தது.
யாரையும் சந்திக்க முடியவில்லை...யாரிடமும் அந்த ஹோட்டல் பற்றி கேட்க முடியவில்லை என்ற ஏக்கத்தோடே ஒவ்வொரு முறையும் விடுமுறை முடிந்து திரும்பும் எனக்கு இந்த முறை ஒரு ஆச்சர்யம் காத்துக் கிடந்தது.....
வழக்கம் போல விடுமுறைக்கு ஊருக்கு வந்த நான் தக்க்ஷின் ஹோட்டல் பக்கம் வண்டியை திருப்பி வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போது பூட்டிக் கிடந்த அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் இருந்த டைம் ஆபிஸில் யாரோ ஒரு இந்திகாரன் நிற்பதைப் பார்த்து விட்டேன்....
குடித்திருப்பான் போல அவ்வளவு சப்தமாய் கூப்பிட்டும் நான் அழைத்தது அவனுக்கு கேட்கவே இல்லை. நான் உச்சி வெயில் பன்னிரென்டு மணிக்கு அவனை அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அங்கே நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரர் என்னை ஏற இறங்க பார்த்தபடி இன்னா சார் வோணும்...... என்று கேட்டார்.
இல்லங்க நான் இங்க வேலை பார்த்தேன். ஓட்டல் மூடிக் கிடக்குது அதான் என்ன விபரம்னு கேக்கலாம்னு என்று இழுத்தபடியே.... அந்த ஆட்டோ டிரைவரைப் பார்த்த எனக்கு.....அவர் முகம் பளீச்ச்சென்று நினைவுக்கு வர..... ” மதிண்ணா.....என்னை தெரியுதா....நான் தேவேந்தர்...இங்க ரிஷப்சன்ல வொர்க் பண்ணினேன்ல....நீதானண்ணா நிறைய சவாரி ஏர்போர்ட்ல இருந்து கொண்டு வருவ... என்னண்ணா இப்டி தலை எல்லாம் நரைச்சுப் போச்சு.....
கண்ணில் பிரகாசம் வந்தவராய் மதி அண்ணன் தன் நரைத்த தாடி மீசையையும், தலை முடியையும் சரி செய்த படியே..... இன்னாபா.... எப்டி கீற...எவ்ளோ நாளாச்சு.....என்னை கட்டிக் கொண்டார்.....! வெகு நாட்கள் கழித்து தொலைந்து போன தொடர்புகளில் யாரேனும் ஒருவரை காணும் போது ஏற்படும் உணர்வுகளை எந்தக் கொம்பனாலும் எழுதிக் காட்ட முடியாது என்று இப்போது இதை தட்டச்சு செய்யும் போது எனக்குப் பிடிபடுகிறது. இங்கே யாருக்கும் யாரையும் அவ்வளவு எளிதாய் அடையாளம் தெரிந்து விடுவதில்லை. கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு அப்போது நம்மோடு இருந்த யாரேனும் ஒருவர் நமக்கு அவசியமாகிப் போய்விடுகிறார்......! மதி அண்ணனின் கண்களும் கலங்கி இருந்தன...
என்னாச்சுன்னா ஓட்டலுக்கு.......? கேட்டேன்.....
வா வா டீக் குடிச்சுக்கினே பேசலாம்...... என்று எதிரிலிருந்த சிம்லா ஸ்னாக்ஸ்க்கு என்னை அழைத்தார்.
அவர் பேசத் தொடங்கினார்.....எனக்கு கண்கள் கலங்கத் தொடங்கியது.....
(மீதி அடுத்த பதிவில்....)
தேவா சுப்பையா...