மாங்கல்ய கனவு -கயல்விழி

தோஷங்கள் தொடர்வதால்
விடிவில்லை வாழ்வில் என்று
விரக்தியின் விளிம்பில்
வேதனையில் நிற்கையில்
எங்கிருந்தோ வந்தான்
பேதை என்னை பெண்பார்க்க.
பார்த்ததும் பிடித்ததென்றான்
பதியாய் வாறன் என்றான்
சீர் வேண்டாம் சீதனம் வேண்டாம்
செல்வமாய் இவள் போதும்
மாடி மனை வீடு உண்டு
மகாராணியாய் இவள் போதும்
பேச்சிலே மயங்கி விட்டேன்
பேரின்பம் நான் அடைந்தேன்
மணாளன் கை சேரும் நாளுக்காய்
காத்திருந்தேன் .
வந்தது மணநாளும்
மாலையோடு தலை குனிந்திருந்தேன் மணவறையில் .
கெட்டிமேளம் கொட்டியது
மந்திரங்கள் முழங்கியது
மணாளன் மாங்கல்ய வரம் தந்தான்
மங்கைக்கு .
ஆசி பெறவென்று அன்னையவள்
பாதம் தொட்டேன்
விழி நீர் ஆசி என்று மழைநீரில்
நனைந்து விட்டேன்
கொட்டியது விழி நீர்
அல்ல
ஏழை என் குடிசைக்குள்
எட்டி பார்த்த மழை நீர் என்று
கனவு கலைந்து எழுந்த போது
கன்னி நான் புரிந்துகொண்டேன் ...!!