சென்னை சென்ட்ரல் - 555 - - சந்தோஷ்

1853 ம் ஆண்டு திறக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்.. சென்னை மாநகரின் கம்பீர கட்டிட அடையாளம். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் , திரு.ஹென்ரி இர்வின் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த தொடர் வண்டி நிலைய கட்டிடம்.... தென்னிந்தியாவின் ஒரு நுழைவாயில் என்றே அழைக்கலாம்.

==சாம்பல் நிற புறா ஒன்று நேரம் காலை 10:45 மணி என்று சிவப்பு வெளிச்சமிடும் எலக்ட்ரானிக் ராட்சத கடிகாரத்தின் மீது அமர்ந்திருக்கிறது .அப்புறாவின் கண்கள் வலது திசையை பார்க்கிறது . ஒர் ஒலிப்பெருக்கி பேசுகிறது.==

=பயணிகளின் கவனத்திற்கு ! திருப்பதியிலிருந்து சென்னை சென் ட்ரல் வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் நடைமேடை எண் 3 ல் வந்துக்கொண்டிருக்கிறது=

(இரயில் வருகை பற்றிய அறிவிப்பு, பதிவு செய்யப்பட்ட கணினி பெண் குரல் அழகாக தமிழில் உச்சரிக்கிறது . தொடர்ந்து இந்தியிலும் அடுத்து ஆங்கிலத்திலும் அறிவிக்கிறது. இந்திய இரயில்வே துறையின் விதிப்படி முதலில் மாநில மொழியிலும் பின்பு தேசிய மொழியிலும் அடுத்து சர்வதேச பொது மொழியான ஆங்கிலத்திலும் இவ்வாறான அறிவிப்புக்கள் இருக்க வேண்டும். ஒர் இரயில் நிலையத்தின் பெயர் பலகையிலும் இதே விதி கடைப்பிடிக்கப்படுகிறது. )

சப்தகிரி இரயில் வந்தடைந்துவிட்டது. இப்போது மீண்டும் கணினி குரல்

“ சென்னை சென்ட்ரல் தங்களை அன்புடன் வரவேற்கிறது “

==கடிகாரத்தின் மீது அமர்ந்திருந்த புறா.. நடைமேடை எண் 3 இன் மேற்கூரையில் அமர்ந்து கீழ்நோக்கி பார்க்க.. அதன் தொலைத்தூர பார்வையில் ==

** ஓர் இளம்பெண் ஓடோடி வந்து ஒரு வயதானவரை “டாடி .......” என்று பாச உணர்ச்சியில் ஆரத்தழுவுகிறாள்.

** ஒரு முதியவரின் சுமையை சுமந்து செல்ல சுமைத்தொழிலாளி எனப்படும் போர்ட்டர் பேரம் பேசுகிறான். 30 ரூபாய்தானே ரூல்ஸ் சொல்லுது என்று சொல்லும் அந்த முதியவரிடம் தன் வறுமையை சொல்லி சம்மதம் வாங்குகிறான்.

** இரு தம்பதியனிரின் வருகைக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது ஒரு கூட்டம்.
** கல்லூரி மாணவ மாணவிகள் கலாட்டா செய்து , அரட்டை அடித்து உற்சாக குரல் எழுப்பியவாறு நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

==3 வது பிளாட்பாரத்திலிருந்த புறா... விர்ரென்று பறந்து சென்னை சென் ட்ரல் இரயில் நிலையம் முன்பு உள்ள நடைமேடை பாலத்தில் அமர்ந்து நுழைவாயிலை தன் கூரியவிழியால் உற்றுநோக்குகிறது.

நுழைவாயில் அருகே, அழகான சுடிதாருடன் ஒர் இளமங்கை கையில் தனியார் தொலைக்காட்சி ஒலிவாங்கி ஏந்தியவாறு....
" சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய மேலாளருக்கு சற்று நேரத்திற்கு முன்பு வந்த மர்ம தொலைப்பேசி அழைப்பில். ஒரு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. இன்று மாலை சரியாக 5 மணியளவில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வெடிக்குண்டு வெடிக்கும் எனவும், வெடிக்குண்டு வெடிக்காமல் இருக்கவேண்டுமெனில் , இந்த மர்ம நபர் விடுக்கும் கோரிக்கைக்கு தமிழக முதல்வர், பாரத பிரதமர் ஆகியோர் செவிசாய்த்து நிறைவேற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஒரு நாளில் மட்டும் அண்டை மாநிலங்களிலிருந்தும், சர்வதேசங்களிலிருந்தும் சென்னைக்கும்.. சென்னை வழியாக பிற இந்திய நகரங்களுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும். வருவாய் ஈட்டும் அளவில் தேசத்தில் 3 வது பெரிய இரயில் நிலையமான இங்கு குண்டுவெடிப்பதாக பீதி கிளப்பியது யார் ? அவர்களின் கோரிக்கை என்ன ?.. மர்ம் அழைப்பின் காரணமாக ...சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய வளாகம், புறநகர் இரயில் வளாகம் ஆர்.பி.எப் எனப்படும் ரயில்வே பாதுக்காப்பு படையின்ரால் கடுமையாக சோதனை செய்யப்படுகிறது. மாநில புலனாய்வு துறையும் சோதனையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். தேவைப்படும் எனில் NSG எனப்படும் தேசிய பாதுகாப்புபடையும் வரவழைக்கப்படலாம் என் தெரிகிறது."

---புதிய கலைமுறை செய்திக்காக சென்னை சென்ட்ரலிருந்து , ஒளிப்பதிவாளர் மைக்கேல் உடன் நிஷா.

---------------------------------------------------------
தென்னனக இரயில்வே பொது மேலாளர் மாளிகை. நேரம் காலை 11:22

R.P.F ன் டி.ஐ.ஜி டேவிட்டிடம் .. தெற்கு இரயில்வே பொது மேலாளர்.. சக்சேனா..
" எப்படி... ? எப்படி.. இந்த நியூஸ் மீடியாவுக்கு போச்சு..? அந்த பொண்ணு என்னமோ என்னமோ உளறிட்டு இருக்கா....? ரயில்வே மினிஸ்டர் ரொம்ப டென்ஷன் ஆகிறார்.. ? முதல்ல அந்த டிவி ரிப்போர்ட்டரை விசாரிங்க... உங்க கஸ்டடியில கூட எடுத்துக்கலாம்... ஏன்னா.. இந்த மிரட்டல் வேற சேனல்ல பிளாஸ் ஆகல... என்கொய்ரி பண்ணுங்க.. கிளியரா....... "

" யெஸ் சார்... எனக்கும் அதுதான் டவுட். மிரட்டல் விடுத்தவன் சொன்ன விஷயம் எல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்.? ம்ம். ஒகே சார் ..நான் பார்த்துக்கிறேன். " டி.ஐ.ஜி டேவிட்.

"பட்.. பயணிகளுக்கு பயம் வராத மாதிரி பார்த்துக்கோங்க. ஸ்டேட் போலீஸ் கூட கிளியர் கான்டெக்ட் ல இருங்க... ஒகே ? " என்ற சக்சேனாவிற்கு சல்யூட் அடித்து விடைப்பெறுகிறார்...ஆர்.பி.எப் டி,ஐ.ஜி.
-----
தென்னக இரயில்வே ஆர்.பி.எப் அலுவலகம்., நேரம் நண்பகல் 12 :00

மாநில காவல் துறை ஆணையாளர் மற்றும் ஆர்.பி.எப் டி.ஐ.ஜி முன் ..
புதிய கலைமுறை செய்தியாளர் நிஷா..! மற்றும் ஒளிப்பதிவாளர் மைக்கேல்.

" இந்த மிரட்டல் போன் கால் பத்தி எப்படி உங்களுக்கு தெரியும்...? மிரட்டல்விடுத்தவன் சொன்னதெல்லாம்.. நாங்க சொல்லாதெல்லாம் சொல்லி.. ஒரு பீதிய கிளப்பி விட்டு இருக்கீங்க. பப்ளிக் அனாவசியமா பயப்படுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா ?" மாநில ஐ.ஜி ஆனந்த நிஷாவிடம்.

"சாரி சார்.. நியூஸ் ஸ்சோர்ஸ்லாம் சொல்லமுடியாது.. " செய்தியாளர் திமிருடன் நிஷா பதிலளிக்க,

"யூ இடியட்...யூ ஆர் அண்டர் அரெஸ்ட்.. அது தெரியுமா? தேவையில்லாம ஒரு இஸ்யூ கிரியேட் பண்ணினதும் இல்லாம.. மிரட்டல் விடுத்தவன் டிமாண்ட் பண்ணினதெல்லாம் ஓபன்னா பேசிட்டு இருக்க.. ? ஒழங்கா என்கொய்ரிக்கு ஒத்துழைச்சாதான் போக முடியும்... "

" இல்லைன்னா..."

" வெயிட் அண்ட் சீ “ ..

மாநில ஐ.ஜிக்கு ஒரு தகவல் வருகிறது.
மிரட்டல் விடுத்தவனின் செல்போன் நம்பர் சென்ட்ரல் இரயில்நிலையத்தில்தான் நடமாடுகிறது என்று. அந்த நம்பருக்கு டயல் செய்கிறார் ஐ.ஜி.ஆனந்த.

"எதிர்த்து நில்.. எதிரியே இல்லை... " பிரியாணி படப்பாடல் ரிங்டோனாக நிஷாவின் செல்போனில்..
திடுக்கிட்ட ஐ,ஜியும் , ஆர்.பி. எப் டி.ஐ.ஜியும் அவளின் செல்போனை பறிக்க முயலுகிறார்கள்..

"டோண்ட் மூவ்..." எச்சரிக்கும் விழியுடன் நிஷாவின் கையில் துப்பாக்கி....

"ஹே யூ .. வாட்ஸ் ஹேப்பினிங் ஹியர்....? நீ யாரு.. டெரரிஸ்டா... ? கன் ஐ கீழப்போடு.. இல்லைன்னா சூட் பண்ண வேண்டியது இருக்கும்... " இருவரும் நிஷாவை மிரட்டுகின்றனர். ஆனாலும் அவள் அசரவில்லை.

"ரொம்ப ப்ரிலியண்டா என்னை டிரேஸ் பண்ணிட்டீங்க.. குட்.. குட் ஜாப்.... ஒகே மாட்டிகிட்டேன்.. கேமார மேன் மைக்கேலுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தமும் இல்ல . இவரை நீங்க விட்டுவிடலாமா ? அண்ட் , நான் சொல்றது ஒழங்கா கேளுங்க. என்னை எதாவது பண்ண நினைச்சா.. இப்போவே பாம் பிளாஸ்ட் ஆகும்... ஒகேவா.. " யாரிவள் என்ற குழப்பத்தில் டி.ஐ.ஜி இவள் சொல்வதை கேட்க சம்மதிக்கிறார்..

” உன் பேரு நிஷா.. நீ முஸ்லீமா ? ? ” ஆர்.பி.எப். டி.ஐ.ஜி

"முஸ்லீம்மான்னு என்ன அர்த்தம்..புரியல."

““ அது என்ன சி.எம்.க்கும் பி.எம் க்கு கோரிக்கை.. நீ மிரட்டி கேட்டு.. அவங்க பணிஞ்சு போக அவங்க உன் வேலைக்காரங்களா ? “

“ அட ஆமா சார்.. அவங்க வேலைக்காரங்க தான். நான் கட்டுற டேக்ஸ்ல தானே சம்பளம் வாங்குறாங்க. நான் போட்ட ஒட்டுலதானே பதவியில இருக்காங்க. மக்கள் சேவைன்னு சொல்றாங்கள்ல. அந்த சேவையை இப்படியும் கேட்டு வாங்கலாம்... லூசு மாதிரி பேசாதீங்க.. கவர்மெண்ட் ஆபிசர் .. “

“ ஓ சிட்.. ரொம்ப திமிரு பிடிச்சவ போலிருக்கு..இப்போ என்ன சொல்ல வர.. சொல்லித்தொலை “ சினம்கொண்ட ஆர்.பி.எப் அதிகாரியிடம்

" இந்த ஸ்டேஷன்ல மொத்தம் நாங்க 5 பேர் வந்திருக்கோம். 5 மணிக்கு பாம் பிளாஸ்ட் ஆகுற மாதிரி சில இடத்தில குண்டு வச்சிட்டோம். மணி இப்போ சரியா பண்ணிரெண்டு.. இன்னும் 5 மணி நேரம் தான்...... இப்போ நீங்க அத டிரேஸ் பண்ணினாலும் வேஸ்ட்.. அத நாங்க மட்டும்தான் டிஃபியூஸ் பண்ண முடியும்...நீங்க கைய வச்சா.. டமால்.. ஹா ஹா... "

”ஹே ஹே நீ நீ பாகிஸ்தான்காரியா... முஸ்ஸீம்மா... ? கூலிக்கு வேலை பாக்குறீயா.. நீ வாழுற நாட்டுக்கே துரோகம் பண்ணுறீயே..." மாநில ஐஜி ஆனந்த்.

" ஹலோ ஹலோ... என்ன ஓவரா பேசிட்டு போறீங்க .. கூலிக்கு மாரடிக்கிறவங்க எல்லா மதத்திலும் எல்லா ஜாதியிலும் இருக்காங்க... ஏன் இந்துல எவனும் எங்கயும் குண்டுவச்சதே இல்லையா.. .?. "

"பாம் பிளாஸ்ட் இஸ்யூ ல மாட்டுவதே உன்னை போல ஸ்லீப்பர் செல்ஸ்தானே.. உங்க ஆளுங்கதானே... ஒகே அதவிடு.. மீதி 4 பேர் யாரு.. ?அவங்க பேரு என்ன.. ?அவங்களும் உன் ஆளுங்களா ? பாம் எதுக்கு வச்சீங்க டிமாண்ட்ஸ் என்ன ? நீங்க எல்லாம் எங்கிருந்து வந்தீங்க..? "

" என்ன சார் இது .. என் ஆளுங்க . உன் ஆளுங்கன்னு ? விட்டா பேசிகிட்டே போறீங்க.. நீங்களா வே முடிவு பண்றீங்க.. இதுவரைக்கும் நடந்த பாம் பிளாஸ்ட்ஸ் உருப்படியா ஒருத்தனையாவது ஆதாரப்பூர்வமா பிடிச்சி இருக்கீங்களா. பொறுப்பான ஆபிஸர் நீங்களே இப்படி முஸ்லீம் இந்துன்னு பேசுறீங்க ஏன் நிஷான்னு வேறு மதத்தில பேரு இல்லையா " நிஷா சொன்னவுடன்... அருகிலிருந்த RPF இன்ஸ்பெக்டர்... நிஷாவின் முதுகில் அவரின் முழுங்கை முட்டியால் ஒரு குத்து கொடுத்து நிலைதடுமாற வைக்கிறார்..

"என்னடி பேசிட்டே போற... சார் விடாதீங்க இவள.. உரிச்சு காயப்போடுங்க...." கடமையுணர்விலும் தேசப்பக்தியிலும் உணர்ச்சிவசப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு பதிலடி காத்திருந்தது அடுத்த நொடியில்..

சென்ட்ரல் ரயில்நிலைய மேடை 10 இல் யாரும் இடமில்லாத ஒரிடத்தில் முதல் குண்டு வெடிக்கும் சத்தம் பலமாக கேட்கிறது , பரபரக்கிறது சென்னை....!


"மிஸ்டர்..."
நிஷா... இன்ஸ்பெக்டர் சட்டையிலிருக்கும் அவரின் பெயர் பேட்ஜ்யை பார்த்து " ரா..ம...ர் லி ...ங்.. க.. ம்.... ஆங் மிஸ்டர் ராமலிங்கம்.. நான் என்ன உங்க பொண்டாட்டியா.. இப்படி அடிக்கிறீங்க,.. ம்ம்ம் பார்த்தீங்களா..... அடுத்த குண்டு... பெரிசா வெடிக்கும்.. வெடிக்கனும்மா...?"

”உன்னை இங்க அடிச்சா அங்க எப்படி வெடிக்குது.. எப்படி நியூஸ் போகுது.. ? " RPF டி.ஐ.ஜி....

"அதுவா புளூடுத்.....மூலமா மத்த நாலுபேருக்கும். "

"ஒ சிட்.. டிமாண்ட் எதாவது இருக்கா ? .. " மாநில ஐ,ஜி.

" அது ஏகப்பட்டது இருக்குது அய்யா.. ! அதுக்கு முன்னாடி இந்த ஸ்டேஷன்ல ஒரே குப்பையா இருக்கு சார்.. அத உடனே கிளீன் பண்ணுங்க.. குப்பை போடுறவங்களுக்கு உடனே ஸ்பாட் பைன் போடுங்க.. 1000 ரூபாய்..சரியா.. ? பாத்ரூம் போனேன்.. அய்யோ ஒரே நாத்தம்.. கான்ட்ரெக்ட் எடுத்தவன வந்து அத கிளீன் பண்ண சொல்லுங்க.. அப்புறம் சொல்றேன் என் டிமாண்ட்சை. இப்போ மணி 12 :35 .. அரை மணி நேரத்தில எல்லாம் நடக்கனும்.. ம்ம்ம்ம் அப்புறம் எனக்கு ஒரு பாக்கெட் கிங்க்ஸ் சிகரெட் வாங்கி கொடுங்க. டென்ஷனா இருக்கு "

" என்ன பாப்பா விளையாடுறீயா..? இத சொல்லதான் குண்டு வச்சீயா.கவர்மெண்டுக்கு வார்ன் பண்ண அப்பாவிங்க அன்றாட வாழ்க்கை பாதிக்கலாமா ? " பொறுப்புள்ளவராக ஆர் பி. எப் டி.ஐ .ஜி.

" ஹா ஹா.. குட் கொஸ்டின் சார்.. பட் செய்யுங்க சார்... , இன்னும் நாலரை மணி நேரம்தான் இருக்கும்.. ஆட்டோமேட்டிக் பாம் வேற வச்சிட்டோம். க்ரெக்ட்டா... 5 மணிக்கு வெடிச்சிடும்.டூ இட் பாஸ்ட்..."

தகவல் சொல்லப்படுகிறது அடுத்த அரைமணி நேரத்தில் கழிப்பறை சுத்தமாகிறது. சென்ட்ரல் இரயில் நிலையம் குப்பையின்றி பளபள என்றாகிறது ,மீறுபவர்களிடம் அபாரதம் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தகவல் எல்லாம் நிசாவுடன் வந்தவர்களால் குறுஞ்செய்தியாக இவளுக்கு தெரிவிக்கப்படுகிறது.
----------------------------------------------------
நேரம் மதியம் 1 : 30

நிலைமை விபரீதமாகும் என அனுமானித்த மத்திய மாநில அரசுகள் அதிரடிப்படை, NSG எனும் தேசிய பாதுகாப்பு படை சென்னை சென் ட்ரல் இரயில் நிலையத்தில் வந்து குவிகிறது. தீவிர சோதனைகள் தீவிரமாக நடக்கிறது. பயண்சீட்டில்லாத பயணிகள், பிச்சைக்காரர்கள், பொழுதுப்போக்கு காதலர்கள் என அனைவரும் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். நிஷா வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தகவல் சொல்லப்பட்டு அவளை பற்றிய முழு தகவல் அறிய முற்படுகிறது மாநில காவல்துறை.

” போலீசாரின் இரும்புபிடியில் வசமாக மாட்டிக்கொண்டாரா செய்தியாளர் நிஷா............???? சென்னை சென் ட்ரல் நிலையத்தில் அடுத்த மூன்றரை மணி நேரத்தில் என்ன நிகழும்..? நிஷாவுடன் வந்த அந்த நால்வர் யார். வெடிக்காத மீதம் நான்கு குண்டுகள் வெடிக்குமா ? நிஷாவின் கோரிக்கைகள் என்னென்ன ? “ பரபரப்புடன் பன் டிவி செய்தியாளர் சென்ட்ரல் இரயில்நிலையத்திற்கு எதிரே இருக்கும் மேம்பாலத்தில் நின்று பரபரக்கிறார்.

==சாம்பல் நிற புறா... உயரே பறந்து , தன் விழியால் சென்னை-சென்ட்ரல் இரயில்நிலையத்தை 360 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கிறது.. பரபர சிறகு அடித்தவாறு.....!!===


(தொடரும்)
--------------------------------------------------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (4-Feb-15, 8:34 am)
பார்வை : 306

மேலே