முருகேசன் சித்தப்பா -- கயல்விழி

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.

மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."

ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.


ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர்களால் வளர்க்கப்பட்டு +2 மட்டும் தனது படிப்பை முடித்திருந்தாள். இதற்கு மேலும் படிக்க முடியாது என்று தனது படிப்புக்கு ஏற்ற வேலையாக பாடசாலை ஒன்றில் பாலர் வகுப்பு ஆசிரியை ஆனாள்.
ராணியின் உழைப்பு முழுவதையும் கருணை இல்லத்திற்கு கொடுத்துவிடுவாள்.

அதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தான் வேலு. மிகவும் நல்லவர். 30 வயது தொடங்கி இருந்தது அவருக்கு. திருமணம் ஆகவில்லை. காரணம், அவரின் தந்தை சிறு வயதில் இறந்து போயி விட்டதால் தாய் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அதிகம் வேலை செய்ததால் படுத்த படுக்கையானார். தம்பி முருகேசன் அவனும் பத்தாவதோடு படிப்பை நிறுத்தியிருந்தான். தங்கை மதுமதி பத்தாவது படித்துக்கொண்டு இருந்தாள். குடும்ப பொறுப்பை சுமந்த வேலுவுக்கு திருமணம் செய்யும் எண்ணம் இருக்கவில்லை.

நாட்கள் நகர்ந்தது. ராணி அனைவரோடும் அன்பாக பழகுவதையும் சிறுவர்களின் குறும்புகளை பொறுப்பது, அருவருப்பின்றி நடப்பது போன்றவற்றை கவனித்து இருந்ததால் மனதில் ஒரு எண்ணம் வரவே நேராகவே ராணியிடம் கேட்டார்.

'உன்னை திருமணம் முடிக்க ஆசை படுகின்றேன். உனக்கு சம்மதம் என்றால் சொல்லு' என கூறி தன குடும்ப நிலைமையையும் கூறினார். ராணி யோசித்து சொல்வதாக சென்றுவிட்டாள்.

இரவெல்லாம் யோசித்தாள். தனக்கும் குடும்பம் ஒன்று வேண்டும் என்று எண்ணினாள்.
வேலு கேட்டதை கருணை இல்ல அன்னையிடம் கூறினாள். அவரும் சம்மதிக்கவே இருவரது திருமணம் சாதாரணமாக நடந்தேறியது.

ராணி பாடசாலை செல்வதை நிறுத்தினாள். அத்தை, மச்சான், மச்சாள் என தனது குடும்ப வாழ்க்கையை தொடங்கினாள்.
வேலுவுக்கும் ராணிக்கும் வேணி, மோகன், கவிதா என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

வேலுவின் அம்மா காலமானார். முருகேசன் படிப்பு அவ்வளவாக இல்லாவிட்டாலும் விவசாயம் செய்தான். உழைப்பு, உழைப்பு, உழைப்பு... இதுதான் அவனின் எண்ணம். எத்தனையோ முறை அவனுக்கு திருமணம் பேசியாயிற்று. ஆனால், அவன் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தான். அவனின் உழைப்பின் பலனாக குடும்பம் முன்னேறியது. மதுமதி மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு தேர்வு எழுதிக்கொண்டிருந்தாள். வேலு அதே பள்ளியில் ஆசிரியர் தான். வேலு, ராணி, முருகேசன் எல்லோருமே மதுமதி தான் எதிர்காலம் என்று நம்பினார்கள். வேலு எப்போதும் பெருமை பேசுவார் 'என் தங்கை தான் எங்கள் பரம்பரைக்கு முதல் டாக்டர்' என்று.

மகிழ்ச்சி குடும்பத்தை ஆட்கொள்ளும் போது தான் புயலாய் சூழ்ந்தது மதுமதியின் பிரிவு.
ஆம்... மதுமதி தன்னோடு கல்லூரியில் படித்த ஒருவனோடு காதல் வயப்பட்டு இருந்திருக்கின்றாள். பரீட்சை முடியவும் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள்.

அவ்வளவு தான். குடும்பம் மறுபடியும் துயரில் ஆழ்ந்தது. வேலு தனது சம்பாதிப்பில் சிறிதாய் நிலம் ஒன்று வாங்கினார். தாயின் பெயரில் இருந்த தங்கள் பரம்பரை வீட்டை முருகேசன் பெயரில் மாற்றி எழுதினார். தங்கையை நினைத்து நினைத்து துடித்தார். அத்தோடு தினமும் மனைவியிடம் 'முருகேசன் பாவம், அவன் எங்களுக்காக வாழ்ந்தவன். அவனை உன் பிள்ளை போல பார்த்துக்கொள்' என்று கூறினார்.
கவலையின் உச்சத்தால் வேலு ஒரு நாள் மாரடைப்பில் காலமானார்.

பிள்ளைகள் மூவரோடு ராணி மீண்டும் தனிமையானாள். என்ன செய்வது. அவளின் 35 வயதிலேயே அவளது முழு வாழ்க்கையும் முடிந்துவிட்டது.

முருகேசனோட வீட்டில் இருபது ஊரார் பார்வையில் தவறாக பட சாடை மாடையாக பேச தொடங்கினார்கள். அதனால் இனி இந்த வீட்டில இருக்க கூடாது என் தீர்மானித்தவளாக தன்னிடம் இருந்த நகை, பணம் அனைத்தையும் கொண்டு கணவர் வாங்கியிருந்த நிலத்தில் சிறு வீடு கட்டிக் கொண்டாள். இவர்கள வீடு கட்டுவதை புரிந்த முருகேசன் அவர்களுக்கு உதவினான். விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.

ராணி தன குழந்தைகளுடன் புது வீட்டுக்கு குடி போனாள். கணவனின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கையை ஓட்டிடு இருந்தார்கள்.

திடீரென்று ஒரு நாள் முருகேசன் நன்றாக குடித்துவிட்டு வந்து காத்த தொடங்கினான். ஏன், எதுக்கு என்று அறியாத ராணி திகைத்தாள். இருப்பினும் எதுவும் பேசவில்லை. அவன் வீட்டுக்குள் வருவதே இல்லை. எப்போதும் வெளியில் நின்றே கத்துவான். 'ஏன்டி உனக்கு என்னை பிடிக்கலை? என்னை கட்டிக்கொள்.உன்னை நான் பார்த்துக்கிறேன்.' இது தான் அவன் வாயில் வரும் வார்த்தைகளாக இருந்தது.

குழந்தைகள் வளர ஓய்வூதிய பணம் போதாமல் இருந்தது. என்ன செய்வது வேலைக்கு போகலாம் என்று நினைக்கும் போது தான் மதுமதியிடம் இருந்து அந்த மடல் வந்தது. அண்ணியிடம் மன்னிப்பு கேட்டும், அண்ணன் இறந்தது தெரியாது என்றும் இருந்தது. இந்த கடிதம் எழுதுவது தன் கணவருக்கு தெரியாது எனவும் அதனால் அவர்களின் முகவரியினை எழுதவில்லை எனவும் எழுதி இருந்தாள். அத்துடன் காசோலை ஒன்றும் இருந்தது. பிள்ளைகளின் படிப்பு செலவினை தான் பார்த்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.

கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள் ராணி. மதுமதியின் உதவியுடனும் ஓய்வூதிய பணத்துடனும் வாழ்க்கையை கொண்டு நடத்தினாள்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். ஆனாலும் முருகேசன் மாறுவதாக இல்லை. தினமும் இரவு ஏழு மணிக்கு வந்து கத்த தொடங்கினால் இரவிரவாக கத்துவான். தினமும் ஊரார் அவனை திட்டி தீர்த்தார்கள். ராணி மேல் அன்பு வைத்து பாவம் பார்த்தார்கள்.
அம்மா...அம்மா...
நினைவிற்கு வந்தாள் ராணி .

என்ன வேணி .?

இன்றும் அதே தான். கத்திக்கொண்டே இருந்தான் முருகேசன். இதுக்கு மேல் மோகன்னால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. சித்தப்பாவிடம் சென்று 'இனிமே இப்பிடி பேச வேண்டாம்' என்று கூறினான். இருப்பினும் முருகேசன் கேட்பதாக இல்லை. வந்த கோவத்தில் அடித்தே விட்டான். அவ்வளவு தான். அதுவரை கத்திக்கொண்டிருந்த முருகேசன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

ராணி மோகனின் கன்னத்தில் அறைந்தாள். 'என்ன காரியம் பண்ணினாய்டா... அவர் உன் சித்தப்பா. எப்பிடி அடிக்க முடிஞ்சிது உன்னால... நான் பொறுமையாய் இருந்தான் தானே. ஏன்டா இப்பிடி செய்தாய்...." தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
"அம்மா... அழாதையுங்கோ அம்மா.... அண்ணா தப்பு செய்யல. இப்படி செய்யாட்டி சித்தப்பா தினமும் எங்களுக்கு தொல்லை கொடுப்பார். நீங்க அழாதையுங்கோ அம்மா...." தாயை தேற்றினாள் வேணி.
அப்பிடியே அனைவரும் உறங்கிபோனார்கள்.

அதிகாலைவேளை.
கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார்கள்.
"யாரு...?" என கேட்டவாறு மோகன் தான் கதவை திறந்தான். அப்பிடியே மலைத்துப்போய் நின்றான்.

வாசலில் போலீஸ் நின்றது.

"யாரு மோகன் வந்தது...?" கேட்டவாறு வந்த ராணியும் திகைத்துப் போய் நின்றாள்.
பயம் கலந்த நடுக்கத்தோடு
"என் ன் ன்... ன..... சார்.....?" கேட்டாள் ராணி
"முருகேசன் என்கிறது...."
'ஐயோ.... கடவுளே.... இரவு நடந்த பிரச்சனைக்கு போலீஸ்ட போயிட்டார் போல.... இப்ப என்ன செய்யுறது....' மனதுக்குள் ஆயிரம் நிகழ்வுகள் வந்து போயின.

"ஓ... தெரியும்... என்னோட கணவரின் தம்பி தான்...." தட்டு தடுமாறி பதில் சொன்னாள்.

"நேற்று இரவு அவர் இறந்திட்டார். அவர்ட சொத்து பத்து எல்லாவற்றையும் உங்கள் பெயரில எழுதி வைச்சிருக்கார். பிரேத பரிசோதனையின் பின்னர் பாரமேற்றுக்கொளுங்கள்...." கூறிவிட்டு போலீஸ் அவ்விடம் விட்டு நகர்ந்த பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர்.

இறுதி கடமைகளை முடித்த பின்னர் அவர்களது பரம்பரை வீட்டுக்கு போக தயாரானார்கள். அங்கு சென்று வீட்டினை சுத்தப்படுத்தும் போது தான் மோகனின் கண்ணில் பட்டது ஒரு டயரி. படித்தவனின் கண்கள் குளமாகின. அதில் அன்றாடம் நடந்தவற்றை முருகேசன் எழுதி வைத்திருந்தார்.

'அண்ணி என் அன்னையை போன்றவர். அவரால் தனித்து வாழ முடியும். ஆனால், ஊரார் என் அண்ணி மேல் பழி சுமத்துவார்கள். கணவன் இன்றி ஒரு பெண் வாழ்ந்தால் கதைகட்ட உலகம் பார்த்துகொண்டு இருக்கும். என் அன்னையான அண்ணிக்கு களங்கம் வர நான் விரும்பவில்லை. அதனால் தான் தினமும் இரவில் அண்ணியின் வீட்டுக்கு காவலுக்காய் செல்வேன். அங்கே நின்று கத்துவேன். அதனால் அண்ணி மீது ஊரார்க்கு மதிப்பு வந்துள்ளது. ஊரார் என்னை வெறுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அண்ணிக்கு பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள் என்று தெரியும். அதனால் தான் என் தங்கையின் பெயரில் நானே பணமும் அனுப்பிக்கொண்டு இருந்தேன். நான் அண்ணியின் வீட்டுக்கு செல்லும் பொழுது என்றுமே குடித்தது இல்லை. ஆனாலும் குடித்தது போல நடிப்பேன். என் வீட்டுக்கு வந்த பிறகுதான் குடிப்பேன். காரணம், என் அண்ணியை கேவலமாக பேசுகிறேனே என்று.

எது நடந்தாலும் இன்று நான் சந்தோசமாக சாக போகிறேன். காரணம், என் அண்ணனின் மகன் மோகன் என்னை அடித்துவிட்டான். இதை விட மகிழ்ச்சி என்ன இருக்கு. இந்த துணிவை தான் அவனிடம் இருந்து எதிர் பார்த்தேன். இனி அந்த குடும்பத்தை மோகன் பார்த்துக் கொள்வான். அவர்களின் நன்மைக்காக இவளவு நாளும் போராடினேன். வெற்றியும் கிடைத்துள்ளது. இனி எனக்கு வாழ விருப்பமும் இல்லை.'

சித் ..த...ப்பா....

கண்ணீர் கன்னத்தை நனைக்க
கற்சிலையாய் நின்றான் மோகன் .!


உறவின் புனிதம் உணர்வோம் நாமும் .

------முற்றும்-----

எழுதியவர் : கயல்விழி (17-Aug-15, 12:54 pm)
பார்வை : 2095

மேலே