நீங்களும் IAS ஆகலாம்

இதைப் படித்துவிட்டு ஒரு பத்து இளைஞர்களுக்காவது முன்னேற வேண்டும் என்ற வெறி வருமானால் , இதை எழுதியதற்கு நான் பெற்ற சன்மானமாக அதை எடுத்துக்கொள்வேன்.முடிந்தால் இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.என்னை மிகவும் ஈர்த்த நபர் இந்தக் கட்டுரையின் நாயகன்.

தன்னம்பிக்கையும், முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்தால் அனைவரும் அம்பானியாகலாம்.அப்துல் கலாம் சார் இப்படி வருவார் என்று நினைத்திருப்பாரா , ஏன் அம்பானி கூட இப்படி வருவார் என்று நினைத்திருப்பாரா , தெரியவில்லை.ஆனால் , ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.அதுதான் “கனவு”.எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நிச்சயம் கனவு கண்டிருப்பார்கள் , அந்தக் கனவுகளை எல்லாம் அடைய எத்துனை சிரமங்களைச் சந்தித்திருப்பார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும்.அனைத்தையும் தாண்டி அவர்கள் எல்லாம் வெற்றி பெற்றார்கள் என்றால் அது அவர்களின் விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை.இவர்களைப் போல் சிகரத்தைத் தொட்ட நிறைய வாழும் மனிதர்களைச் சொல்லலாம்.குறிக்கோள் மட்டும் சரியெனில் நமது இலக்கை நிச்சயம் ஒரு நாள் அடைய முடியும்.அதற்காக , குடும்பத்தை கஷ்டப்படுத்தி நமது இலக்கை அடைய வேண்டும் என்றில்லை.சாதுர்யமாகக் கையாள வேண்டும்.இங்கே நான் குறிப்பிடும் நாயகன் நிச்சயம் ஒரு சிலருக்காவது சில நிமிடங்கள் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றேன்.

இந்த நபர் ஒடிசாவில் பிறந்தவர்.வயது 32.IAS ஆக வேண்டும் என்ற முயற்சியை பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்துள்ளார்.தோல்விகளைச் சந்தித்துள்ளார்.ஆனால் , தன் முயற்சியை கைவிடவில்லை.கடந்த இரண்டு வருடங்களாக தீவிர முயற்சியும் , கடின உழைப்பும் இன்று இவருக்கு பரிசளித்துள்ளது.ஆம் , இன்று IAS ஆகிவிட்டார்.சரி , இதிலென்ன ஆச்சர்யம் என்று கூட நீங்கள் வினவலாம்.விஷயம் உள்ளது நண்பர்களே.இந்த நபர் தற்பொழுது பணி புரிவது ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக(Security Supervisor).பெரும்பாலும் ஏ.சி – யில் அமர்ந்து கொண்டு செய்யும் வேலை அல்ல.நடந்துகொண்டே இருக்க வேண்டும்.இதே துறையில் கடந்த பதினான்கு வருடங்களாக இருக்கிறார்.பத்து வருடங்களுக்கு முன்பு IAS பரீட்சை எழுதி வெற்றி பெறவில்லை என்றாலும் அதற்காக இவருடைய தற்போதைய வேலையை விடவில்லை.குடும்பம் இருக்கிறதல்லவா.இவருடைய கனவிற்காக குடும்பத்தை சிரமப்படுத்தவில்லை இவர்.ஆதலால் , பாதுகாப்புப் பணியை தொடர்ந்து கொண்டே IAS ஆவதற்கு தன் முயற்சியை தொடர்ந்திருக்கிறார். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார் , இவருடைய கனவையும் அழியாமல் பார்த்துக்கொண்டார்.

தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் ஏ.சி – யில் அமர்ந்து கொண்டு கணினியில் பணி புரிபவர்களைத்தான் வெளியில் அனைவருக்கும் பரவலாகத் தெரியும்.ஆனால் அவர்கள் எல்லாம் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தங்கள் வேலையைச் செய்ய இந்த நபரைப் போன்ற பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் அவர்களை எல்லாம் நாம் ஒரு கணம் நினைத்துப்பார்க்க வேண்டும் , மரியாதை செலுத்த வேண்டும்.இவர் படித்தது அறிவியல்.நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் எல்லாம் பெற்றிருக்கிறார் கல்லூரி நாட்களில்.ஒடிசா முதலமைச்சரிடம் இருந்து படிப்பில் தான் புரிந்த சாதனைகளுக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார். மொத்தம் பதிமூன்று மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்.இது போக , மாணவர்களுக்கு பரத நாட்டியப் பயிற்சியும் கற்றுக்கொடுக்கிறார்.மிருதங்கமும் வாசிக்கத் தெரிந்தவர்.கராத்தேவும் கற்றவர் , கல்லூரி நாட்களில் கால்பந்து விளையாட்டு வீரரும் கூட. இதை எழுதும் போதே எனக்கு சற்று தலை சுற்றுகிறது.இத்துனை திறமை உள்ளவர் , இத்துனை வருடங்கள் அலட்டிக்கொள்ளாமல் தன் கனவை நோக்கிப் பயணித்து இன்று வெற்றியும் கண்டுள்ளார்.

சரி , இத்துனையும் சொல்லிவிட்டு இவர் இனி எங்கு பணி புரியப் போகிறார் என்பதையும் சொல்லவேண்டுமல்லவா. தன்னுடைய ஆறு மாத கால IAS பயிற்சியை முடித்துவிட்டு அடுத்த வருடம் ஜூன் மாதம் கூடுதல் மாவட்ட உதவி ஆட்சியராகா மதுரை செல்லவிருக்கிறார்.இதில் சிறப்பு என்னவென்றால் , இவர் தற்பொழுது பணி புரியும் நிறுவனத்தில் தன்னுடைய பாதுகாப்பு மேற்பார்வையாளர் வேலையை இன்னும் இரண்டு மாதங்கள் நிறைவு செய்து விட்டுத்தான் செல்கிறார்(Notice Period).அதுதான் இவரின் பொறுப்புணர்ச்சிக்கு சான்று. அவருக்கு இந்தத் தருணத்தில் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். இன்றைக்கு லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி IAS பயிற்சி செல்லும் பலருக்கும் நடுவில் இந்த மனிதர் தனியாகத் தெரிகிறார். தொடர் முயற்சியும் , நம்பிக்கையும் இருந்தால் எப்படிப்பட்ட மனிதனும் சமுதாயம் மதிக்கும் ஒரு நபராக உருவாகலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.இவரை “ரோல் மாடலாக” எடுத்துக்கொள்பவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.முயற்சியுங்கள் , வெற்றி நிச்சயம்.மீண்டும் சந்திப்போம்.

பின் குறிப்பு : சில நடைமுறைச் சிக்கல்களால் என்னால் அவரைப் பற்றி மற்ற தகவல்களை இங்கே கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். “Jothi Ranjan Bagarti” யார் என்று கூகிளிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

————— கதிர்

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஈரோடு க (25-Sep-15, 6:16 pm)
பார்வை : 883

மேலே