சினிமா குற்றம் கடிதல்

சினிமா : குற்றம் கடிதல்


தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான இடங்களில் ஆசிரியர் அடித்தார் என போலீசுக்குப் போவதும்... பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் குதிப்பதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களை வைத்து கதை சொல்லும் வழக்கமான பாணியில் பயணிக்காமல் காட்சிகளை வைத்து கதை சொல்லியிருக்கிறார், அதில் ஜெயித்தும் இருக்கிறார். இல்லையென்றால் படம் வெளிவருவதற்கு முன்னரே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்காது அல்லவா?

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் குற்றம் கடிதலில் என்றுதானே யோசிக்கிறீர்கள். ஆசிரியர்கள் மாணாக்கர்களை அடிப்பது சரியா..? தவறா..? என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். மேலும் செக்ஸ் கல்வியின் அவசியத்தையும் இதில் தெளிவுபடுத்தி இருக்கிறார். பணம் பிடுங்கும் கல்வி நிலையங்கள், மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் என எல்லாவற்றுக்கும் சேர்த்து நல்ல கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.

கிறிஸ்தவப் பெண்ணான ஆசிரியை மெர்லின் இந்துப் பையனான இன்சினியர் மணிகண்டனை காதலித்து அம்மாவின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்திற்குப் பின்னர் விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்புகிறாள். அவள் ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழையும் போது அங்கு செக்ஸ் கல்வி குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. புதுப்பெண்ணான அவளிடம் தோழி அது குறித்து கேட்கும் போது வேண்டாம் என்று தலையசைத்து ஒரு புன்னகையோடு கடந்து விடுகிறாள்.அதன் பின் எல்லாருக்கும் இனிப்புக் கொடுக்கிறாள்.

அதன்பின்னான வகுப்பறைக் காட்சிகளில் ஒவ்வொரு ஆசிரியரின் அணுகுமுறையும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தன் தோழி பெர்மிஷனில் போக, அடங்காத மாணவர்கள் நிறைந்த அந்த வகுப்புக்குப் போகிறாள்... வருகிறது வினை. ஒரு மாணவி அழுது கொண்டிருக்க என்னவென்று கேட்கிறாள். பக்கத்து மாணவி அவள் பிறந்தநாள் சாக்லெட் கொடுத்ததற்கு செழியன் முத்தம் கொடுத்துவிட்டான் என்று சொல்ல அவனை அழைத்துக் கேட்கிறாள். எது சரி... எது தவறு என்று அறியாத பருவம், 'டீச்சர் நீங்க பிறந்தநாள்ன்னு ஸ்வீட் கொடுத்தால் உங்களுக்கும் கிஸ் கொடுப்பேன்' என்று சொல்ல, விடுகிறாள் ஒரு அறை. அவ்வளவுதான்... மாணவன் மயங்கி விழ, பிரச்சினை விஸ்வருபம் எடுக்கிறது. அதன் பின்னான காட்சிப்படுத்துதலில் பிண்ணிப் பெடலெடுத்திருக்கிறார் இயக்குநர். சபாஷ் திரு. பிரம்மா.

மெர்லின் மீது பாசம் வைத்திருக்கும் பள்ளி முதல்வரும் ஆசிரியையான அவரின் மனைவியும் அவளை பாதுகாப்பாக வேறு ஊருக்கு செல்லச் சொல்லிவிட்டு மாணவனை ஆஸ்பிடலில் சேர்க்கிறார்கள். விவரம் தெரிந்து ஓடிவரும் மணிகண்டனையும் உடனே மனைவியை கூட்டிக்கிட்டு போ என ஒரு முகவரி கொடுத்து அனுப்புறார் முதல்வர். மனைவியைக் கூட்டிக் கொண்டு பேருந்தில் பயணிக்கிறான், பையன் கோமா ஸ்டேஜில் கிடக்க... மெர்லினோ வேதனைகளைச் சுமந்து அழுது அரற்றி ஒரு பைத்தியம் போல் பயணிக்கிறாள். அவளின் சிறு தவறு இவ்வளவு பெரிதாகி நிற்கிறதே என காதல் மனைவியை திட்டவும் முடியாமல் அவள் கதறி அழும்போதெல்லாம் தேற்றவும் முடியாமல் தவிக்கிறான் மணிகண்டன்.



இதற்கிடையே மீடியா இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கிறது... விவாதங்கள்... அது இது என ஒரு பக்கம் போக, மாணவன் செழியனோ தந்தையை இழந்தவன், ஆட்டோ ஓட்டும் அம்மா மட்டும்தான். அவனின் தாய்மாமா புரட்சிகர இளைஞர்... அவர் மெர்லினை தேடி ஒவ்வொரு இடமாக விசாரிக்கிறார். அவர்கள் சார்ந்த சமூகம் பள்ளி மீது கல்லெறிகிறது. மாணவனின் ஆபரேசனுக்காக தனது கைப்பணத்தைக் கட்டுகிறார் முதல்வர். பள்ளி நிர்வாகம் மெர்லினை சஸ்பெண்ட் செய்யச் சொல்கிறது. போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்கப்படுவதால் அவர்களும் அவளை விடிவதற்குள் பிடிப்பதற்கு ஆயத்தமாகிறது.

இந்நிலையில் மணிகண்டன் நண்பனின் மூலமாக இன்ஸ்பெக்டருடன் பேசி அவள் உதவியை நாடுகிறான். மீண்டும் லாரியில் ஏறி சென்னைக்கு திரும்பி வருகிறார்கள்... அவர்கள் மருத்துவமனை வந்தார்களா? மாணவன் செழியன் என்ன ஆனான்? மெர்லின் அடித்ததால்தான் அவன் கோமாவில் விழுகிறானா? போலீஸ் மெர்லினுக்கு உதவியதா இல்லையா? தாய்மாமன் அவர்களை எதுவும் செய்யாது விட்டுவிட்டானா? மெர்லின் செழியனின் அம்மாவைப் பார்த்தாளா? அவள் அவளை என்ன செய்தாள்? இப்படி பல கேள்விகளுக்கான விடைகளை அழகான காட்சிப்படுத்துதல் மூலமாகச் சொல்லி முடித்திருக்கிறார்.

இந்துவைக் கட்டிக் கொண்டாலும் இருவருக்குள்ளும் மதம் மாறும் எண்ணமெல்லாம் இல்லை என்பதாய்க் காட்டுவதும்... அவள் குங்குமம் வைத்துக் கொண்டு சென்றதால்தான் பிரச்சினை என்று ஒரு படித்த ஆசிரியை நினைப்பது போல் காட்டுவதும் அதை கையால் அழித்தாலே போதும் என்ற நிலையில்... (அதுபோக இவ்வளவு பிரச்சினையில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள் காலையில் வைத்த பொட்டு அப்படியே இரவு வரைக்கும் இருக்கு என்று வேறு காட்டுவது எவ்வளவு அபத்தம்) தண்ணீரை வைத்துத் தேய்த்துக் கழுவுவது போல் காட்டுவதும்... அவர்கள் பயணிக்கும் லாரியில் பைபிள் வாசகம் இருப்பது போல் காட்டுவதும் இது போன்ற கதைகளைக் காட்சிகளாக்கி... காட்சிகள் மூலம் கதை சொல்லும் படங்களுக்குத் தேவையில்லைதானே... அதேபோல் அவர்கள் போகும் இடங்களில் நடக்கும் திருவிழாக்கள்... எதற்காக... இரண்டு மதங்களையும் சரிசமமாக தராசில் நிறுத்துவதற்கான முயற்சியா..?

வீட்டில் அலும்பு செய்யும் எலியை பொறி வைத்துப் பிடிக்கும் மெர்லின் அதைக் கொல்லக்கூடாது என்பதால் கணவனிடம் சொல்லி வெளியில் விட்டு வரச் சொல்லும் போதே அவள் எவ்வளவு மென்மையானவள் என்பதைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர். அதேபோல் செழியனின் மாமா போராட்டக்காரர் என்பதை அவரின் அறிமுகக் காட்சியிலேயே சொல்லிவிடுகிறார். ஆரம்பக்காட்சிகளில் எதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பமே லாரியில் பயணிப்பதாய் தொடங்கி அன்று காலை முதல் லாரியில் ஏறும்வரை நடந்த நிகழ்வை மெர்லின் விவரிப்பதாய் காட்சிப்படுத்தியிருக்கிறார். எந்தத் துணையுமின்றி இருக்கும் ஒரு தாய் மதமே முக்கியம் மகளோ அவளின் காதலோ முக்கியமில்லை என்று நினைப்பது என்பது ஏற்கும்படியாக இல்லை... அதேசமயம் பையனின் மாமா வந்து விசாரிக்கும் போது மகளுக்காக பேசுவதாய் காட்டுவதும் ஒட்டவில்லை. அப்போது அவ என்னை எதிர்த்து எவனையோ கட்டிக்கிட்டு ஓடிப்பொயிட்டான்னு சொல்லியிருக்கலாமே?



மேலும் மணிகண்டன் மெர்லினிடம் 'ஏன்டா இவனைக் கல்யாணம் பண்ணுனோம்ன்னு இருக்கா'ன்னு கேட்டதும் 'நீ கிறிஸ்டினா பொறந்திருக்கலாம்' என்று சொல்கிறாள்... ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்... காதலில் எங்கே வந்து சாதியும் மதமும்... அப்படியென்றால் அவனும் நீ இந்துவாக பிறந்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டிருக்கணும்தானே...? இவளுக்கு அம்மா இருக்கிறாள்... ஆனால் கணிப்பொறி இன்சினியரான நாயகனுக்கு பெற்றோர் இல்லையா? துறுதுறுப்பான இளைஞன் செழியனுக்கு மூளையில் அடைப்பு அதனால் அடிக்கடி மூக்கில் இருந்து ஒழுகும் ரத்தம்... பள்ளியில் இருக்கும் நேரத்தில் ஒரு கர்ச்சீப் முழுவதும் ரத்தம் ஆக்குகிறான்... அவனுக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பது புரட்சியாளனான மாமாவுக்கும் பெற்றவளுக்கும் தெரியாதா என்ன? அந்த ஆசிரியையை பிடித்தே ஆவேன் என்று திரிந்து பின்னர் அவர்களுக்கு ஆதரவாக வரும் இன்ஸ்பெக்டரம்மா கடைசியில் என்ன ஆனார்? பேருந்தில் வரும்போது தாம்பரத்தில் இறங்கிவிடும் மனைவியை தேடிப் போகும் கணவனின் கண்களில் சிறிது நேர தேடலுக்குப் பிறகு மனைவி தட்டுப்படுவது என்பது நிஜத்தில் நடக்குமா? பையனின் அம்மாவைப் பார்க்கணும் என்று சொல்லுபவள் பேருந்தில் இருந்தே கணவனிடம் சொல்லியிருக்கலாமே... எதற்காக தாம்பரத்தில் இறங்க வேண்டும்...? இப்படி நிறைய கேள்விகளைச் சுமந்தாலும் எடுத்த கருவும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் படத்தை சிறந்த படமாக்கியிருக்கிறது.

படத்தின் முத்தாய்ப்பாய் புரட்சிக்கார மாமன் கடைசியில் எழுதும் வரிகளும்... அந்த வரிகளைத் தாங்கும் புத்தகமும்... கிரேட் முடிவு. படத்தில் செக்ஸ் கல்வியின் அவசியத்தையும், ஆசிரியர்களின் அலட்சியத்தையும் மட்டுமின்றி மீடியாக்கள் தெரிந்த செய்தியை வைத்து திரித்து போட்டி போட்டுக் கொண்டு வெளிக்கொண்டு வரும் அவசரத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுமுகங்கள் என்பதால் கதாபாத்திரங்களுக்காக கதையில் சமரசம் செய்து கொள்ளவில்லை அதுவே படத்தின் முதல் வெற்றி. பாத்திரங்கள் அனைவரும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் அதுதான் காட்சிகளை வைத்து கதையை அழகாக நகர்த்த வைத்திருக்கிறது. புதுமுகங்கள் சாய் ராஜ்குமாரும் ராதிகா பிரசிதாவும் நாயகன் நாயகியாக வாழ்ந்திருக்கிறார்கள். நாயகன் அட்டைக்கத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நாயகி ராதிகாவைச் சுற்றியே கதை பயணிப்பதால் முழுப் பொறுப்பும் அவருக்கே... முதல் படம் என்பது போலில்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். சபாஷ் ராதிகா.

செழியனாக வரும் மாஸ்டர் அஜெய், மாமா பாவல் நவகீதன், அம்மாவாக வரும் சத்யா, பள்ளி முதல்வர் குலோத்துங்கன், அவரின் டீச்சர் மனைவியாக வரும் துர்கா, மெர்லினின் அம்மா, உடற்கல்வி ஆசிரியர் என ஒவ்வொருவரும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். படத்தொகுப்பு சி.எஸ்.பிரேம்... அவரின் பணி ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஒளிப்பதிவு மணிகண்டன், இசை சங்கர் ரங்கராஜன் என எல்லாமே படத்தில் நிறைவாய் அமைந்திருக்கிறது.



எல்லாருமே விமர்சனங்களில் படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்... அது உண்மைதான்... த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா போன்ற கலாச்சார அழிவுகளை உண்டாக்கும் கேவலமான படங்களுக்கு அலைமோதும் மக்கள் இதுபோன்ற படங்களைப் பார்த்து உற்சாகப்படுத்தினால் இன்னும் சில காக்கா முட்டைகளையும் குற்றம் கடிதல்களையும் கொடுக்கும் இயக்குநர்களை தமிழ் சினிமா உலகம் கண்டுகொள்ளும்.

நம் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்ற பாடலை அழகான இடத்தில் பயன்படுத்தி அதை காட்சிப்படுத்தியிருப்பது அழகோ அழகு... சின்னஞ்சிறு கிளியே நம் மனதுக்குள் பச்சக்கென்று ஒட்டிக் கொள்கிறது. மீடியா ஆட்கள் பேச வரும் போது கேமராவை ஆப்பண்ணுங்க சார் என்று மாமாவும் தன்னிடம் விசாரிக்க வரும் பெண்ணிடம் பேசாது விரட்டும் செழியனின் அம்மாவும் படத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று... ஏனென்றால் பிரச்சினை என்பதை மீடியாவிடம் பேச வேண்டியவர்களே அவர்கள்தான்... இதை பெருசாக்குவார்கள் என்று நினைத்திருக்கும் வேளையில் அவர்களின் செயல் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

படத்தின் நிறையை மட்டுமே சொல்வதல்ல விமர்சனம் சின்னச் சின்னக் குறைகளையும் சுட்டிக்காட்டினால்தான் இது போன்று நல்ல கருத்துக்களைச் சொல்லவரும் இயக்குநர்கள் யாரோ ஒருவருக்காக சமரசம் செய்து கொண்டு செய்யும் தவறுகளை தனது அடுத்தபடத்தில் கொஞ்சமேனும் குறைப்பார்கள். மற்றபடி குற்றம் கடிதல் ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் குறிப்பாக ஒன்றை இரண்டாக்கி... கிராமத்துப் பாணியில் சொன்னால் பேனைப் பெருமாளாக்கி... பணம் பண்ணும் மீடியாக்காரர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்களது பார்க்க வேண்டிய படங்களில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(மனசு வலைத்தளத்தில் இது 850-வது பதிவு)

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (30-Sep-15, 12:13 am)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே