’புக்’ மார்க்ஸ் தொகுப்பு 9

57

பதினைந்து வயதில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர் தி. ஜானகிராமன். பள்ளி ஆசிரியராகவும், பின்னர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அமைப்பாளர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர்.

தி. ஜானகிராமனின் அற்புதமான சிறுகதைகளை வாசித்திருக்கிறோம், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள், ‘நடந்தாய் வாழி காவேரி’ போன்ற அபுனைவுகளும் மிகப் புகழ் பெற்றவைதான்.

அபூர்வமாக, அவர் சில மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ‘மாபி டிக்’ நாவல், வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகள், அணு விஞ்ஞானம், புவியியல் பற்றிய ஆங்கில நூல்கள் சிலவற்றை அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

(ஆதாரம்: ’கருங்கடலும் கலைக்கடலும்’ நூலின் ஆசிரியர் அறிமுகக் குறிப்பு)


58

பல வருடங்களுக்கு முன்னால், இந்தியா டுடே ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. அதில் முதல் பரிசு பெற்றவர், க. சீ. சிவகுமார், இரண்டாவது பரிசு, பாஸ்கர் சக்தி.

இந்தப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டவுடன், க. சீ. சிவகுமார் ஊர் விட்டு ஊர் சென்று பாஸ்கர் சக்தியைச் சந்தித்திருக்கிறார். எதற்கு? ‘நம்முளுதவிடவும் உங்குளுது நல்லாருக்குங்க’ என்று பாராட்டுவதற்காகதான்!

(ஆதாரம்: க. சீ. சிவகுமார் எழுதிய ‘கன்னிவாடி’ நூலின் அறிமுக உரையில் ரமேஷ் வைத்யா)


59

புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் ஒரு தமிழர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழில் எதுவும் எழுதியதில்லை என்பதை ஒரு குறையாகவே குறிப்பிடுகிறவர்கள் உண்டு. அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று சந்தேகமாக எழுதப்பட்ட கட்டுரைகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.

அந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். ஆர். கே. நாராயணன் நன்கு தமிழ் கற்றவர். குறிப்பாக, கம்ப ராமாயணத்தை ஊன்றிப் படித்தவர். அவர் எழுதிய ‘The Ramayana’ என்ற ஆங்கில நூல் முழுவதும் கம்பன் பாக்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளன. இதை அவரே அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘கம்பன் கவிதையை நான் ரசித்து மகிழ்ந்த அதே அனுபவத்தை உங்களுக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தப் புத்தகம்!’


60

நபிகள் நாயகத்தின் வரலாறைக் கவிதை நூலாக எழுதினார் மு. மேத்தா. அந்நூல் வெளியானது, அதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பரிசாக வழங்கினார்.

ராஜா அந்தப் புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு வேறு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடல் பதிவிற்காகக் கவிஞர் வாலி அங்கே வந்திருந்தார். அவர் இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். படிக்கப் படிக்கச் சிலிர்த்துப்போய், ராஜாவிடம் மேத்தாவைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

அன்றுமட்டுமில்லை, மறுநாளே மேத்தாவையும் நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்துக்காக அவரைப் பாராட்டிய வாலி, ‘இது எனக்குள் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்.

சில வாரங்கள் கழித்து, ஆனந்த விகடனில் வாலி எழுதும் ‘அவதார புருஷன்’ தொடர் ஆரம்பமானது. ராமாயணத்தைக் புதுக்கவிதை வடிவில் சொல்லும் முயற்சி அது.

’மு. மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’ நூலை வாசித்தபிறகு, அதைப்போலவோ, அல்லது அதைவிட மேலான ஒரு படைப்பையோ எழுதவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் எனக்குள் ஏற்பட்டதால்தான், அவதார புருஷன் ராமனின் கதையைக் கவிதையாக எழுத ஆரம்பித்தேன்’ என்று வாலியே பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

(ஆதாரம்: ‘மு. மேத்தா திரைப்படப் பாடல்கள்’ நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை)

61

சிறுகதைகளை அளப்பதற்கு தி.ஜ.ர. வைத்திருந்த அளவுகோல்:

நமது கதைகளில் நமது பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கவேண்டும். நமது நடை உடை பாவனைகள் நிரம்பியிருக்கவேண்டும்
கதைகள் எல்லாவற்றிலும் ஒரு செய்தி / நீதி இருக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். தற்காலத்தில் அந்த வகைப் பிரசாரக் கதைகளுக்கும் தேவை உள்ளது உண்மைதான். ஆனால் என்றும் மங்காத புகழுடன் புரியக்கூடிய கதைச்சுவை நிரம்பிய சௌந்தர்யமான கதைகளும் வேண்டும்!

(ஆதாரம்: ‘அன்று’ நூல் தொகுப்பின் முன்னுரையில் மாலன்)

62

குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பற்றி, தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ஒரு குறிப்பு:

சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விடவேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்குமேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம்.

இது தவறு, குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள். குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழ தாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.

நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள்மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!

(ஆதாரம்: ‘குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்’ கட்டுரை)
63

’சின்னப் பூ’ என்றால் என்ன தெரியுமா?

‘லிட்டில் ஃப்ளவர்’ பள்ளியின் பெயரை மொழிபெயர்க்கவில்லை. அது ஒரு பழந்தமிழ்ச் சிற்றிலக்கிய வகை. அரசர்களின் பத்து வகைச் சின்னங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் ஐந்து முதல் பத்து பாடல்களால் வர்ணித்துப் பாடுவது. ஆகவே ‘சின்ன’ப் பூ என்று பெயர் சூட்டப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு ஒரு சின்னம்தான் உண்டு. அரசர்களுக்குமட்டும் பத்தா? அதென்ன கணக்கு?

அரசனின் நாட்டு வளத்தைச் சொல்ல : நாடு, ஊர், மலை, ஆறு (4)
அவன் அணியும் ’மாலை’யின் பெருமையைச் சொல்ல (1)
அவனது படை பலத்தைச் சொல்ல: யானைப்படை, குதிரைப்படை (2)
அவனுடைய ஆட்சியின் கம்பீரத்தைச் சொல்ல: கொடி, முரசு, செங்கோல் (3)

(ஆதாரம்: ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘பழந்தமிழாட்சி’ நூல்)

நன்றி:

***

என். சொக்கன் …

06 08 2012

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (6-Nov-15, 1:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 71

மேலே