சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலைகளிலும், வீடுகளிலும் தேங்கும் தண்ணீரால் தத்தளித்துக் கிடக்கிறது தமிழகம். குறிப்பாக சென்னை மக்கள் மிகப் பெரிய சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மழை வருவதும், சில தினங்கள் மக்கள் தத்தளிப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறதே. இதற்கு என்னதான் தீர்வு?

இதைப்பற்றி பேசுகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோராஜ். ''1970களில் இதற்கான வழிமுறைகள் தெளிவாக இருந்திருக்கிறது. ஆந்திரா, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகள் மேட்டுப்பாங்கான பகுதிகள். மழைத்தண்ணீர் எப்போதும் மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதியான சென்னையை நோக்கி விரைந்து வரும்.

அப்படி வரும் தண்ணீரை நிலத்தடி நீராக சேமிக்கவும், தண்ணீரை பாதுகாக்கவும் கால்வாய்களும், ஏரிகளும் இருந்தன. அதுபோக உபரிநீர் கடலில் கலக்கவும் தனியாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு கட்டத்தில், கால்வாய்களில் தண்ணீர் வராத வறட்சியான காலங்களில், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகளாக உருமாறின. அது போதாதென்று ஏரிகளை பட்டா நிலங்களாக மாற்றித் தந்து விட்டனர். இதன் காரணமாக மழைநீரின் பாதை மாறி, சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.

இப்போது பெய்தது வெறும் 40% மழை மட்டுமே. இதற்கே சென்னை தத்தளித்து விட்டது. 100% மழை பெய்தால் எவ்வளவு பாதிப்பு இருக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் நீர்நிலைகளை சரிவர நிர்வகிக்காததும் முறையாக பரமாரிக்காததும் தான். அத்துடன் சாலைகளில் நீர் வழிந்தோடும் கால்வாய்களும் சரியாக அமைக்கப்படுவதில்லை. முடிவில் சாலைப்பகுதி தாழ்வாகவும், கட்டடப்பகுதி உயரமாகவும் அமைக்கப்பட்டதே ரோட்டில் தண்ணீர் தேங்க முக்கியமான காரணம்.

அடுத்ததாக கூவத்தை அதன் முகப்பு பகுதியிலிருந்து முழுமையாக சுத்தம் செய்தால் மட்டுமே மழைநீரையும், கழிவுநீரையும் முழுமையாக வெளியேற்ற முடியும். கூவத்தில் முகத்துவார பகுதி மேடாகவும், தண்ணீர் வடிப்பகுதி பள்ளமாக இருப்பதும் கழிவுநீர் தேங்கி இருப்பதற்கு முக்கியமான காரணம் ஆகும். கூவத்திற்கு செல்லும் கழிவுநீர் வாய்க்கால்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. சென்னையில் வேளச்சேரி, கீழ்கட்டளை மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் இருந்த குளங்கள் இன்று பெரும்பாலும் கட்டடங்களாகவே மாறிவிட்டன.

இப்போது இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் கூட குளமாக இருந்ததுதான். குளத்தில் கட்டடம் கட்டினால், அங்கு நிற்க வேண்டிய தண்ணீர் சாலைகளிலும், வீடுகளிலும்தான் நிற்கும். மக்களும் வீடுகளையும், காலி இடங்களையும் சிமெண்ட் சாலைகளாக அமைத்து விட்டனர். மாவட்ட நிர்வாகமும் தெரு சாலைகளை சிமெண்டினால் போட்டு தண்ணீர் உள்ளே புகாதபடி செய்துவிட்டன. இதனால் தண்ணீர் உள்ளே போகாது என சொல்ல முடியாது. நாள்பட்ட பிறகே தேங்கிய தண்ணீரானது உள்ளே போகும். அதற்குள் தண்ணீர் தேங்கிய சாலைகள் சேதமாகி விடும். பின்னர் அது மக்களுக்கே இடையூறாக இருக்கும்.

மழைநீர் சேகரிப்பு முறைகள்:

இந்த மழைநீர் தேங்குவதை தவிர்க்க 'மழைநீர் சேகரிப்பு தொட்டி'யை அமைக்கலாம். மழைநீர் சேகரிப்பை முதலில் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மேடான பகுதிகளில் முழுமையாக செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையாக 60% தண்ணீரை பூமிக்குள் செலுத்தி சேகரிக்க முடியும். மீதமுள்ள 40% மழைநீரை சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பின் மூலம் சேமித்து வைக்கலாம்.

4 அடி அகலம், 6 அடி நீளம், 5 அடி ஆழமுள்ள குழியினை அமைக்க வேண்டும். 5 அடி ஆழமுள்ள குழியில் 3 அடிக்கு கற்களை கொண்டு நிரப்ப வேண்டும். மீதமுள்ள 2 அடியில் ஒன்றரை அடிக்கு மணல் கப்பிகளை கொண்டு நிரப்பலாம். மீதம் இருக்கும் அரை அடிக்கு கனமான சுற்றுசுவரை கட்டவேண்டும். இந்த அமைப்பை வீடுகளில் உள்ள போர்வெல் பகுதிக்கும் அல்லது கிணற்று பகுதிக்கும் அருகில் 3 மீட்டர் அளவில் இடைவெளி கொண்டதாக அமைந்தால் மழைநீரானது நேரடியாக பூமிக்குள் இறங்கும். குறைந்த பட்சம் 350 அடியிலிருந்து 400 அடிவரை நீரை பூமிக்குள் தேக்க வசதியாக இருக்கும். இந்த செயல்முறையை முழுமையாக செய்யவேண்டும்.

இதனை முன்னரே முழுமையாக செய்திருந்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. மழைநீரை இப்படி சேமிப்பதன் மூலம் சல்பைடு, குரோமியம் நைட்ரேட் போன்ற அமிலங்கள் பிரிக்கப்பட்டு தண்ணீரானது தூய்மையாக மண்ணுக்குள் செலுத்தப்படுகிறது. மாநகராட்சிகளும் சாலை ஓரங்களில் கம்பிவலை அமைத்து மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தலாம். இந்த அத்தனை வழிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்பட்டால் மக்களுக்கு சிரமம் என்பதே இருக்காது. மக்கள் இயற்கையை சீண்டினால் இயற்கையும் தனது பலத்தை காட்டத்தானே செய்யும்.'' என்றார்.

மழை அளவின் விபரங்கள்:

தமிழ்நாட்டின், வடமாவட்டங்களில் காஞ்சிபுரத்தில் 340 மி.மீ, புழல் பகுதியில் 210 மி.மீ, செய்யார் 190 மி.மீ, மாதவரம், திருவள்ளூர் பகுதிகளில் 160 மி.மீ, சென்னை சோழவரம் 150 மி.மீ, தாமரைப்பாக்கம் பகுதிகளில் 130 மி.மீ, பூந்தமல்லி பகுதிகளில் 120 மி.மீ, செங்கல்பட்டு, தரமணி பகுதிகளில் 100 மி.மீ, எண்ணூர், உத்திரமேரூர், செம்பரம்பாக்கம் பகுதிகளில் 90 மி.மீ, பொன்னேரி 80 மி.மீ, வந்தவாசி, அரக்கோணம், தாம்பரம், வேலூர் பகுதிகளில் 60 மி.மீ என மழை அளவுகள் பதிவாகியுள்ளன.

தென் மாவட்டங்களில் அரவக்குறிச்சி, தாராபுரம், அம்பாசமுத்திரம், பாபநாசம், சிவகாசி ஆகிய பகுதிகளில் 50 மி.மீ, மானத்தூர், செங்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளில் 40 மி.மீ, குளச்சல், சங்ககிரி, வால்பாறை, உடுமைலைப்பேட்டை, திருப்பூர், திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் 30 மி.மீ, ராஜபாளையம், கமுதி, நீலகிரி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் 20 மி.மீ அளவும் மழை பெய்துள்ளது.

வங்ககடலில் உருவான காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து இருப்பதாலும், அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுவடைந்து இருப்பதாலும், இரண்டு பகுதிகளும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளாக மாறியுள்ளன. இது கடலோர பகுதிகளில் இருப்பதால் தென்மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் இன்னும் 5 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆரய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- துரை.நாகராஜன்

எழுதியவர் : விகடன் - படித்ததில் பிடித் (15-Nov-15, 12:09 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 144

மேலே