யட்சினி பூஜை- முழுக் கதை

...............................................................................................................................................................................................

நல்ல இடமாகத்தான் பட்டது கோடங்கி மாசானத்துக்கு. நெற்றியில் கை வைத்து இடுங்கிய கண்ணால் பார்த்தான். சுற்றிலும் எல்லைக் கற்கள் பதித்த பொட்டல் காடு. பாறை மேல் பட்டு மீள்கிற வெயிலின் தாக்கம் மனிதச் சதையை உலர்த்தி எடுத்தது. இருந்தாலும் பக்கத்து அணைத் தேக்கத்திலிருந்து வீசும் சிலீர் காற்று தேவாமிர்தமாய் இருந்தது. அரை குறையாக எடுக்கப்பட்ட அஸ்திவாரம். மூங்கில்களும் செங்கற்களும் ஒரு ஓரமாய் சிதறியிருந்தன. கொஞ்ச தூரத்துக்கப்பால் பனை மரங்கள், புளிய மரங்கள் மற்றும் அரச மரங்கள்..

“ ஏய்யா, இங்க வா.. ” தியேட்டர்கார பெரியவர் குப்புராஜன் அழைத்தார். குட்டையாய், கட்டையாய், பணக்கார தொந்தியும் பளபளக்கும் மோதிரமுமாய் இருந்தார் குப்புராஜன். பெரணமல்லூரில் தியேட்டர் வைத்திருப்பவர்.

பவ்யமாய் வந்தார் மாசானம்.

“ எடம் தெரியுதுல்ல? மேலூரு மொக்கைசாமி கிட்டயிருந்து வாங்கினது.. வீட்டுப் பொம்பள வேணாம்னுதான் சொன்னா.. வீடு கட்ட ராசியில்லாத எடமாம்.. மொக்கைசாமி வீடு கட்டப் போனபோது கோடாலி தலையில விழுந்து ஒத்தன் செத்துப் போனானாம்.. அப்படியே அல்லாத்தையும் நிறுத்திட்டு என்கிட்ட தள்ளிட்டான். வெல குறைச்சுத்தான் வாங்கினேன்.. ஒன்னை நம்பி வாங்கினதா வச்சுக்கயேன்..... அஸ்திவாரம் தோண்டச் சொல்ல கருமரப்பட்டி முருகன் காமாலை கண்டு செத்துட்டான்.. என்னா இது? பரிகாரம் கண்டு சொல்லு..!”

மாசானம் அந்த இடத்தை ஒரு முறை சுற்றி வந்தான். குறைந்த விலையில் இடம் கிடைத்தால் வாங்கிப் போடுவது குப்புராஜன் குணம்.. அந்த இடம் சுடுகாட்டில் இருந்தாலும் சரி..!

“அய்யா, இன்னைக்கி ராத்திரி பூசை போட்டு என்னா சமாச்சாரம்னு பாத்து சொல்றேனுங்க.. ”

மறுநாள்..

மாசானம், மாடசாமி கோயில் நடை மூடிய பிறகு, கோயிலுக்குப் பின்புறம் குளத்தங்கரைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தான். ஊரடங்கிய இரவு.. நேர்மையாளர்கள் உறங்குவதற்கும் திருட்டுப் பய புள்ளைகள் தொழிலுக்கு கிளம்புவதற்கும் ஆன இடைப்பட்ட நேரம்..!

குப்புராஜன் வர, எழுந்தான்.

குளக்கரைப் படியில் மாசானம் தூசி தட்டிப் போட்ட மேல் துண்டில் உட்கார்ந்து கொண்டார் குப்புராஜன். மாசானம் உடனடியாக விஷயத்துக்கு வந்தான்..

“ என்னய்யா, இப்படி பண்ணிப்புட்டீக? ”

“ என்ன சொல்ற? தேசிய நெடுஞ்சாலை வரப் போகுதுய்யா.. டெவலப் ஆயிடும்.. நிறைய ரூம் வச்சி வீடு கட்டிட்டு, வருங்காலத்துல லேடீஸ் ஹாஸ்டலா மாத்திருவேன்..! ”

“ இந்த இடம் கோயில் கட்ட மட்டும்தா லாயக்கு.. இந்த எடத்தில முந்தி ஒரு கோயில் இருந்திருக்கு.. காலப்போக்குல அது சிதிலமாயிடுச்சி.. ஆனா தல விருட்சம் நல்லா வளர்ந்து நின்னிருக்கு.. அந்த மரத்தை பரிகார பூஜை எதுவும் பண்ணாம வெட்டி சாய்ச்சிருக்கா.. அந்த மரத்துல குடியிருந்த யட்சினி இப்ப கோபமா இருக்கா.. வீடு கட்ட அவ விட மாட்டா..! ”

“ யோவ், மெதுவாப் பேசுய்யா.. ஒனக்கு சீர்காழி கோவிந்தராசன் குரல்.. இப்ப என்ன பண்றது? ”

“ ஏங்கைய்யா, யாராச்சும் கூட வந்திருக்காங்களா? ”

“ வீட்டம்மா வந்திருக்கா.. இங்க இல்ல.. மாடசாமி கோயிலுக்குள்ள ராப்பூசைக்காக உக்காந்திருக்கா.. ”

“ சரி, சரி.. ” மாசானம் நெருங்கி வந்தான்..

“ ஒரு நாப்பத்தெட்டு மாசத்துக்கு ஒண்ணும் பண்ணாம அப்படியே போட்டு வைங்கய்யா.. ”

“ என்னது நாப்பத்தெட்டு மாசமா? கெட்டது போ..! நாப்பத்தெட்டு நாள் கூட பொறுத்துக்க முடியாதுய்யா..! சகாயம் பில்டர்ஸூன்னு கேள்விப்பட்டிருக்கியா? ராசிக்கார பில்டர்...! நல்ல பணக்காரன்..! அவனுக்கு ஒரே பையன்.. அவன் ஏதோ போலிஸ் கேஸ்ல மாட்டிட்டான்.. நாந்தேன்.. அவனை ஜாமீன்ல கொண்டாந்தேன்.. அடுத்த ஆட்சி வரதுக்குள்ள அவன் மேல கேஸே இல்லாம பண்ணிப்புடணும்.. இதுக்காக அந்தாளு ரொம்ப ரொம்ப கம்மி விலையில எனக்கு கட்டடம் கட்டித் தர ஒத்துட்டுருக்கான்.. அந்தப் பையனை வச்சு நா கட்டடம் முட்டிக்கோணும்..! பையனுக்குன்னு கேட்டா எவ்வளவு காசையும் அள்ளி விடுவான் அந்தாளு..! நாளு கடத்துறது நல்லதில்லே.. இது ஒரு விதமான ஒப்பந்தம்யா.. !

“அப்ப பரிகாரம்தான் பண்ணணும்.. ”

“.பண்ணு.... ”

“ அது கஷ்டமுங்க..! ” இப்போது மாசானம் குப்புராஜன் காதோடு வந்தான்.. “ நரபலி கொடுக்கோணும்.. தலைச்சன் புள்ளையா...! அதுவும் மகா சிவ ராத்திரிக்கு அடுத்து வர்ற அமாவாசையில.. அத உட்டா அடுத்தது அடுத்த வருசம்தான்.. ”

“ ஏய்யா, மரத்துக்கு மனுசன் எப்படி சமானம்? ”

“ மனுசன்தானே அய்யா வெட்டினான்? ”

குப்புராஜன் ஓரிரு நிமிடம் மௌனம் காத்தார்.

“ ஏற்பாடு பண்ணிடு.. எவ்ளோ வேணும் ??? ”

மாசானம் வாயடைத்தான்.

“ ஒரு லச்சம்? ரெண்டு லச்சம்? யோசிச்சு சொல்லு.. காதும் காதும் வச்சா மாதிரி பூஜைய முடி..! அப்பால ரத்தக் களறி விழக் கூடாது..! விழுந்தே..., தொலைஞ்சே..! ! !”

குப்புராஜன் புறப்பட்டார்.

தனது தொழில் முறை எதிரி நவநீதத்தை மாசானம் “வச்சுக் கொடுத்த” மைதான் முடக்கியதாக இன்றளவும் நம்புகிறார் குப்புராஜன். இப்படி நிறைய பூஜை, பரிகாரம் தாயத்தெல்லாம் மாசானம் அவர் குடும்பத்துக்கு செய்து கொடுத்திருக்கிறான்...

இரண்டு நாள் கழிந்தது.

இரவு ஜக்கம்மா பேரைச் சொல்லி குடுகுடுப்பை அடித்தபடி வீடு வீடாக வந்த மாசானம், செல்வி குடிசையை எட்டிப் பார்த்தான். செல்வியின் ஆறு மாதக் குழந்தை புட்டிப் பால் குடித்துக் கொண்டிருந்தது. செல்வியின் மாமியார் பாரிஜாதம் குழந்தையின் காலை லேசாகத் தேய்த்து சூடேற்றிக் கொண்டிருந்தாள்..

“ தாயி, சோத்தை நல்லாப் பெசஞ்சி பால் ஊத்தி, கஞ்சி காச்சி வச்சிருக்கேன்.. புள்ள அழுதா அதக் குடு.. நீயும் ரெண்டு மடக்கு குடிச்சிக்கோ... ” மாமியார் வாஞ்சையாக சொல்லிக் கொண்டிருந்தாள்..

“ எனக்கு எதுக்கத்தே..? பாலே சுரக்க மாட்டேங்கு.. பால் வத்தின பசு மாட்டுக்கு புண்ணாக்கு கேக்குதோ?.., ” செல்வி படக்கென்று அழுதாள்..!

“ மனசில வருத்தமிருந்தா பால் சுரக்காதுதேன்.. அந்த தறுதலையை நெனச்சி நீ ஏன் மருகுற?
ஒழுங்காத்தேன் வளர்த்தேன்.. இப்பிடியா பிச்சிட்டு போகும்? ”

பணத்தையும் நகையையும் சுருட்டிக் கொண்டு, எவளோடோ ஓடிப் போன மகனை எண்ணி விசனப்பட்டவள், சீக்கிரமே நிலைக்கு வந்தாள்..

“ நானிருக்கேன், உனக்கு..! ! ” மருமகளை அணைத்துக் கொண்டாள்..

கோடங்கி முடிவு செய்தான்.. தலைச்சன் புள்ள கிடைச்சாச்சி..! ! !

................................................

2
மழை பெய்து ஒழுகின குடிசைக்குள் குடை பிடித்தபடி முடங்கியிருந்தாள் செல்வியின் மாமியார் பாரிஜாதம். செல்வியும் குழந்தையும் பக்கத்து சத்துணவு கூடத்தின் இடிந்தும் இடியாமலும் இருந்த கூரையின் கீழ் உட்கார்ந்திருந்தனர். குழந்தை வெற்று மார்பை சப்புவதும் கத்துவதுமாக இருந்தது..
ஒன்றும் தெரியாதது போல் அங்கு வந்த மாசானம், செல்வியைப் பார்த்துவிட்டு திறந்திருந்த முக்கு கடைக்கு ஓடினான்..

மாசானம் கொடுத்த பாலையும் பிஸ்கட்டையும் வாங்கி குழந்தைக்கு வயிறாற புகட்டினாள் செல்வி.

பேச்சு வராமல் கையெடுத்துக் கும்பிட்டாள்..

“ அம்மாடி செல்வி.. நா உங்கப்பன் மாதிரி..! நா சொல்றத கேப்பியா? புள்ளையில்லாத தம்பதி.. நல்லா வசதியானவொ.. ஒரு புள்ளய தத்து கேக்குறா..! பசியும் பட்டினியுமா இந்தப் புள்ளைய வளக்க முடியாம நீயும்தான் கஷ்டப்படறே..! இவன் அப்பன் திரும்பி வருவானா? வந்தா நல்லது.. இல்லன்னா ஒரு முடிவெடு தாயி..! ! ! ”

மாசானம் போலி வாஞ்சையை நாக்கில் நிரப்பிக் கொண்டு செல்வியிடம் பேசினான்..

செல்வி அழுகையை பதிலாக்கினாள்.

ஒரு வாரம் போல் கழிந்தது...

“ நீ எம் மக மாதிரி.. ” செல்வியை விளித்தவன், “ வாடா பேராண்டி..! ” என்று குழந்தையைத் தூக்கினான் மாசானம்.. அன்றைக்கு புதுத்துணி வாங்கியிருந்தான். “ எங்களால உங்களுக்கு எவ்வளவு சிரமம்.. ” என்ற செல்வியைத் தேற்றினான்.

“ செல்வி.. கொஞ்ச நாளையில நா வடுவூர் போயிடப் போறேன்.. திரும்பி வரதுக்கு ஆறேழு மாசமாகும்.. உங்கள தனியா விட்டுட்டு போறதுதான் வருத்தமாகுது.. ” தூண்டில் போட்டான்.

“ அய்யா, நீங்களும் போயிட்டா எங்களுக்கு யார் ஆதரவு? எங்கள விடுங்க.. விளைஞ்ச கட்டைங்க.. இந்த பச்சப் புள்ள.. இத நினைச்சாத்தான் கவலையா இருக்கு.. ” பாரிஜாதம் மாசானத்தை தனியே சந்தித்து புலம்பினாள்..

“ எங்க சாதி சனம் ஒரு எடத்துல நிக்காதம்மே..! ” என்ற மாசானம், “ ஒம் பேரனுக்கு ஒரு வழி வச்சிருக்கேன்.. ” என்றான்..

“ தத்து கொடுக்கறதா? ”

“அதிலென்ன தப்பு? ராசாவாட்டம் வளருவான் ஒம் பேரன்.. இங்கிலீஸ்காரப் புள்ளையா சொக்காய் போட்டுட்டு, வாசப் பௌடர் அடிச்சிட்டு, பூ... போ..ன்னு பேசிட்டு... ”

வறுமை.. வறுமை.. வறுமைக்கு நடுவில் மாசானம் காட்டிய கற்பனை காட்சி...!

“ நீ ஒண்ணும் புள்ளைய சும்மா தர வேணாம் தாயி.. நேர்மையான மனுசங்க அவுங்க.. ஒரு லச்சம் பணம் கொடுத்திருக்காக.. மேல்தானிப்பட்டு பக்கம் போயிடுங்க.. அங்க பேங்க்குல செல்வி பேருக்கு ஒரு கணக்கு தொடங்கி ஒரு லச்ச ரூவா போட்டு வச்சிடறேன்..! ஆரு கிட்டயும் மூச்சு விட வேணாம்..! நல்லதா ஒரு குடிசையப் போட்டுக்க..! இட்லி யாவாரம் பண்ணி மருமவளக் காப்பாத்திக்க..! ”

பாரிஜாதம் இளகுவது தெரிந்தது. “ செல்வி சம்மதிக்க மாட்டாளே அய்யா? ”

“பெத்த தாயி அத்தனை சுளுவா சம்மதிப்பாளா? நீதான் நல்லது கெட்டது காட்டி உடணும்.. மொதல்ல நீ சம்மதிக்கிறியா, சொல்லு..! ”

“ எனக்கும் மனசாகல அய்யா..! ! எதுக்கும் முத்தாலம்மன் கிட்ட பூப் போட்டு சொல்றேனே..! ” வாய் விட்டாள் பாரிஜாதம்.

இந்த முத்தாலம்மன் கோயில் என்பது மூன்று பக்கம் நாலடி சுவரும் ஒரு பக்கம் கதவுக்குப் பதில் கோணித் திரைச்சீலையும் கொண்டது. ஒரு கூரையில்லை; கோபுரமில்லை, கோபுரக் கலசமில்லை.. பீடத்தின் கீழ் யந்திரமோ, பீடத்தின் மேல் விக்கிரகமோ இல்லை.. இருந்ததெல்லாம் கூம்பு வடிவ களிமண் சுதைதான்.

அந்த சாயம்மாதான் விரதமிருந்து ஒவ்வொரு பிரதமையிலும் எங்கிருந்தோ ஏழெட்டு களிமண் உருண்டை எடுத்து வருவாள். அதில் பூச்சி அண்டாதிருக்க பச்சைக் கற்பூரம், மஞ்சள் சேர்த்துப் பிசைந்து ஒரு கூம்பு வடிவை உண்டாக்குவாள். கூம்பின் உச்சியில் தேங்காய் போட்டு கையை இளக்கமாக வைத்து அழுத்துவாள். தேங்காயின் அச்சு இறங்கி, கூம்பை தட்டையாக்கி வளைக்கும்.. தேங்காய் மேலும் களிமண் பூசி விடுவாள். இதுதான் அம்மனின் தலையலங்காரம்..!

அம்மனுக்கு கண்மலராக இரண்டு கண்ணாடிக் கண்கள் இருந்தன. அதைப் பதித்து இரண்டு மூக்குத்தி, புல்லாக்கு மாட்டி விடுவாள். அலுமினியத்தாலான கைகளும் கால்களும் கூட இருந்தன. அவற்றை அந்தந்த இடத்தில் கூம்பில் புதைத்து, ஒரு மஞ்சள் துணி சுற்றி, மாலை போட்டு விட்டால் அம்மன் தயார்..

பழைய அம்மன் சுதை, ஆற்றங்கறைக்குப் போய் விடும்...! !

சாயம்மா என்னதான் பச்சைக் கற்பூரம் போட்டுப் பிசைந்திருந்தாலும் சுதை மேல் எறும்பு சாரை விட்டிருக்கும். நாலைந்து நாட்களில் அம்மன் மேனியெங்கும் பச்சை முத்துக்கள் போல சின்னஞ்சிறு துளிர்கள் முளைத்திருக்கும்.. அதுதான் முத்தாலம்மன்.. ! இருந்தாலும் செடி முளைத்த சிலையைப் பார்க்கும்போது மாசானத்துக்கு பக்தி வராது..! சிரிப்பாணியாக பொத்துக் கொண்டு வரும்..! இந்த அம்மனுக்கு என்ன சக்தி இருந்து விடும்?-

இருப்பினும் சக்தி வாய்ந்த தெய்வமாக அந்தச் சேரி மக்கள் வழிபடுகின்றனர்.

மாசானம் யோசித்தான்.....

சாயந்தரம் விளக்கேற்றி வைத்தபின் பாரிஜாதத்தின் சேலை முந்தானையை கிழிக்கச் சொல்லி, இரண்டு துண்டு எடுத்து, இரண்டு பொட்டலங்களாக்கி முத்தாலம்மன் முன் போட்டான் மாசானம். பாரிஜாதமும், செல்வியும் கலக்க முகமாக ஒரு ஓரத்தில் நின்றிருந்தனர். குழந்தை கோயில் தரையில் படுத்திருந்தது. செவ்வரளி வந்தால் தத்து கொடுப்பது, மல்லிகை வந்தால் வேண்டாம்..!

செவ்வரளிதான் வந்தது...

இரண்டாவது பொட்டலத்தை பிரித்து பார்க்க நினைத்த செல்வி, குழந்தை அழுததால் அந்த எண்ணத்தை கைவிட வேண்டியதாயிற்று..

அப்படி அவள் பிரித்துப் பார்த்திருந்தால் அதிலும் செவ்வரளி இருந்தது தெரிந்திருக்கும்... இக்கதையின் போக்கு மாறியிருக்கும்...!

மாசானம் இளக்காரமாக முத்தாலம்மனைப் பார்த்தான்.. ! ! ! ! !

“ அப்புறம் என்னம்மா? அம்மனே உத்தரவு கொடுத்தாச்சு..! ! ! ”

“ வேணாய்யா, வேணாய்யா.. ” அரற்றினாள் செல்வி. குழந்தையை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உற்றுப் பார்த்தாள். அப்படியே நெஞ்சோடு பொதிந்த குழந்தையை கிட்டத்தட்ட பிடுங்க வேண்டியிருந்தது மாசானத்துக்கு... “ செல்வி, நாளைக்கு மேல்தானிப்பட்டு வா.. பாங்க்கு கணக்கு தொடங்கிடலாம்..! ”

செல்வி சூடு பட்டது போல் தூரப் போனாள்.. “அதெல்லாம் ஒண்ணும் வேணாமய்யா.. ”

“ என்னம்மா நீ? சீதேவிய வேணாம்னு சொல்லாதே.. ”

“ வேணாய்யா.. இந்த முத்தாலம்மன் சாட்சி..! ! எங்கிருந்தாலும் என் குழந்த நல்லா இருக்கணும்.. பணத்துக்காக குழந்தைய வித்த பாவம் எனக்கு வேணாம்..! ”

“ உன் நிலைமய நினைச்சு பாரு.. உடுத்த நல்ல துணி கூட இல்ல.. ஆத்தா நீதான் சொல்லேன்.. ”

“ அத்தே.. ஒரு பைசா கூட வாங்கக் கூடாது.. அப்படி எதுனா பண்ணீங்க, நா உயிரோட இருக்க மாட்டேன்..! ”

எவ்வளவு வற்புறுத்தியும் செல்வியை அசைக்க முடியவில்லை. அவள் கண்களில் முத்தாலம்மன் கண்மலர் பிரதிபலித்தது..!

.........................................

3
பாழடைந்த கருங்கல் மண்டபத்தில் கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்திருந்தான் மாசானம். மதியம் இரண்டு மணி வெயில் எந்த ஜீவராசியையும் வெளியே தலை காட்ட விடவில்லை.

மாசானத்தின் வசிப்பிடம் இதுதான். சில மாதங்களுக்கு முன் இன்னொரு குடுகுடுப்பைக் காரனும் இங்கு தங்கியிருந்தான்.. பிற்பாடு அவனைக் காணவில்லை...

மண்டபத்தின் உட்புறம் வெவ்வேறு அளவுகளில் மண்டையோடு, மை, பூஜைப் பொருள்கள், தலைமுடி, பெண்களின் உள்ளாடைகள், ரத்தக் கறைப்பட்ட துணிகள், ஸ்டவ், சில பாத்திரங்கள், துணிமணிகள், ஒரு பெட்டி, ஒரு தோல் பை இத்யாதிகள் நிறைந்திருந்தன.

மேல்தானிப்பட்டில் மாசானத்துக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது.. அதில் சுளையாக இரண்டு லட்சம் இப்போது...!

மாந்த்ரீகன் உபாசனையில் தவறிழைத்து விட்டால் அவன் உயிர் தப்ப முடியாது.. என்றோ ஒரு நாள் நரபலி விசயம் வெளியே கசிந்தால் போலிஸ் தண்டிக்கப் போவதும் அவனைத்தான். குப்புராஜனை அல்ல.. அப்படியிருக்க இந்தத் தொகை அவன் கணக்கில் இருப்பது நல்லதுதான். என்ன, பிழைக்கத் தெரியாத அப்பாவி செல்வி..! உண்மையில் அவள் பவித்திரம் மாசானத்தையே கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது.

நாளை ராத்திரிதான் அமாவாசை.. அமாவாசையில்தான் பூஜை போட்டு நரபலி கொடுக்க வேண்டும்.. நாளை இரவு நடுநிசி வரை சுடுகாடுகளில் மனித நடமாட்டம் இருந்த வண்ணமிருக்கும்.. ஆனால் காலியிடத்தில் யாரும் வரமாட்டார்கள்.. குழந்தையை பலியிடப் போவது அந்த காலி இடத்தில்தான்.. குழந்தை கொஞ்சம் நோஞ்சான்தான்.. குழந்தையை பஞ்சவர்ணத்திடம் கொடுத்து வைத்திருந்தான் மாசானம்.. இந்த பஞ்சவர்ணம் என்பவள் மாசானத்துக்கு ஒரு விதத்தில் கடன்பட்டவள்..

பஞ்சவர்ணத்துக்கும் அவள் புருசனுக்கும் கல்யாணமாகி அஞ்சு வருசமாகியும் பஞ்சவர்ணம் தாயாகவில்லை. அவள் புருசனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்ய முடிவானபோது பஞ்சவர்ணம் பதறப் பதற ஓடி வந்தது மாசானத்திடம்தான். மாசானம் செய்த பூஜைகளின் பலனாக அவள் கருவுற்றாள்..! அவள் பையன் மாசானத்திடம் நலம் விசாரிக்கிற அளவு நன்றாகவே ஒட்டுவான்..! பின்னே, தந்தையிடம் மகன் ஒட்டிக் கொள்ள மாட்டானா என்ன?

சரி, சரி.. பிற்போக்குத்தனமான சமூகத்தில் பிரசினைகளும் பிற்போக்குத்தனமாகவே தீர்க்கப் படுகின்றன..!

இந்தக் காரணத்துக்காகவே பஞ்சவர்ணத்துக்கு மாசானத்திடம் பயம் எழுபது சதவீதம், விசுவாசம் இருபது சதவீதம், ஒரு வகைப்பட்ட ஈர்ப்பு பத்து சதவீதம் என்று வியாபித்திருந்தது.. ! இப்படி ஆடு கோழி என்று மாசானம் கொண்டு வந்து கொடுப்பான்..! “ சொந்தக்காரங்க விட்டுட்டு போயிருக்காங்க.. திரும்ப வந்து வாங்கிக்குவாங்க.. ” என்று புருசனிடம் சொல்லி வைப்பாள் பஞ்சவர்ணம்.. விட்டுட்டுப் போன ஆடுகள் என்ன ஆகுமென்று பஞ்சவர்ணம் அறிவாள்.. இந்த முறை குழந்தை..!

பஞ்சவர்ணத்தின் கண்களில் பயம் தெரிந்ததால் மாசானம் சில பச்சை நோட்டுக்களை அழுத்தினான்.. “ பெரிய இடத்து விவகாரம்..! மூச்சு விடக் கூடாது..! ”

வடுவூரில் மாசானத்தின் அண்ணன் மகள் வசிக்கிறாள்.. மாசானத்தின் ஒரே சொந்தம்.. சித்தப்பா.. சித்தப்பா என்று பிரியமாக இருப்பாள்.. யட்சினியை அமைதிப் படுத்தி விட்டு அவளிடம் போய் விட வேண்டியதுதான்.. அவன் பரம்பரைக்கு பாத்தியப்பட்ட கோயில் ஒன்றிருக்கிறது.. அதைச் செப்பனிட்டு பூசாரியாகி விட வேண்டியதுதான்.. குடுகுடுப்பைக் காரனுக்கு பூசாரி கௌரதைதான்...

எதிர்காலம் பற்றி பல்வேறு யோசனைகளில் லயித்திருந்தான் மாசானம்..

யாரோ அவனை உலுக்கினார்கள்.. கண் திறந்து பார்த்தால் செல்வி..! ! !

“ என்னம்மா இந்த பக்கம்? ” சட்டென்று எழுந்தான் மாசானம்..

செல்வி மண்டபத்துக்கு வெளியே நின்றிருந்தாள்.. பக்கத்தில் யாருமில்லை...! ! ! !
பின்னே உலுக்கியது ? ? ?

சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்து, நிமிர்ந்தபோது....

யம்மாடியோவ்... செல்வியின் பிரம்ம்ம்....மாண்டமான முகம் அவன் கண் முன்..! செல்விக்கு கண்ணாடிக் கண்கள்..! ! !

உடம்பெங்கும் மின்சாரம் போல் ஒன்று பாய, பதறி எழுந்தான் மாசானம். முழுதும் வேர்த்தது..! ! ! பிரமையா, நிஜமா எனத் தெரியாத குழப்பம்..! ! !

கொஞ்சம் விபூதி இட்டுக் கொண்டு திரும்ப படுத்தான்..

திரும்ப உலுக்கப்பட்டான்..! !

“ ஐயையைய்யோ... ” அலறி அடித்து எழுந்தவன் முன் குப்புராஜனின் வேலைக்காரன்..!

“ ஒன்னை அய்யா வரச் சொன்னாரு... ” வேலைக்காரன் அறிவித்தான்.

குப்புராஜனின் பங்களா..

பின்பக்க வழியாக முக்காடு போட்டு உள்ளே வந்த மாசானம், குறுக்கும் மறுக்கும் உலவிக் கொண்டிருந்த குப்புராஜனை கவலையோடு கவனித்தான்.. என்ன நடந்தது ? ?

“ வாய்யா.. வாய்யா.. வாய்யா.. ” குப்புராஜன் படபடத்தான். “ எல்லாம் வீட்டம்மாதான்.. கண்ணாடி பாத்தா முகத்துல ரெண்டு கண்ணு தெரியுதுங்கறா..! ”

“அய்யா.. ரெண்டு கண்ணுதானே தெரியும்? ”

“ நீ வேறய்யா..! நெத்தியில ஒண்ணு, தாவாங்கட்டையில ஒண்ணு தெரியுதுங்கறா..! ! ! அவ முகத்துக்குப் பதிலா வேற முகம் தெரியுதுங்கறா.. நேத்து ராத்திரியில இருந்து இந்தக் கூத்து.. ஆன மேனிக்கு நல்லாப் பேசறா.. திடீர்னு கண்டபடி உளர்றா.! ! என்னன்னு பாரு..!! ! ”

“ ஐயையோ, வீட்டம்மா உடம்புல யட்சினி வந்துடுச்சோ? அதுக்குத்தா தாறுமாறா ஒடம்பிருக்கும்.. ! ! ! ”

தனக்குள் சொல்லிக்கொண்ட மாசானம் தியேட்டரம்மாவை பார்த்தான்..

தாட்டியாய், ஒற்றைக் கல் மூக்குத்தியில் மின்னினாள் தியேட்டரம்மாள்.. முதலில் சாதாரணமாய் மாசானத்தைப் பார்த்தவள், பிறகு உதடு கோணி “ உய்ய்...ஊ..ஊ.. ” என்றாள்..

மாசானம் வேப்பிலையால் அடித்து, “ நீ யாரும்மா ” என்றான்..

“ நீயே சொல்லேண்டா நா யாருன்னு? ”

“ மொக்கைசாமி வித்த எடத்தோட யட்சினிதானே? ”

“ தெரிஞ்சுகிட்டே ஏண்டா கேக்குற? ”

“ என்ன வேணும் தாயி? ”

“ ஒனக்குத் தெரியாதா என்ன வேணுமின்னு? ”

“ நாளை ராத்திரி வரைக்கும் பொறுத்திரு தாயி.. தலைச்சன் புள்ளய பலி கொடுத்துர்றேன்..! ”

“ என்னோட பலிய நாந்தான் தூக்கிட்டு வருவேன்..! ”

“ தாயி.. அது.. ”

“ ஒரு குழி வெட்டு.. பலிய நானே தூக்கிட்டு வந்து குழியில போடறேன்.. நானே மூடிட்டு அப்படியே குழிக்குள்ள போயிடறேன்..! அப்புறம் இவ உடம்புல வர மாட்டேன்..! ! ”

“ அ.. அ.. அப்படியே தாயி... ”

“ வேற வழியில்லேய்யா.. ” குப்புராஜனிடம் தெரிவித்தான் மாசானம்.. “ புள்ளய அது கைல கொடுத்துதான் ஆகணும்..! இதுக்கு ஏய்யா கவலைப்படுறீக? கேக்கறது உங்க சம்சாரமில்லே.. யட்சினி..! அல்லாத்தையும் நா பாத்துக்கறேன்..! ! ”

பொட்டல் காட்டில் அஸ்திவாரம் பக்கத்தில் குழியெடுத்து, ஒரு விரற்கடை உயரத்துக்கு பூப்போட்டு வைத்திருந்தான் மாசானம். கொத்து ஊதுபத்தி வாசம் பரப்பியது. ஒற்றை அரிக்கேன் விளக்கை ஆச்சரியத்தோடு முகர்ந்து விட்டு “லொள் லொள்” என்று குரைத்தது நாயொன்று.

குப்புராஜன் டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்..

பத்தடி தள்ளி “ ஹ் ஹூம்.. ” என்று முனகியபடி தியேட்டரம்மாள்.. அவள் கையில் துணி மொந்தையில் குழந்தை..!

குழிப் பக்கம் அவள் வந்ததும் நாலா பக்கம் சுற்றிப் பார்த்தாள்.. விளக்கு வெளிச்சத்தை குறைத்தாள்.. மாசானத்தையும் குப்புராஜனையும் அடிக்காத குறையாக !தூர விரட்டினாள்..!

சற்று நேரத்தில் “ வியார் வியார் ” என்ற குழந்தையின் அழுகுரல் எதிரொலித்து அடங்கியது..! ! ! !

குப்புராஜனும், மாசானமும் ஓடிவந்து பார்த்தபோது மூடப்பட்ட குழியருகில் மயங்கிக் கிடந்தாள் தியேட்டரம்மா..! ! !

............................................................

4

குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நல்ல விதமாய் பலிபூஜை முடிந்ததில் மாசானத்துக்கு சந்தோஷமென்றாலும் ஏனோ திருப்தியில்லை..! அதன் பிறகு தியேட்டரம்மாளும் நல்லபடி இருப்பதாகத்தான் குப்புராஜன் தெரிவித்தார்..

செல்விதான் பாவம்..! ஒரு இருபதாயிரமாவது அவள் கையில் திணித்திருக்க வேண்டும்..!

மாசானம் பரம்பரை குடுகுடுப்பைக்காரன்.. நரபலியோ, கன்னி பூஜையோ அவன் தொழில் தர்மம் என்பதால் அது தப்பிதமாக அவனுக்குப் பட்டதில்லை..

செல்வியை ஏமாற்றியது கூட அவனை உறுத்தவில்லை.. செல்வி மாசானத்தை நம்பி குழந்தையைக் கொடுக்கவில்லை... முத்தாலம்மன் சாட்சியாக குழந்தையைக் கொடுத்தாள்.. தனது பக்தையை அந்த அம்மன் ரட்சித்திருக்க வேண்டும்..! அவள் கோட்டை விட்டால் மாசானம் பொறுப்பாக முடியாது..! ! !

அவனுக்கிருந்த உறுத்தல் ஒன்றே ஒன்றுதான்..

யட்சினிகள் பேய், பிசாசு, ஆவிகள் போலல்ல..!

ஆத்மா தான் செய்த அதிகப்படி புண்ணிய பலன்களை ஒரே பிறவியில் அனுபவிக்கக் கூட வில்லை என்றால் அது யட்சினியாகும்..! ஏதேனும் நல்ல மரம், பசு, சங்கு, ஆறு, குளம், கன்னிப் பெண்ணின் உடம்பு என்று எதிலாவது தங்கிக் கொண்டு, சித்தத்தினால் புண்ணிய பலன்களை சுகித்துக் கொண்டிருக்கும்.. தனது இருப்பிடம் சூதகமானால் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடும்.. தேமே என்றிருக்கும் யட்சினியை தொந்தரவு செய்தால் தன் கோபத்தைக் காட்டும்.. பரிகாரம் செய்தால் சாந்தமாகி விடும்.. ஒன்றும் செய்யாமல் சில காலம் சும்மா இருந்தாலே கூடப் போதும்..! புண்ணிய பலன் முடிந்ததும் யட்சினி பித்ரு லோகம் போய் விடும்.. !

இப்படித்தான் அவன் குருநாதர் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்..!

ஆவிகள் போல் அடுத்தவர் உடம்புக்குள் வருவது யட்சினியின் இயல்பல்ல..! அதுவும் கல்யாணமான பெண்ணின் உடம்புக்குள்..? ஊஹூம்..! இத்தனைக்கும் குப்புராஜன் வீட்டிலே பதினான்கு வயதில் அவர் மகளிருக்கிறாள்..! ! வருவதாயிருந்தால் அவள் உடம்பில் வந்திருக்கலாமே?

கால ஓட்டத்தில் யட்சினிகளும் மாறி விட்டனவோ ? ? ?

எது எப்படியாயினும் பலி கொடுப்பது என்கிற முடிவிற்கு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை.. இதனால் மாசானம் இந்த நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.. மேலும் யோசித்துச் செயல்பட நேரமில்லை.. சம்பவங்கள் வேகவேகமாக நடந்து விட்டன..!

இப்போது...

நிதானமாக யோசித்துப் பார்க்கிறான்..

தியேட்டரம்மா தானாக எதுவும் சொல்லவில்லையே?
தன் வாயால்தானே விஷயத்தை வாங்கினாள் ???

ஏதோ தப்பு நடந்திருக்கிறது..! ! !

மாசானத்துக்கு இப்போது அறுபத்தெட்டு வயதாகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருகிறது ..! தலைவலி என்றால் சும்மா “விண் விண்” என்று தெறிக்கும். அதுவும் அன்றொரு நாள் அந்த பிரமாண்டமான செல்வியின் முகத்தைப் பார்த்ததிலிருந்து..!

மாசானத்தின் பெரியப்பாவுக்கு இப்படித்தான் ஒற்றைத் தலைவலி கண்டது.. அவரும் மாந்த்ரீகர்தான்.. அவர் யாகம் செய்யும்போது நேர்ந்த ஒரு தவறு..! ஒரு மாதத்தில் அவர் இறந்து போனார்...

ஒரு தடவை காலியிடத்துக்குப் போய் பார்த்துவிட்டு வரலாமா ??

இன்றே காலியிடம் போக வேண்டும்.. நாளை காவல் போட்டு விடுவார் குப்புராஜன்..! பிற்பாடு ஒரு குடுகுடுப்பாண்டி உள்ளே நுழைய முடியுமா?

மாசானத்தின் குழப்பத்தை கிஞ்சித்தும் லட்சியம் செய்யாமல் எனக்கென்ன என்பது போல் இருந்தது காலியிடம்..!

அமாவாசை கழிந்த இரவு, தூக்கலான இருட்டுடன் நிசப்தமாயிருந்தது..

அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் நோட்டமிட்டான் மாசானம். இதோ, இங்குதான் குழி தோண்டியது.. ப.. பக்கத்தில் இது என்ன?

அது ஒரு கால்.. குழந்தையின் கால்... தனியாக விழுந்து கிடந்தது..!

நாய் குதறிப் போட்டிருக்குமோ ? ?

மாசானம் அந்தக் காலை கையிலெடுத்துப் பார்த்தான்.. பிசிபிசுத்து அமுங்கியது..! இது நிஜக் காலல்ல...
மாவுப் பொம்மை..! ! ! ! ! ! !

.......................................................
5

குழிக்குப் பக்கத்தில் மாவுக்கால் என்றால்.. குழியில் கிடப்பது..

அதுவும் மாவுப் பொம்மையாகத்தான் இருக்க வேண்டும்...! ! ! !

மாசானத்துக்கு உண்மை புரிந்த மறு கணத்தில் அவன் தலையும் சுரீரென்று வலித்தது... மூக்கில் ரத்தம் சொட்டியது..! ! !

அன்றைக்கு மாடசாமி குளக்கரையில் அவனும், குப்புராஜனும் பேசிக் கொண்டிருந்ததை தியேட்டரம்மாள் கேட்டிருக்க வேண்டும்.. குழந்தையைக் காப்பாற்ற, சமயம் பார்த்து அவள் நடித்திருக்கிறாள்.. ஒரு நாள் முழுக்க குழந்தை அவள் கையில் இருந்திருக்கிறது..! குழந்தையை வேறிடம் அனுப்பி விட்டு மாவுப் பொம்மையை எடுத்து வந்திருக்கிறாள்.. அதை குழியில் போடும் சமயம் தானே குழந்தை போல் அழுதிருக்கிறாள்..! !

குழந்தை உயிரோடிருக்கிறது என்றால் எங்கிருக்கும் ? ? குழந்தையைக் காட்டித்தானே மாவுப் பொம்மை செய்திருப்பாள்?

காட்டுப்புதூர் சூரியநாராயணா தெருவில் மாவுப் பொம்மை செய்கிற குடும்பங்கள் நாலைந்து இருக்கும்.. அங்கு போய்ப் பார்த்தால் தெரிந்து விடும்...!

உடனே கிளம்பினான்..!

காட்டுப்புதூர் சூரியநாராயணா தெரு..

ஒவ்வொரு வீட்டிலும் குடுகுடுப்பை அடித்துக் கொண்டே குழந்தைகளுக்கு விபூதி போட்டுக் கொண்டு வந்தான் மாசானம்..

கூழி செல்வேந்திரன் வீட்டுக்கு வந்தபோது..

அவன் மனைவி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை எடுத்து வந்தாள்.. துணி விலக்கி முகம் பார்த்தான் மாசானம்..

செல்வியின் குழந்தை.. ! ! !

விபூதி போட்ட கையோடு, எட்டு வைத்து திரும்புவதற்குள் கை கால் இழுத்தது. மாசானம் தரையில் விழுந்தான்..

விழுந்த இடத்தில் குப்பைத்தொட்டி..!

அப்படியே படுத்துக் கிடந்தான்..!

காலையில் யாரோ அவனை இழுத்து வேப்ப மரத்தடியில் படுக்க வைத்தனர். ஒரு லோட்டா டீயை யாரோ வாயில் ஊற்றினர்.

பதினோரு மணிக்கு அந்த வீட்டுக்கு ஒரு கார் வந்தது.. அதிலிருந்து இறங்கிய வசதியான தம்பதியர் அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு காரில் விரைவதை இரு கண்ணால் பார்த்தான் மாசானம்..

இதுவும் அந்த தியேட்டரம்மாள் ஏற்பாடாக இருக்க வேண்டும்.. ! அம்மாடியோவ்...! பார்க்க மொச மொசவென்று முயல்குட்டி மாதிரி இருந்தாலும் தியேட்டரம்மா லேசுப்பட்டவள் இல்லை...! ! ! கில்லாடியோ கில்லாடி..! ! ! மனிதத் தன்மையுள்ள கில்லாடி..! ! ஆனால் இதெல்லாம் ஊர் உலகத்துக்குத் தெரிய வராதே..! ! அதெப்படி அந்தப் பெண் செல்வி, முத்தாலம்மனிடம் வேண்டியது தியேட்டரம்மா மூலம் நடக்கிறது ? ? ? ? ஆச்சரியத்தில் அப்படியே அவன் விழிகள் விரிந்தன.. விரிந்த விழிகள் நிலை குத்தின.. வாய் குளறியது.. “ முத் முத்..முத்தாலம்ம்ம்ம்... மா...! ! ! ”

சில வருடங்கள் கடந்தன.


காலியிடத்தில் இன்னமும் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது.. குப்புராஜனின் மனைவி கணவனிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.. “ ஏங்க, லேடீஸ் ஹாஸ்டல் கட்டினீங்க.. உடனே அதை இடிச்சிட்டு பாலி டெக்னிக் காலேஜா மாத்தினீங்க.. அதையாவது அப்படியே வைக்கலாமில்ல? இப்ப ஷாப்பிங் காம்ப்ளக்ஸா மாத்தணும்னு ஒத்த கால்ல நிக்கிறீங்க.. இது உங்களுக்கே நல்லா இருக்கா..? ? ? ”

“ எது லாபமோ அதத்தானே செய்யணும்? ” குப்புராஜன் முனகலாகச் சொன்னார்..!
“ பொம்பளைக்கு என்ன தெரியும்? எதுதான் முடியும்? ”

மாமியார் இறந்தபின் ஆயா வேலைக்காக அந்த வக்கீல் தம்பதிகளின் பங்களாவில் நுழைந்த செல்வியை நிறையவே பிடித்துப் போனது வக்கீலம்மாவுக்கு..!

“ குழந்தை வேணும்னு கேட்டேன்.. குழந்தை வந்துட்டான்.. என் தொழிலு அப்படி.. கவனிக்க நேரமில்ல.. இந்தக் குழந்தைய உன் குழந்தையா நினைச்சு வளர்க்கணும்.. ” இவ்வாறு செல்வியிடம் கூறிய வக்கீலம்மாள் குழந்தையிடம் திரும்பினாள்.. “ இங்க பாரு மனோகர்..! உனக்கு இன்னொரு அம்மா..! ! ! ”

நன்கு புஷ்டியாயிருந்த அந்த மூன்று வயதுக் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரிந்தது செல்விக்கு..! அவள் குழந்தை..! ! ! !

“ ஹாய்..! ப் ப் முது அம்மா..! ” மழலை பேசிக் கொண்டே ஓடி வந்த குழந்தையை கண்ணீர் மல்கக் கட்டியணைத்தாள் செல்வி..! ! அவள் வாய் முணுமுணுத்தது..

“ முத் முத்..முத்தாலம்ம்ம்ம்... மா..! ! ! ”

முற்றும்


..................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (22-Mar-16, 11:54 am)
பார்வை : 1282

மேலே