விக்கல் தும்மல் கொட்டாவி உடல் சொல்லும் நற்செய்திகள்

நம் முகத்துக்கு நேராக மிக வேகமாக யாராவது கையைக் கொண்டுவரும்போது என்ன நடக்கும்? நாம் சுதாரித்து நகர்ந்துகொள்ளவோம் அல்லது அடிபடுவோம். அடிபட்ட ஒருவரிடம் அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், முழுமையாக அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனென்றால், அந்தக் கணத்தில் கண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதுவாகவே மூடியிருக்கும். கொட்டாவிவிட்டுக்கொண்டே இருந்ததற்காக ஆசிரியர் உங்களை வகுப்புக்கு வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், கொட்டாவிவிட்டது உங்கள் தவறல்ல; உண்மையில், அதைச் செய்தது நீங்களே அல்ல. மூளை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் கொட்டாவிவிட்டது. இப்படி நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே செய்யும் காரியங்கள் பல. அவை...

*மயிர்க்கூச்செரிதல்*

விலங்குகள் சண்டையிடும்போது அவற்றின் உடலில் உள்ள முடிகள் நீட்டிக்கொண்டு (சிலிர்த்து) நிற்கும். இதனால் அவற்றின் தோற்றம் இயல்பான அளவைவிடப் பெரியதாகவும், வலிமையானதாகவும் தெரியும். இப்படி மயிர்க்கூச்செரிந்து நிற்பது உடலில் காயங்கள் அதிகமாக ஏற்படாமல் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும்.

மனிதனும் விலங்குகள் கூட்டத்தை சேர்ந்தவன்தான். அவனுக்கும் இதே மாதிரி தோற்றம் மாறுகிற அளவுக்கு ஆரம்பத்தில் அதிகமான முடி இருந்ததும் உண்மை. மனிதர்கள் சண்டைகளைக் குறைத்துக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்ததும், அவன் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர ஆரம்பித்தன. ஆனால், நமது உள்ளுணர்வின் காரணமாக மிகப் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்க்கும்போதோ, பேய்ப் படம் பார்க்கும்போதோ. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ நமக்கு அனிச்சையாக மயிர்க்கூச்செரியலாம்.

மயிர்கூச்செரிதல் நமது உடலில் வெப்ப இழப்பைத் தடுக்கும்; அதோடு, குளிர்காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

*கொட்டாவி*

மிகவும் போர் அடிக்கும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு மொக்கைப் படத்தை பார்க்கிறபோது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும். நாள் முழுக்க வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், வாயைத் திறந்து, சொடக்குப் போட்டு இதை நாமே அடக்க முயன்றிருப்போம். கவனித்து இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இதுதான்.

*விக்கல்*

ஓர் உணவுவிடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டை முற்றிவிடுகிறது. அப்போது திடீரென்று உங்களுக்கு விக்கல் வந்தால் எப்படி இருக்கும்? `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா?’ என்று திட்டுவார்கள் நண்பர்கள். ஆனால், நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. `இந்த இடத்திலிருந்து கிளம்பினால்தான் சண்டை முடியும்’ என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் போவதுதான் துரதிர்ஷ்டம்.

*திடீர் விழிப்பு*

அடித்துப்போட்ட மாதிரி தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா/ அப்படி உணர்ந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி!

மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும்.

*விரல்களில் தோல் சுருக்கம்!*

தண்ணீரில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கையை முக்கி வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். `கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது.

*தும்மல்*

பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.

*சோம்பல் முறித்தல்!*

இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்தத் தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.

உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது! *விக்கல், தும்மல், கொட்டாவி போன்றவை இயல்பானவை. அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துகொண்டால் இன்னொருவர் கொட்டாவி விடும்போது நமக்குக் கோபம் வராது. மாறாக, அதிலிருக்கும் *`இயற்கை’* என்கிற ஆச்சர்யம்தான் கண்முன் தெரியும்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Apr-17, 9:02 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 436

சிறந்த கட்டுரைகள்

மேலே