தண்ணீர் நம் உயிர்நீர்

நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். உலகில் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீருக்காகப் போர் நிகழும் என்று அவ்வப்போது விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

ஏன் இந்த அச்சுறுத்தல்? உலகம் முழுவதும் நிலத்தடி நீர் மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைவதால் பலவழிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம்? யாரைக் குற்றம் சொல்வது?

அரசையா? பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களையா? தனி மனிதனையா? யாரைச் சொன்னாலும் அவர்கள் மறுத்து இயற்கையைத் தான் குற்றம் சொல்வார்கள். இயற்கை என்ன குற்றம் செய்தது? வேண்டியவர், வேண்டாதவர் என, மனிதர்களைப்போல இயற்கை பாரபட்சம் பார்ப்பதில்லை.

வெயிலோ, மழையோ, காற்றோ எதுவென்றாலும் இயற்கை எல்லோருக்கும் பொதுவாகவே அள்ளிக்கொடுக்கிறது. தண்டனை வழங்குவதாக இருந்தாலும் இயற்கை யார் எவர் என பேதம் பார்ப்பதில்லை.

முன்பு ஒருவர் வீடு கட்டினால் நல்ல காற்றோட்டமான இடமா, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியா என்றுதான் முதலில் பார்ப்பார். வீட்டில் தண்ணீர் தேவைக்கு அடிபம்பு அமைத்துக் கொள்வோர் நூற்றில் 30 பேர்தான்.

ஆனால் இன்று வீடு கட்டுபவர்கள் நல்ல நிலத்தடி நீர் உள்ள இடமா எனப் பார்த்து நல்ல விளைச்சல் நிறைந்த விவசாய நிலத்தை வீடு கட்டத் தேர்ந்தெடுக்கின்றனர். அது மட்டுமா? வீட்டில் தேவைக்கு ஓர் ஆழ்குழாய்க் கிணற்றை அமைக்கின்றனர். மிகக் குறைந்த ஆழத்திலேயே தண்ணீர் வந்தாலும், கோடைக்காலத்தில் சிரமப்படக் கூடாது என எண்ணி நூறு மீட்டர் ஆழம்வரை ஆழ்குழாய்க் கிணறு அமைக்கின்றனர். அதில் ஒரு மோட்டாரை வைத்துத் தொட்டியில் தண்ணீரை நிரப்பி, வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சுகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டு அனுபவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் ஊரில் ஓரளவு நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டினால், வீட்டின் பின்புறம் தங்கள் பயன்பாட்டிற்குச் சிறு கிணறு அமைத்துக் கொண்டனர். அதிலும் வாளியால் இரைத்துதான் தண்ணீரைப் பயன்படுத்தினர். தற்போது அதே கிணறுகளில் மோட்டாரைப் பொருத்தித் தண்ணீர்த் தொட்டியில் சேகரித்து நோகாமல் நீரைப் பயன்படுத்துகின்றனர். அந்த காலத்தில் ஒரு கிராமத்தில் 100 வீடு இருந்தால் அவற்றில் 30 வீட்டில்தான் ஆழ்குழாய் கிணறோ, சிறு கிணறோ இருந்தது. தற்போது வீடு கட்டும் முன்னரே ஆழ்குழாய் கிணற்றைத்தான் அமைக்கிறார்கள். அதன் உதவியோடு தான் வீட்டைக் கட்டி முடிக்கின்றனர்.

தற்போது ஒரு தெருவில் 50 வீடுகள் இருந்தால் 50 வீடுகளிலும் மோட்டார் இணைப்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு உள்ளது. இவ்வாறு இருக்கும்போது நிலத்தடி நீர் எப்படிக் குறையாமல் இருக்கும்?

இது மட்டுமா? தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் பல விவசாயிகள் ஆறுகள் கால்வாய்கள் போன்றவற்றிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை விவசாய நிலங்களுக்குப் பாய்ச்சுகின்றனர்.
இதனால் தண்ணீர் ஓட்டம் தடைப்பட்டு ஆறு மற்றும் கால்வாயில் நீர்மட்டம் குறைகிறது. இதனால் ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகிறது. ஏற்றம் மூலம் இறைத்து தண்ணீர் பாய்ச்சினால் நீரோட்டம் தடைபடாது.

அதற்காக நீரைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும். நீரைப் பயன்படுத்தாமல் உயிர்கள் வாழமுடியாது. தேவையில்லாமல் பயன்படுத்துவதை நிறுத்துவோம். நீரை இறைப்பதற்கு மோட்டார் பயன்பாட்டை நிறுத்துவோம். வீடுகளில் ஆழ்துழாய்க் கிணறுகளில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைப்பதை நிறுத்தி அடிபம்பு மூலம் தண்ணிரை இறைப்போம். இதனால் மின்சார தேவையும் குறையும்.

விவசாய நிலங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவோம். பண்டையக் காலத்தில் பல ஏக்கர் நிலம் வைத்தவர்கள் கூட ஏற்றம் மூலம் தண்ணீர் இறைத்து நிலங்களுக்குப் பாய்ச்சினர்.
தற்போது இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருவதால் மாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சாணம் மற்றும் சிறுநீர் போன்றவை இயற்கை உரங்களாகப் பயன்படும்.

நம் உழைப்பால் அடிபம்பில் தண்ணீர் அடித்துப் பயன்படுத்தினால் தண்ணீரை வீணாகச் செலவிட எண்ணம் வராது. அதனால் தண்ணீர் பயன்பாடும் குறையும். அண்மைக்காலமாக தண்ணீர் வசதி இல்லாத கிராமங்களுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்படி பல ஆறுகளிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு நீராதாரத்திலிருந்து ஒரு நாளைக்குப் பல லட்சக் கணக்கான லிட்டர் நீர் மோட்டாரால் உறிஞ்சப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் வற்றாத நீர்நிலைகள் கூட வற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

நமது வருங்காலச் சந்ததி எப்பாடு பட்டால் நமக்கென்ன, நாம் இருந்து பார்க்கவா போகிறோம் என்ற எண்ணம் நமக்கு. இப்படி நமது முன்னோர் நினைத்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாகியிருப்போம்.
மனிதர்களின் ஏகோபித்த விருப்பம் பணம், பகட்டு, புகழ் மட்டுமாகவே உள்ளது. நமது சந்ததிக்குப் பணத்தைச் சேர்த்து வைத்தால் போதும் என்ற எண்ணமும் உள்ளது. பணத்தால் எல்லாவற்றையும் வாங்கலாம் என்பது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை. இதை உணர்ந்து வருங்காலச் சந்ததிக்கு இயற்கையை முழுமையாக விட்டுச்செல்வது நமது தலையாய கடமை.

அதைவிடவும் முக்கியம், இயற்கையைப் பாதுகாக்க இளந் தலைமுறைக்குக் கற்றுக்கொடுப்பது!

எழுதியவர் : (30-Aug-17, 3:10 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 5552

சிறந்த கட்டுரைகள்

மேலே