மானிடம் ஆட்டிவைத்தான்!

ஆழ்கடல் காணாத
-------அதிசய முத்துக்கள்
-------------கவியென அள்ளி வைத்தான்-இந்த
நீள்புவி எங்கினும்
-------சூழ்ந்துள காற்றென
-------------நிரந்தர மாகி விட்டான்!

அந்தமும் ஆதியும்
-------அற்றநற் கண்ணனின்
--------------அடிகளைப் பெற்று விட்டான்-எம்
சிந்தையில் நீங்கிடா
--------விந்தையாய் நிற்குமோர்
---------------மந்திரம் கற்று விட்டான்!

விழியினை இழந்தவர்
--------போல்தினம் அழுதவர்
--------------வாழ்வினை மாற்றி வைத்தான்-தமிழ்
மொழியுள அத்தனை
--------வார்த்தைக ளும்ஞான
---------------விளக்கென ஏற்றி வைத்தான்!

ஆழியும் அலையென
-------அருந்தமிழ்க் கன்னியின்
-------------அணுவெலாம் கலந்து விட்டான்-என்றும்
"வாழிய மாகவி
--------வாழிய" வென்றெவரும்
---------------வாழ்த்திட உயர்ந்து விட்டான்!

ஆண்டவன் படைப்பினில்
-------அழகெனும் யாவிலும்
--------------ஆடியே களித்தி ருந்தான்-இன்று
ஈண்டவன் இலையெனும்
-------குறையினில் வேகவே
---------------எம்மனம் சுழித்து விட்டான்!


தங்கமா தமிழ்மகள்
-------பொங்குமா முகத்திலே
----------------புன்னகை கூட்டி வைத்தான்-எங்கள்
சிங்கமா நெஞ்சினன்
-------சொன்னமா றிற்றையில்
-----------------மானிடம் ஆட்டி வைத்தான்!


(என் குருநாதன் கவியரசு கண்ணதாசனுக்கு
இந்த சீடனின் இதய காணிக்கை)


-----------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (23-Apr-12, 9:06 am)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 220

மேலே