எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கெஜ்ரிவால் சுமக்க போகும் புது அழுக்கு மூட்டை உதயகுமார்...

கெஜ்ரிவால் சுமக்க போகும் புது அழுக்கு மூட்டை உதயகுமார்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தமிழக, 'ஆம் ஆத்மி' கட்சியில், சமீபத்தில் இணைந்தார். ஆனால், அவருடைய செயல்பாடுகளில், பல மர்மங்கள் இருப்பதாகக் கூறி, தமிழக ஆம் ஆத்மிக்குள்ளேயே, திடீர் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து பிரிந்து, அரசியல் பாதையை அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுத்த போது, அனைத்து மாநிலங்களிலும், முக்கிய பிரச்னை களில் போராடி வரும், சிலரை கட்சியில் இணைத்து களமிறங்க திட்டமிட்டார். அதற்காக, 2011ம் ஆண்டே, தமிழகத்திற்கு வந்திருந்த அவர், உதயகுமாரை சந்தித்தார். தமிழகத்தில், ஆம் ஆத்மி கட்சியை, உதய குமார் தலைமையில் வழி நடத்துவது குறித்து தீவிரமாக பேசினார்.

பின், தக்க நேரத்தில் இணைந்து கொள்வதாக கூறிய உதயகுமார், தன் ஆதரவாளரான கிறிஸ்டினா சாமியை, தமிழகத்தில் தலைமை ஏற்க செய்யும்படி பரிந்துரை செய்தார். உதயகுமார் பரிந்துரைப்படி, கிறிஸ்டினா சாமியை, தமிழக ஆம் ஆத்மிக்கு அமைப்பாளராக்கினார். அதனால், இன்று வரையில், உதயகுமார் வழிகாட்டுதலில்தான், கிறிஸ்டினாசாமி கட்சியை நடத்துகிறார். புதிய தலைமையாக பொறுப்பு ஏற்ற, கிறிஸ்டினா சாமியை, யாரென்று கட்சியினருக்கு தெரியாது. அவரது தலைமையிலான, தமிழக ஆம் ஆத்மி கட்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து சென்று சேர்ந்தவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர்; பலர் நீக்கப்பட்டனர்.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், முன் வைத்த கோரிக்கைகளை முன்னிறுத்தியே, அரசியலில் இணைந்ததாக கூறும் உதயகுமார், எதற்காக போராட்டக் குழுவை வழிநடத்தும் பொறுப்பை, பெண்களிடம் ஒப்படைத்து விட்டு விலக வேண்டும். அரசியலில் இணைந்தாலும், போராட்ட செயல்பாடுகளையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டியது தானே. இவரை நம்பி, போராட்டக் குழுவில் இணைந்தவர்களின் நிலையே பரிதாபம். இவர் விலகியதன் மூலம், போராட்டக் குழுவில் மீதமிருப்பவர்களே, போராட்டக் குழு தொடர்பான வழக்குகளை, தாங்கள் மட்டுமே சந்திக்க நேரிடும். அப்படியென்றால், இனி அந்த போராட்டங் களுக்கு வலு இழந்துவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து, அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டதாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனாலும், அவர் இன்னொரு விஷயத்தை யும் முன்வைக்கிறார். அதாவது, கூடங்குளம் அணு உலை பிரச்னையில், ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்பது போல, வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆம் ஆத்மி தரப்பில், இது தொடர்பாக எந்த கருத்தும், இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லிக் கொள்ளும், ஆம் ஆத்மி கட்சிக்காக, உதய குமார் பிரசாரம் செய்யும் பட்சத்தில், ஊழலுக்கு எதிராக பேச வேண்டி வரும். அப்போது, தேர்தல் களத்தில் பிற கட்சித் தலைவர்கள், இவரது அறக்கட்டளை சார்பிலான, ஊழல் கதைகளை வெளியே எடுத்து விடுவார்களே. அதையெல்லாம், உதயகுமாரும், ஆம் ஆத்மியும் எதிர்கொள்ளத் தயாராகி விட்டனவா?

தமிழக ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை, எந்த நோக்கமும் இல்லாமல் செயல்படுகிறது. ஒன்றரை ஆண்டு காலமாகியும், 'லோக் ஆயுக்தா' என்ற முக்கிய கோரிக்கையை தமிழக அரசிடம் முன் வைக்கவில்லை. அதுமட்டுமின்றி, மற்ற மக்கள் பிரச்னைகளுக்காகவும், இதுவரை எந்த போராட்டத்தையும், ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தியதில்லை. 'ஊழலுக்கு எதிராக போராட வருகிறோம்' என்ற ஒற்றை, 'அஜெண்டா'வை வைத்துக் கொண்டு, ஒரு கட்சியை வெகு நாட்களுக்கு அரசியல் களத்தில் கொண்டு செல்ல முடியாது. ஆம் ஆத்மி கட்சி, இப்படித்தான் வளர்ச்சியின்றி திக்கித் திணறி நிற்கின்றது. தமிழக ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் உதயகுமார் முதல்வர் ஆகப் போகிறாரா அல்லது அமைச்சர் ஆகப் போகிறாரா? ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து விட்டதால், தமிழக அரசியலில் உதயகுமாரும் எதுவும் சாதிக்கப் போவதில்லை.

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும் எதுவும் செய்யப் போவதில்லை. ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்த வரையில் உதயகுமார் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய தலைவர் அந்த கட்சியில் இணைந்தாலும், அந்த கட்சி வளராது. இப்படித்தான் பெரிதாக எதையோ சாதிக்கப் போவதாகச் சொல்லி, டில்லியில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாமல், முரட்டுத்தனத்தின் மூலம் போராட்டம், ஆர்ப்பாட்டம் என, மத்திய அரசோடு மோதி மூக்குடைபட்டார். இறுதியில், அதிகாரமே இல்லாமல், ஜன் லோக்பால் மசோதாவை டில்லி சட்டசபையில் கொண்டுவர விழைந்து, தோல்வியடைந்து, அந்த விரக்தியில் ஆட்சியையே இழந்தார். மற்றவர்கள் மீதெல்லாம் குற்றச்சாட்டுகளை வாரி வாரி இறைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், தன் முதுகில் இருக்கும் அழுக்குகளை என்றைக்குத்தான் துடைப்பாரோ? இப்போதைக்கு புதிதாக ஒரு அழுக்காக, உதயகுமார் வேற. என்னாகும் என்று சொல்லத் தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

நாள் : 3-Mar-14, 6:43 pm

மேலே