பொங்கல் சாரல் - 5 ----------------------------- சரியாக மணி...
பொங்கல் சாரல் - 5
-----------------------------
சரியாக மணி 03:00 . நானும் அண்ணனும் வீட்டில் இருந்து கிளம்பி காட்டுப்பகுதி நோக்கி நடந்துக்கொண்டிருந்தோம். கொஞ்சம் தூரம் நடந்த உடன், எங்களுக்கு தெரிந்த முதியவர் ஒருவர் எங்களைப் பார்த்ததும் " சின்னப்பையா , சுந்தரேசா ... எப்போ ஊருல இருந்து வந்திங்க , நல்லா கீரங்கலா " என்று கேட்டார் . " நல்லா இருக்குறோம் தாத்த, பாட்டி நல்லா கீராங்கலா " என்று நானும் அண்ணனும் கேட்டோம். " பாட்டிக்குதான் நடக்க முடியல , காலுல முட்டி தேஞ்சி பூடுசி பா " என்று அந்த தாத்தா சொன்னார். நாங்கள் பாட்டியை பார்க்கச் சென்றோம். பாட்டி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். எங்களை பார்த்ததும் " எமா எமா வாங்கடி வாங்கடி.. எப்போ ஊருல இருந்து வந்திங்க , கிட்ட வாங்க எமா " என்று என்னையும் அண்ணனையும் பக்கத்தில் அழைத்து உட்கார வைத்து, முத்தமிட்டு , திருஷ்டி கழித்தார்கள். பாட்டி பேசிக்கொண்டிருந்த வேறொரு பாட்டியிடம் " இவங்க ஊட்டுல யாரு வந்தாலும் என்ன வந்து பாக்காம போக மாட்டாங்க , அவ்ளோ பாசம் என்மேல " என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் .
எங்கள் கைகளை பிடித்துக் கொண்டு " எமா வாங்க வாங்க ஒருவாய் சாப்டுங்க " என்று அழைத்தார்கள்." இல்ல பாட்டி இப்பதா சாப்டு வந்தோம், பாப்பா நெல்லிக்காய் கேட்ட , அதா பறிக்கலானு காட்டுக்குப் போறோம் " என்று நான் சொன்னேன்." நெல்லிக்காய் எல்லாரும் பெச்சிட்டாங்க, கீழ கிடைக்காது மேலதா போனும் , பாத்து போய்ட்டு வாங்க " என்று அந்த பாட்டிச் சொன்னதும் நாங்க கிளம்பி விட்டோம். காட்டுக்கு செல்லும் வழி நெடுக்க பார்பவரெல்லாம் நலன் விசாரிக்க , நாங்களும் அதற்கு பதில் சொல்ல, இப்படியே காட்டின் அடிப்பகுதி செல்லும் வரை ஒரு மணி நேரம் கழிந்துவிட்டது.
இப்பொழுது மணி 04:00. அண்ணனுக்கு காட்டில் வழி அவ்வளவு தெரியாது. எங்கள் ஊரில் விறகு அடுப்புதான் ( இன்று வரைக்கும் பெரும்பாலோனோர் வீட்டில் விறகு அடுப்புதான் ). அதனால் விறகு கொண்டுவர காட்டுப்பகுதிக்குதான் செல்ல வேண்டும். நானும் அப்பாவும் எப்போதும் காட்டிற்கு செல்வோம். நான் பத்தாம் வகுப்பு முடித்ததிற்கு பிறகு , விறகு வெட்ட நான் தனியாகதான் செல்வேன். மலையின் அனைத்து பகுதியிலும் நான் சுற்றியிருக்கிறேன். அதனால் வழியும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்பொழுது வழியை கண்டுப் பிடிப்பது மிகவும் சிரமம் தான். மலை விருட்சங்களால் அடர்ந்தும், கொடிகளால் பிண்ணியும் காட்சியளிக்கிறது.
நானும் அண்ணனும் மலை மேல் ஏறத்தொடங்கினோம். 25 நிமிடங்கள் தொடர்ந்து இடைவிடாமல் நடந்து பாதி மலையை நெருங்கிவிட்டோம். நெல்லிக்கனி இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்தோம். அவ்விடங்கள் முழுவது ,மஞ்சி புள் ( கிராமப் பகுதியில் கூரை வீடுகளின் , கூரைப் பகுதி அந்த புல்லினால் தான் பிண்ணப்படும்) நிறைந்துள்ளது. மஞ்சி புள் எங்களைவிட உயரமாக இருக்கிறது. அதற்குள் நுழைந்தப் பிறகு சுற்றி இருப்பது தெரியவில்லை. சற்று உயரத்தில் ஒரு நெல்லி மரத்தினைக் கண்டோம். ஆனால் மரத்தினை நெருங்கியப் பிறகுதான் தெரிந்தது. அதில் இருந்த அனைத்து நெல்லிக்கனியும் பறிக்கப்பட்டிருப்பது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏறி செல்கிறோம். நாங்கள் பார்க்கும் ஒவ்வொரு மரத்திலும் நெல்லிக்கனி பறிக்க பட்டே இருக்கிறது.
சரி வேறு வழி இன்றி , எனக்கு தெரிந்த கொஞ்சம் ஆபத்தான இடத்திற்கு செல்லவேண்டிய சூழ்னிலை. அண்ணனிடம் முன்னதாக செல்லிவிட்டேன், " என் கூடவெ வா அண்ணா , எங்கனா வழி தெரியாம போயிட போற " என்று. கிட்ட தட்ட நெல்லிக்கனி நிறைந்த நெல்லி மரத்தை கண்டு பிடிக்கும் போது மணி மாலை 05:30 ஆகிவிட்டது. நான் மரத்தில் ஏறி நெல்லிக்கனியை பறித்தேன். அண்ணன் மலையின் மேல் இருந்து எங்கள் கிராமத்தை புகைப்படம் எடுத்தார் ( அந்த புகைப்படம் மேலே உள்ளது பார்க்கவும் ).
இது குளிர் காலம் என்பதால் 06:00 மணிக்கெல்லாம் இருள் சூழ்ந்துவிடும், வேக வேகமாக நான் நெல்லிக்கனியைப் பறிக்கிறேன். தாத்தா அலைபேசியில் அழைத்து மலையில் இருந்து இறங்கிவிட்டீர்களா ..? என்று கேட்டார். நாங்கள் இன்னும் மலையின் உச்சியிலே இருக்கிறோம் என்று தெரிந்தால், தாத்தாவும் பாட்டியும் பயப்படுவார்கள் என்பதால் இறங்கிவிட்டோம் தாத்தா என்று பொய் சொன்னோம். அரைக் கோணிப்பை நெல்லிக்கனி பறித்தோம். மலையின் உச்சியிலே இருள் வெகுவாக நெருங்கிவிட்டது. இப்போது நாங்கள் எங்கு இருக்கிறோம் என்று உண்மையில் எங்களுக்கு தெரியவில்லை. மஞ்சி புள் எங்களை சூழ்ந்திருப்பதால் வழி தெரியவில்லை.
மலை செங்குத்தாக இருப்பதால் இறங்குவதும் கடினம் தான் , ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வைக்க வேண்டும், கால் இடறிவிட்டால் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மூட்டையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று அண்ணன் வாங்கி கொண்டார். நான் முன்னே இறங்க அண்ணன் என்னை பின் தொடருகிறார். அண்ணனுக்கு வழி தெரியாது. நான் தான் வழி சொல்ல வேண்டும். நாங்கள் மலையில் இருந்து கொஞ்சம் தூரம் இறங்கினோம். மீண்டும் அலைப்பேசியில் அழைப்பு வருகிறது. இம்முறை சென்னையில் இருந்து அம்மா. நான் தான் அழைப்பை ஏற்று மீண்டும் பொய் சொல்கிறேன் " மா மலையில் இருந்து கீழே இறங்கிட்டோம், வீட்டிற்கு போயி பேசுறோம் " என்று சொல்லிவிட்டு அலைப்பேசியை துண்டித்துவிட்டேன். மலையில் இருந்து தரைப்பகுதியை அடைய , எனக்கு தெரிந்த ஒரு குறுக்கு வழி உள்ளது. ஆனால் அண்ணனை அழைத்துக் கொண்டு அந்த வழியில் செல்ல முடியாது. ஏனெனில் அந்த வழியின் இடையில் ஒரு பெரிய பாறை வரும். ஒரு பாறையில் இருந்து வேறொரு பாறைக்கு தாவி , மீண்டும் பயணம் தொடங்க வேண்டும். இருள் சூழ்ந்த நேரம் வேறு..... நான் தனியாக இருந்தால் பிரச்சனை இல்லை. அண்ணனும் கூட இருக்கிறார். அதனால் அந்த வழி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு, வந்த வழியே இறங்கிக் கொண்டிருந்தோம்.
இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் , நாங்கள் வந்த வழியும் தெரியவில்லை. காரணம் இப்பகுதி முழுவதும் நிறைந்துள்ள மஞ்சி புள் தான். நேரம் இப்பொழுது 06:30 இப்போது நாங்கள் மலையின் மேல் பகுதியில் தான் இன்னும் இருக்கிறோம். (மேலே உள்ள ஒரு படத்தில் சிவப்பு மையினால் வட்டமிட்டுள்ளேனே அதுதான் என் தாத்தா வீடு , மற்றொரு புகைப்படத்தில் பர்வதமலையும் தெரியும் பாருங்கள்)
தொடரும் ....
-உதயா