சிந்தனை செய்மனமே-27 உங்களுக்கும் எழுத ஆசையா..? எழுதவேண்டும் என...
சிந்தனை செய்மனமே-27
உங்களுக்கும் எழுத ஆசையா..?
எழுதவேண்டும் என ஆசைப்படுபவர்களுக்காக, இங்கே பத்துவிதத் தகவல்களையும், எழுத நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
இன்றைக்கு, இணைய தளத்தில் உலா வருபவர்கள் பலர் படிப்பதோடு நின்றுவிடாமல், எழுதவும் செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்மணிகள் எழுதுகிறார்கள், வேலைக்குச் செல்லும் சிலர் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். சிலரது எழுத்துக்கள் சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது.
“நன்றாகப் பாடுவார்கள் ஆனால் கச்சேரி மேடை கிடைக்காது”..
“நன்றாகக் காதலிப்பார்கள்..அவர்களுக்கு கல்யாணமேடை அமையாது”
என்றொரு வசனம், 1974 ல் வெளிவந்த “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தில் வரும்.
இதைப்போல நன்றாக எழுதுவார்கள், அவர்களுக்கு பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு கிட்டாது.
இந்தக் குறையைப் போக்கத்தான், எழுதுவதற்கென்றே, இலவசமாக இயங்கும் எழுத்து தளம் மற்றும் எண்ணற்ற இணைய தளங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவதொன்றில் நீங்கள் எழுதத் தொடங்கலாம். எழுத்துத் திறனை வளர்த்துக் கொள்ள, மின் இதழ்கள் பல போட்டிகளை அவ்வப்போது அறிவிக்கின்றன. கட்டுரை, கவிதை, சிந்தனை, எண்ணம் போன்ற பல துறைகளில், எதில் உங்களுக்கு அதிக ஈடுபாடு என்பதை புரிந்துகொண்டு அந்தத் துறையில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலில், எழுதுவதற்கு ஆசைப்படுபவர்கள், பிறரது எழுத்துக்களையும் பொறுமையாக, சகிப்புத் தன்மையுடன் படிக்கப் பழகவேண்டும். பிறகு அதன் சாராம்சங்களை நினைவில் கொள்ளவேண்டும். பிறரது படைப்புகளைப் படிக்கும் போதுதான், நாமும் எழுத வேண்டும் என்கிற உந்துதல் பிறக்கும்.
இரண்டாவது, இன்றைக்குள் எதைப்பற்றியாவது ஒரு பத்துவரிகளாவது எழுதிவிடவேண்டும் என்கிற தீவிர தீப்பொறி மனதுக்குள் பற்றவேண்டும். அப்போதுதான் இரண்டு வரியாவது அன்றைக்குள் எழுதமுடியும்.
மூன்றாவது, எவ்வளவு முடியுமே அளவில்லாமல் புத்தகங்களைப் படியுங்கள், படித்தால் மட்டும் போதாது, உங்களுக்கு எது தேவையோ, அதைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் நூறு பக்கங்கள் படித்தால்தான், உங்களால் பத்து வார்த்தைகள் எழுதமுடியும்.
நான்காவது, எதைப்பற்றி எழுத நினைக்கிறோமோ, அதன் தனித்துவத்தை உள் வாங்கிக்கொண்டு, தனக்கு உதித்ததையெல்லாம் அப்படியே எழுதவேண்டும், பிறகு மறுபடி படித்துப் பார்த்து பிழை திருத்தவேண்டும்.
ஐந்தாவது, எழுதுபவருக்கு மட்டும் எங்கிருந்து நேரம் கிடைக்கிறது. நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை, நேரம் ஒதுக்கப் படுகிறது என்றே சொல்லலாம். இருபத்தி நான்கு மணி நேரத்தில், எழுத ஆசையுள்ளவர்களுக்கு, ஒரு அரைமணிநேரமாவது கிடைக்காமலா போய்விடும். நேரம் ஒதுக்குவது மிக அவசியம்.
ஆறாவது, எக்காரணத்தைக் கொண்டும் பிறரது எழுத்துக்களைக் காப்பி அடிக்கக்கூடாது, மாறாக அதிலிருக்கும் கருத்துக்களை தங்கள் கருத்தோடு ஒப்பிட்டு, தனக்குறிய பாணியில் தனித்தன்மையுடன் எழுதவேண்டும்.
ஏழாவது, எழுத முற்படுமுன், நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்களோ, அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருக்க வேண்டும். கருவிலிருந்து வழுவி வேற்றுச் சிந்தனையில் இறங்கிவிட்டால், எடுத்துக் கொண்ட தலைப்பு முற்றுப்பெறாது.
எட்டாவது, எழுதி முடித்தபின் எத்தனைமுறை உங்களால் முடியுமோ, அத்தனை முறை மீண்டும் மீண்டும் அதையே படித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் படிக்கும்போதும் புதியபுதிய சிந்தனைகள் தோன்றி, எழுத்தில் மெருகேறும்.
ஒன்பதாவது, அதிமுக்கியமானது, எடுத்தவுடனேயே, பிறரைப் போல் எழுதவேண்டும் என நினைக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக பிறரது படைப்புகளுக்கு பதில் எழுதிப் பழகவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்களுக்கே அதில் பூரண திருப்தி ஏற்பட்டவுடன் எழுதுகின்ற சிந்தனை தானாகவே உங்களுக்கு வந்து சேரும். உதாரணத்துக்கு, ஐம்பது படைப்புகளை நான் எழுதியிருந்தால், பிறரது படைப்புகளுக்கு எழுதிய பதில் இருநூற்று ஐம்பதாக இருக்கிறது. இதில் வருத்தப் படக்கூடிய விஷயம் என்னவென்றால், பொதுவாக ஒரு எழுத்தாளர் இன்னொருவருக்கு பதில் எழுத முன்வரமாட்டார்கள், ஏனென்றால் அவரது மனநிலை அதற்கு எளிதில் இடம்கொடாது. இதுவே இன்றைய உண்மை நிலை. பாராட்டுகின்ற மனப்பக்குவம் எளிதில் யாருக்கும் வந்துவிடாது.
பத்தாவது, பிறரது படைப்புகளுக்கு பதில் எழுதும்போது நேர்மறை எண்ணத்துடன் எழுதப் பழகவேண்டும், எக்காரணம் கொண்டும் குறைகளை மனதில் இறுத்திக்கொண்டு பதில் எழுதப் பழகினால், நீங்கள் எழுதுகின்ற எழுத்தெல்லாம், படிக்கின்ற ஏனையோருக்கும் குறையாகவே தோன்றலாம்.
இப்படி, எழுதுவதற்காக சிலமணி நேரம் செலவிட்டு, சிந்தனையெல்லாம் ஒன்று திரட்டி, இரவு பகல் என்று பாராமல், எந்நேரமும் இணையத்தில் எங்கோ ஒரு மூலையில் பதிவேற்றம் செய்து கொண்டிருப்பவரை, நிச்சயம் பாராட்ட வேண்டும்.
நடைமுறையில் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தில், நாம் நம் கைக்குள்ளே அனைத்தையும் வைத்துக் கொண்டு தேவைப்படும்போது உபயோகப் படுத்தி வருகிறோம்.
அதிலும் வாட்ஸ் அப் வந்த பிறகு எளிதில் எல்லாவற்றையும் படித்து விடுகிறோம், ஆனால் என்றைக்காவது ஒருமுறையாவது இதை எழுதியவர் யாராக இருக்க முடியும்.? என்று இதுவரை சிந்தித்திருக்கிறோமா.? தலையையும் வாலையும் வெட்டி விட்டு எங்கிருந்தோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் ஒட்டி உலாவ விடுபவர்களே இன்றைக்கு அதிகம். எழுதியவர் பெயரை மறைத்து பிறருக்கு அனுப்புவதில் அலாதியான இன்பம் பலருக்கு, ஆனால் எழுதியவரே அதைப் படிக்கும் போதுதான் அந்த வேதனையை உணரமுடியும், படிப்பவர்களுக்கு அது பொருந்தாது, ஏனென்றால், தமக்கு வந்ததை பிறருக்கு அனுப்புவதிலேயே அவரது கவனம் இருக்கும்.
தினமும், இரவு உறங்கப் போகுமுன் உங்கள் சிந்தனைகளை எங்காவது பதிவு செய்யுங்கள், அது நிச்சயமாக பிறருக்கு உதவும்.
இப்பொழுதே உங்களது நேர்மறை எண்ணங்களை இங்கே பதிலாகப் பதிவு செய்ய முயற்சியுங்கள், பிறருக்கு உதவும்.
நன்றி,
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி
நன்றி....படம்:: கூகிள் இமேஜ்