லண்டாய்
(Tamil Nool / Book Vimarsanam)
லண்டாய் விமர்சனம். Tamil Books Review
லண்டாய் - மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்பு
காலங்காலமாக உலகம் முழுவதும் பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்களில் முதன்மையாகத் திகழ்வது மதம் மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள்தாம். அவ்வகையான கட்டுப்பாட்டுகளிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்களுக்குப் பாதைகளாக அமைவதில் கலைகளுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது.
அக்கலைகளில் பிராதனமாகவும் முதன்மையாகவும் கருதப்படும் கவிதைகளுக்கென இருக்கும் மொழிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது உணர்வு மொழிதான். அம்மொழியின் வாயிலாக வெளிப்பட்டு எழுதப்படும் வார்த்தைகள் படிப்பவர்களின் உணர்வுச் சிந்தனைகளைக் கலைத்து விட்டுச் செல்வதுதான் கவிதைகளுக்கான வெற்றியாக அமைந்திடும். அவ்வாறன உணர்வுகளைப் பெற்றுத் தமிழகத்திற்கும், தமிழ் கவிதைச் சூழலுக்கும் புதிதாக அறிமுகமாகியிருக்கும் மொழிப் பெயர்ப்புக் கவிதைகள் மற்றும் பாடல்கள்தான் “லண்டாய்”.
அனைத்து மதங்களும் பெண்களுக்கெதிரான ஒன்றாகவே இருந்து வந்தாலும், மதத்தை மையமாக வைத்து ஆட்சி நடத்தும் நாடுகளில் மிக அதிகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. அவ்வகையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிய பெண்களால் இயற்றப்படுபவைதான் இந்த லண்டாய் கவிதைகள்.
இங்கு முதன்முதலில் அறிமுகமாகியிருக்கும் இந்தப் பஷ்தூன் சொல்லுக்கான அர்த்தத்தைத் தெரிந்துக் கொள்ளும்போது சற்று வியப்பாகவே தெரிகிறது. ஆனால் அதனைத் தெரிவிப்பதற்கு முன்னால், ஆப்கானிய நில அமைப்பு வரலாறு மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகளைச் சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும்.
அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகப் புத்தகத்தின் முதல் பகுதில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் துவங்கிச் சமகாலத்தில் மேற்கத்திய ஆட்சியாளர்களின் பிடியிலிருக்கும் ஆப்கானின் நில அமைப்பு மற்றும் மக்களின் வாழ்க்கை முறையையும் தெளிவுப்படுத்த முற்பட்டுப் படிப்பவர்கள் அந்த வரலாற்றை மேலும் ஆராய வேண்டும் என்ற முயற்சிக்கான தூண்டுதலை விதைக்கிறார் லண்டாயின் அறிமுகவாளர் கவிஞர்.ச.விஜயலட்சுமி.
மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்(பு)பாய் வெளிவந்திருக்கும் இந்த லண்டாய்கள் முழுவதும் இஸ்லாம் மதத்திலிருக்கும் அடக்கு முறைகள் மற்றும் உடல் மனம் என அனைத்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆப்கானிய பெண்கள், அவ்வடிமைத் தனத்தை உடைத்தேரிப்பதற்காகத் தங்களது துயரங்களை உலகிற்குப் பதிய வைக்கும் முதல் முயற்சியே இவை.
இவற்றை வாசிக்கும் போது நம் நாட்டில் பெண்களால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களுக்கான துவக்கங்களும் இப்படித்தான் மிகப்பெரிய துயரங்களின் தொகுப்பாக இருந்திருக்கும் என்று தெளிவாகப் புலப்படுகிறது. அவற்றை இணைக்கும் விதமாகத்தான் இன்றளவும் நமது கிராமங்களில் “என் துயரை எந்தப் பாட்டால் பாடுவது” என்ற வார்த்தை வயதானப் பெண்களால் பேசப்பட்டு வருவது நமது நாட்டுப்புறப் பாடல்களின் அறிமுக நாட்களின் அடையாளமாய்த் தெரிகிறது.
“தந்தையே! முதியவன் ஒருவனுக்கு என்னை விற்றுவிட்டாய்
நான் உன் மகளாய் இருந்ததற்காகக் கடவுள் உன் வீட்டை அழிப்பார்.”
“கிழவனோடு கலவிச் செய்வது,கரும்புள்ளிகளைக் கொண்ட நோயுற்று வற்றிய மக்காச்சோளத்தைப் புணர்வது போல”
“சகோதரிகள் கூடியிருக்கையில் சகோதரரின் புகழ்பாடுகிறார்கள்
சகோதரர்கள் கூடியிருந்தால் சகோதரிகளை மாற்றானிடம் விற்கிறார்கள்.”
ஜப்பானிய ஹைக்கூவை போன்ற இந்த லண்டாய் வரிகள் ஆப்கான் போன்ற நாடுகளில் வெளிப்படையாக வெளி வருவது ஆபத்தான விசயமானதாக இருந்தாலும், அவற்றையெல்லாம் வெளிக் கொண்டுவருவதற்கான ரகசிய இலக்கிய அமைப்பாகச் செயல்படும் “மிர்மன் பஹீர்” என்ற அமைப்பைப் பற்றிய அறிமுகத்தையும் செய்திருக்கிறார் கவிஞர் ச.விஜயலட்சுமி.
தாலிபான்களின் பிடியிலிருந்து மெல்ல மேற்கத்திய ஆக்கிரமிப்பின் கீழ் வாழப் பழகிக் கொண்டிருக்கும் மக்களிடம் உள்ளப் பழமையான மதக் கலாசார ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இம்மாதிரியான சூழலில் பெண்களின் துயரங்களையும் அவர்களது செயல் பாடுகளையும் மிகவும் ரகசியமான முறையில் தொலைபேசி உரையாடல்களின் மூலமும் சேகரித்தும் ரகசிய இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதன் மூலம் பெண்கல்வி மற்றும் பெண்களின் படைப்புகளையும் சேகரித்துக் கொண்டிருக்கும் மீர்மன் பஹீர் அமைப்பும், அதில் பங்குப் பெற்று லண்டாய் கவிதை அல்லது பாடல் வாசிக்கும் பெண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அடக்குமுறைகள் என அனைத்தையும் கட்டுரை வடிவில் வாசிக்கும் போது என்றைக்குமே மதங்களும் கலாசாரக் காவலர்களும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாது சமூகச் சமநிலை வாழ்விற்கும் எதிராகே செயல் பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தெளிவு படிதியிருக்கிறது மிர்மன் பகிர் பற்றிய கட்டுரை.
மேலும் அங்குள்ள பெண்கள் தங்களுக்காகப் தங்களுக்குள்ளே பாடிக்கொண்டிருக்கும் பாடல்களின் வரிகளில் உள்ள துயர் மிகு வார்த்தைகள் அனைத்தும் தங்களது அடிமைதனத்திலிருந்து வெளிவரத் துடிக்கும் உலகிலுள்ள பெரும்பான்மைப் பெண்களின் குரலாகவே ஓலிக்கிறது.
லண்டாய் கவிதைகளை வாசித்து முடித்தபின் ஏற்படும் இருவேறு எண்ணங்களில் முதன்மையாகப்படுவது ஹைக்கூ கவிதைகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அர்த்தமற்ற அபத்த நிலையை நம்மூர் கிறுக்கல் கவிதைகார்கள் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதும்.எல்லா மொழிப் பெயர்புப் புத்தகங்களிலும் இருக்கும் மொழிப்பெயர்பாளர்ச் சிந்தனைகள் இடையில் தெளிவாகத் தெரிவது போல் லண்டாயிலும் கவிஞர் ச.விஜயலட்சுமியின் சிந்தனைகள் ஆங்காங்கே வெளிப்படுவது இயல்பாகவே தெரிந்தாலும் படிப்பவர்களை மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்பு போன்றுதான் இருக்கிறது லண்டாய்.
#இனியன்
நூல் : லண்டாய்
வெளியீடு : தடாகம்
விலை :ரூ.120/-