ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?

(Tamil Nool / Book Vimarsanam)

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா? விமர்சனம். Tamil Books Review
சமீபத்தில் நான் படித்தது

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?
சேகர் சுவாமி

“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் - அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

“ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்” என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. “இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம்” என்று இன்னொரு நாளேடு எழுதியது.

இயற்கையான எதிர்வினை

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தவர்களிடமிருந்து முலாயமுக்கு வந்த கண்டனங்களை இயற்கையான எதிர்வினையாகப் பார்க்க முடிகிறது. ‘தூதுவன் கொண்டு வந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றதைப் போல’ ஆகிவிட்டது அவர்களுடைய செயல். உலகத்தின் வளர்ந்த நாடுகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால், முலாயம் சிங் சொன்னதுதான் சரி என்ற உண்மை உறைக்கும்.

சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற சில நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றிருப்பது புலனாகும். ஆங்கிலத்தை அவர்கள் சர்வதேச உறவுக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது வெறும் பிதற்றல். உலக நாடுகளின் அனுபவங்களோடு பார்க்கும்போது, ஆங்கில ஆதரவாளர்களின் வாதம் தோற்றுவிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரிந்தவர்கள் - அப்படிப் பேச முடியாதவர்களைவிட - தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் திரிகின்றனர்.

இதுவும் ஒரு வகை வெறிதான். ஆங்கிலம் தெரிந்தவர்களால் இன்றளவும் ஊக்குவிக்கப்படுகிறது இந்த மொழிவெறி. இது இந்திய சமுதாயத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டது. தாய்மொழியில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடிந்த பெரும்பான்மையானவர்கள் இந்தச் சிறுபான்மை ‘ஆங்கில அறிவாளி’களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு இதனால் அளவில்லாத கோபமும் ஏற்படுகிறது.

சொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்!

இந்த மொழிவெறியால் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக ஏற்படுகிற பாதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும்கூட இந்த மொழிவெறிதான்.

இனவெறி என்பது வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. பெரும்பான்மைச் சமூகமான வெள்ளையர்கள், சிறுபான்மை கருப்பினத்தவர்களை வெறுத்தார்கள். இதன் எதிர்வடிவம்தான் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினர், அந்த மொழி தெரியாத பிற இந்தியர்களைத் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுவும்.

எந்த மொழி விருப்பமானது?

நாட்டின் முதல் எட்டு பெருநகரங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் விகிதம் பார்த்தால் சராசரியாக 2:1 என்று இருக்கிறது. அதே டெல்லியில் 1:1, புணே 7.5:1, அகமதாபாதில் 11:1 என்றிருக்கிறது.

பெருநகரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மாநில மொழிகளே அதிகம் விரும்பப்படுகின்றன, 12:1. சென்னையில் அது 7:1. அகமதாபாதில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கின்றனர்.

ஆங்கிலம் சிறுபான்மையே

அதற்காக, முலாயம் கோரியபடி ஆங்கிலத்துக்குத் தடை விதிப்பது சரியாகிவிடாது. நாடாளுமன்றம் போன்ற பொது அரங்குகளில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தவிர்க்கப்படும் ‘மொழிஒதுக்கல்’ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆங்கில ஆதிக்கம்

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே.

தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.

தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.

ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.

தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.

இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.

ஆங்கிலம் விளைவித்த கேடு

இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.

இந்தியா செய்திருக்க வேண்டியது

ஜப்பான், ஜெர்மனி, கொரியா போல கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ‘சரளமாக ஆங்கிலம் பேச வராதா?’ என்று வாயில் பிளாஸ்திரி போட்டு விளம்பரம் செய்து கேலி செய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் கூனிக் குறுகி, இரண்டாம்தரக் குடிமக்கள் போல, அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் எதிரில் கைகட்டிச் சேவகம் செய்கின்றனர்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதி பேசும் அரசியல் தலைவர்கள், முதலில் ‘ஆங்கில மாயை’யை உடைக்க முன்வர வேண்டும். தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் கற்றுத்தரப்பட்டால், ஏராளமான மாணவர்கள் எளிதாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். மொழிவழியில் முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் களம்காண எந்த அரசியல் கட்சியாவது தயாராக இருக்கிறதா?

சேர்த்தவர் : இஸ்மாயில்
நாள் : 3-Apr-14, 2:36 pm

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா? தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே