அலகுகளால் செதுக்கிய கூடு -விமர்சனம்காகித கூட்டில் கவிதை ஆயுதம்நான் மாவோ அல்ல

(Tamil Nool / Book Vimarsanam)

அலகுகளால் செதுக்கிய கூடு -விமர்சனம்காகித கூட்டில் கவிதை ஆயுதம்நான் மாவோ அல்ல விமர்சனம். Tamil Books Review
அலகுகளால் செதுக்கிய கூடு...... கூடுகளால் செதுக்கிய அழகு.....செதுக்கிய அழகு கூடு.......... கூடு செதுக்கிய அழகு.......

இப்படித்தான் எப்படி படித்தாலும்...அது கவிதையில் ஆரம்பித்து கவிதையில் முடிகிறது...... அட்டைப் படம் உட்பட... ஒருமுறை, இருமுறை, அட.. இன்றோடு.... நான்காவது முறை படித்து விட்டேன்.... படிக்க படிக்க எழுதிக் கொண்டிருக்கிறேன்.... எழுதும் இடைவெளியில் படித்துக் கொண்டிருக்கிறேன்....

எது தொடக்கம்... என்று கேட்கும் முன்னரே... கடைசி பக்கம் வந்து நிற்கும் கண்களை எப்படி கட்டி வைப்பது... அல்லது எதற்கு கட்டி வைக்க வேண்டும்....? அதுவும் சில வரிகளில் கவனம் கலைத்து கட்டி போடும் வல்லமையும் நடக்கத்தான் செய்தது.... இங்கே கலைப்பது என்பது.... கூடு விட்டு கூடு பாய வைப்பது...சரி கூடு விட்டு பாய்வதற்கு கவனம் எப்படி சிதறுவது...... என்று கேட்பது புரிகிறது...... கவிதைக்கும் காதலுக்கும் எல்லாமே மாற்று சிந்தனை தான்.. மாற்று வலி தான்...அலகுகளால் செதுக்கிய கூடு...... கூடுகளால் செதுக்கிய அழகு.....செதுக்கிய அழகு கூடு.......... கூடு செதுக்கிய அழகு.......


வரிகளின் தேன்துளி...... பத்திகளின் பவளம்.... ஒவ்வொரு கவிதையும் முடியும் போது ஆரம்பிக்கிறது புது உலகத்தை என்பது தான் இங்கு சுவாரஷ்யம்...

மனம் காதல் என்கிறது..... புத்தி கடவுள் என்கிறது....(இன்னும் இரு முறை காதலி என்கிறது.. மனமும் புத்தியும்....) துபாய் தேவா சுப்பையாவின் வரிகளில் கடந்து விட்ட காதலியை மீட்டும் சக்தி இருப்பதை உணரும் தருணத்தில் கன்னம் எட்டிப் பார்க்கும் கண்ணீரை... வேண்டுமென்றே தவற விடத்தான் தோன்றுகிறது அவளின் நினைவுகளை மீட்டெடுத்த வீணையாய்....

கனவுகளை சிதைப்பது உங்களுக்கு சாதாரணம் என்ற ஜிப்ரியின் வரிகளில் ரணத்தை உணர்ந்த தருணம்.... மீட்டெடுக்க முடிந்த பிரிவு.... அல்லது.. பிரிவின் வலியின் உணர்ந்த கனவு....கனவுகளை பிரியும் தருணத்தை உணரந்ததுண்டா.... தோழர்களே...... அது கடிவாளம் கடந்த காற்றாற்றின் கைப்பிடி சுவர் உடையும் தருணம்.... சாவதே மேல்... அல்லது அழகு.... மரணம் ரணமாகி போகாத காதலியின் உடன் மரணிக்கும் பொழுதுகளில் காகம் மீட்டும் தந்தி கம்பிகளின் சுகமான ராகம்.. மென்மையின் ஓவியம்....

முத்தங்களில் முத்தம்... எப்படி இருக்கும்.. அதுவும் முத்தமாகவே இருக்கும்..... அல்லது முத்தங்களின் சத்தமாகவே இருக்கும்.... அல்லது சத்தங்களின் யுத்தமாகவே இருக்கும்....தேவதைக்கு தரும் முத்தமே.... காலச் சிறந்த முத்தமாக இருக்க முடியும் என்ற யோசனையில்... கனவில் வந்து தரும் முத்தம்... பிரேம பிரபாவின் கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்பதாக விரியும் பக்கங்கள் சென்று சேரும் இடம் அழகின் கூடு.... அல்லது கூட்டின் உலகு....

படிக்கும் போதே கடவுளாகி போகும் வல்லமை எனக்கு தரும் வரியை ரமேஷலாம் தருவதில் வியப்பென்ன என்று யோசிக்கிறேன்.... கடவுள் காண்பவரை எல்லாம் கடவுளாக்கி போவதில் என்ன வியப்பு என்று யோசிக்கும் நிமிடம்...யாரோ அளிக்கும் காதலில் நீண்டு கொண்டு இருக்கிறது உரையிலிருந்து நீளும் ஒருவருக்கான கத்தி.... அல்லது அவளின் கண்கள்.. இரண்டும் ஒன்றே என்று சொல்லும் வன்மம் எனது.. அல்லது உமது...

சரவணாவின் மாமரத்து காத்தோட எங்க மாரி மாரி ஒண்ணு பாட்டு... நிறைஞ்சி நிக்கும் மனசெல்லாம்.... அத்த மக கொலுசு சத்தம் பின்னிரவு நிலவோட கண்ணு முழுச்சு கதறி துடிக்கும்..... காதலிச்ச அத்த மகளை விட்டு வாழ்ந்து பாக்கும் வாழ்க்கை, அது வாழ்க்கை இல்லை.... கல்லறை... ஓங்கார அழுகையில உசுரு கரையும் உன்னதம்....(காதலித்து பார்... கம்மாகரை கதவுகளை கடக்க முடியாத கவலையோட நீ செத்தும் வாழ்ந்துருப்ப..) காதலோட கிராமத்து மண்ணும் கிராமத்தோட காதல் கண்ணும்... காணும் காட்சியில.... மாடு பூட்டி போகும் வார்த்தை.... யாருமற்ற அனாதையா... போக போக... உயிர் கரைய.. அட போங்கடா.... அது சொர்க்கம்....மற்றதெல்லாம் விக்கும்...

தமிழ் மொழி என்றொரு கனவுக்குள் கடத்தி செல்லும் வீரத்தமிழன்.... தோழர் நிலா... மதுவினில் வீரம் விழுகின்றது..... என்கிறார்... என்ன செய்ய.. வேறு எதுவினில் வீரம் விழ.... (அல்லது எழ) அப்படி விழுந்தாலும் கறுப்பாகும் நகம் சுகப் படுமோ....? அல்லது... விடப் படுமோ !...நான் கனவென்பது, சுலபம் அல்ல... கனவே பெரியது..... கனவைத் தாண்டியவன் கரையேறுகிறான் என்பது என் மொழி.... அது செம் மொழி என்றும் பக்கத்துக்கு வீட்டு தாத்தா கதறுவது ஜன்னல் அடைத்தும் கேட்கிறது.. என்ன செய்ய தமிழன் ஆயிற்றே.... அதுவும் பச்சை தமிழன்....குற்றம் குற்றமே ...... தமிழன் சொன்னால் அது வாளின் கூற்று...(காலம் வரும்.... குத்திக் கிழிக்க.. அல்லது கிழித்து குத்த)

புது புது அர்த்தங்களில்.... என்னை திக்கு முக்காட செய்த தோழன்.... கலை.... இவன்.. கலை அல்ல...காவியங்களின் கவலை..... இவன் மட்டுமல்ல .. இவன் வரி கூட வலிகள்...விட்டு பாருங்கள்.....தலை எடுக்கும் காகிதம்.. இவன் வரி எங்கும்.. அல்லது.. புலி பதுங்கும்.. ஊரில்.. இவன் வலி எங்கும்....என்ன செய்ய.... நீ, நான், அவன், இவன்... என்று எல்லாரும் ஏமாற்றுகிறோம் இவனை...யாருமற்ற வேளையில்.... அழுது விட்டு தேகம் தணிக்கிறேன்.... விடியலை எத்திசையில் பார்த்தாலும், முகம் வாடித் தவிப்பவனுக்கு... வெறும் வார்த்தைகளை தருவதில் நாம்... சுயம் இழந்தவர்கள் ..ஒன்று ஒப்புக் கொள்ளுங்கள்.. அல்லது என்னை கொல்லுங்கள்....

சபித்தாலும் சாதனையே...... தேநீர் கடையெங்கும்... மொய்க்கும் ஈக்களை... காட்சி பொருளாக்குவதில் .. வட்டிக்காரன் விழி கொண்ட சிந்தா........ ச்சிந்தா (வெற்றி விழா வில்லன் போல ) ஊதா கலர் ரிப்பனை கடந்து, நஞ்சுண்ட உழவனின் உதடு தேடும் உண்மையின் உருவமாய், தோள் கொண்ட வானவில்லில் நெளியும் நரம்பு புடைக்க, சிவப்பை தெளிக்கிறார்..... தீக்குச்சி, யாராய் இருப்பதில்தான் எங்கும் எப்போதும் வலி... வலி கடந்த பக்கங்களை மொழியில் கடத்தும் வியூகம், இவரின் வழியெங்கும்.. வழியெங்கும் விழுந்து கிடக்கும் கண்களில் இவர் மொழியெங்கும்...

அரவாணி அக்கா, இருட்டு தேசத்தின் பிள்ளை என்பதை மரங்கொத்தி சாராய மனிதனுக்கு என்பதை மாற்றி, சவுக்கெடுத்து அடித்த தமிழின் தாசன்.....எழுதித் தொலைத்ததில், கிடைத்த காகிதம், காகிதம், வெற்றுப் பக்கமல்ல.. வீரியங்களின் விதை.. எல்லாம் கடந்த பின், எல்லை கடக்க விடா அப்பாவிற்கு, எல்லாமும் தவறாகின் எல்லையும் தவறாகும் என்பது இல்லை.. எல்லையாவது.... சரியாகும். ஒரு பிள்ளையாவது என் வழியாகும் என்பதிலே, தீரவே முடியாத தமிழ்; தலை நீட்டி வாழ்ந்து கிடப்பதை, வாழ்த்துவதே வரிகளை கொண்டாடும் நமது வேலை...

முப்புள்ளி ஆச்சரிய குறி என்று இவர் சொல்ல.... இவரே ஆச்சரிய குறியாகி போனது, கவிதை படிக்க படிக்க....தமிழ் சேலை உடுத்தி நின்ற நம் தாவணிப் பெண்... கவிதை மலர் சூடுகையில்... கற்பிழக்கும் கண்கள்.. அல்லது உதடுகள்... பார்த்து படிக்க, என்பது முறை...) (தவறுதலும் கூட..) (அதுவும் கவிதை...) யோசிப்பவருக்கு அது புது கவிதை) (be relax)(இன்னும் யோசிப்பவருக்கு ஒரு சிரிப்பு) பெயரைக் கொஞ்சம் மாற்றினால் என்ன.... வினோத கண்ணன் - தவறென்பது யாதனில் இலக்கணங்கள் இல்லா வியாக்கியானங்கள்.... அல்லது வாடகை தாய்களின் மேல் கொண்ட தனிப் பாசம்.....

எனக்கு பிடித்த பறவை.... இவரருக்கும் பிடிப்பது.. எனக்குள் பொறாமை.... தீ எரிய எரிய....எரிவது உன் வேலை... எரிப்பது என் சிறகு என்று பறந்து கொண்டே திரியும் இவரின்.. வானமெங்கும் பூக்குளியல்... அது துளி வீரனாவதில்... படிக்கும் இவன் வரியெங்கும் தாகம் தணிக்கும் மகரந்தமாகி போவது தான் விந்தை.... விந்தைகளின் கைளில் அகமது.... அகமதுவின் விரல்களில் .... நம் விழிகள்....எதிலும் தொடங்கும் எதுவும் அம்மா என்றே சாகிறது.......... என்பதாக இவர் ஜன்னலில் பட்டு தெறிக்கும் துளியென நம் விழிகள்.... விழிகள் சுமப்பது எதுவும்.......?(விடியல் வரை இல்லை)

எறும்புகளின் உலகத்தில் யானைகளின் வாழ்க்கை எத்தனை சிரமம்.....சூத்திரங்கள் கடந்த பின்னும், படிக்க எத்தனை யாத்திரைகள் மனிதன் வாசலெங்கும்...? மரம் பேசும் கதையில் கஷ்டப்படும் மனது, மரம் தாண்டியது.... அது மௌனம் வேண்டியது..... நூறு வயதில்.. மரணம் சாகிறது......கதை பேசுவது மரம் என்றாலும்.... மனிதன் ஊமையாவது.. காலத்தின் பிடி.. அது யுத்தம் கண்ட பூமியின் புத்தனின் தவம்....சுசீந்திரனின் விம்மும் நெஞ்சம்.... சுடுகிறது நிலவை..... (நிலவை மட்டுமல்ல)

பிந்தி வரும் விடைகளில் வினாத் தெளியும் முன் வரும் மரணம் யாரின் கடைக் கண் பார்வை....? காற்றின் கதை என்னவாக இருக்கும் என்பதோடு... பாதை மூடிய சாதியை கொளுத்தும் மனங்கள் இணைக்கும் அகனின் பாதையெங்கும்..... முள்ளும் மலரும்.......

அதில் என் கூழாங்கற்களும் உலவும்... கருப்பொருள் தேடி.. அல்லது எறும்பின் சாலையின் ரகசிய குறியீடு தேடி......

புத்தகம் பற்றிய தகவல்கள்.

பக்கம் :200
சமர்ப்பணம்: எழுத்து. காம் இணையதளத்திற்கு.
விலை. Rs 140/-
முதல் பதிப்பு : 2014
கிடைக்கும் முகவரி:
திரு. அமிர்தகணேசன்(அகன்)
9.நான்காம் தளம்,
பொன் அன்பாலயா அடுக்ககம்,
கோட்டுப் பாளையம்
இலாசுபேட்டை
புதுச்சேரி -605 008
9443360007



கவிஜி

சேர்த்தவர் : கவிஜி
நாள் : 3-Apr-14, 1:03 am

அலகுகளால் செதுக்கிய கூடு -விமர்சனம்காகித கூட்டில் கவிதை ஆயுதம்நான் மாவோ அல்ல தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே