ஆவாரங்காடு- நாவல் -ஆசிரியர்-ரத்தினமூர்த்தி
(Tamil Nool / Book Vimarsanam)
ஆவாரங்காடு- நாவல் -ஆசிரியர்-ரத்தினமூர்த்தி விமர்சனம். Tamil Books Review
ஆவாரங்காடு எனும் வண்ணத் தோட்டம்- பொள்ளாச்சி அபி
எழுத்து தளத்தில் கவிஞராக,கருத்தாளராக,நல்ல மனிதராக நாம் ஏற்கனவே அறிந்த நான்கு கவிதைத் தொகுப்புகளை வழங்கியுள்ள தோழர்.ரத்தினமூர்த்தி,,“ஆவாரங்காடு” எனும் நாவலின் மூலம்,நாவலாசிரியராகவும் அதிவேகப் பாய்ச்சல் காட்டியுள்ளார்.
திருப்பூரையடுத்துள்ள நாச்சிபாளையத்தை களமாகக் கொண்டு இயங்கும் அவரது நாவல்,அப்பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை,அவர்களின் மகிழ்ச்சி,துன்பம்,நகைச்சுவை,சூது,சடங்கு,வழிபாடு,திட்டம், நடவடிக்கை என வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஒரு திரைப்படம் போல நமக்கு காட்சிப் படுத்திக் கொண்டு போகிறது.
“வாயில் வைத்திருந்த வெற்றிலை எச்சிலை,மாரியம்மாள் வரும் திசைநோக்கி துப்பிவிட்டு நடந்தாள் வள்ளியம்மாள்”.
“பூரி மாடாதிபதி டீ ஸ்டால் சாமியப்பன்”
“ரகசியம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாத தபால் நாகராஜ்” உட்பட,கதையின் நாயகன் சுந்தர்,நாயகி சிவகாமி,சாந்தி,கொமரப்பன்,சங்கரலிங்கம் போன்ற பாத்திரங்களின் மூலம்,பல்வேறு குணாதிசயமுள்ள மனிதர்களை,அவர்களின் நடவடிக்கைகளை நமக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.கூத்து கட்டும் கிட்டானும்,சண்முகமும் வரும் காட்சிகள்,அவர்களிடையே நடைபெறும் உரையாடல்கள் அனைத்துமே நம்மையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் சிரிப்பு வெடிகள்.
கொங்கு மண்டலத்தின் பிரதான நகரங்களுள்,ஒன்றாகவுள்ள திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் புழங்கும் கொங்குத் தமிழ் மொழிநடையை,அழகாகக் கையாண்டிருப்பதோடு,
-“புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டலையும் ஆட்டிவிட்டுட்டு போறா பாரு போக்கத்தவ..-
--“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..?”-
-மாடு அந்தப் பாத்திலே மேயலாமா,இந்தப் பாத்திலே மேயலாமான்னு ஆட்டங்கட்டறாப்பல.”,
-“சும்மா நடக்கறான் வயிறு வேதி குடிச்சவனாட்டம்..”—
-“சேத்தை வழிச்சு மொகரைலே பூசினாப் போல”,--- போன்ற பழமொழிகளும்,வட்டார வழக்குகளும் நாவல் முழுதும் நிறைந்திருப்பது தனிச்சிறப்பு.
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக நடைபெறுகின்ற இக் கதையில்,கிராமப்புறங்களில் நடைபெறும் சந்தைகள்,ஊர் நாட்டாமைக் கூட்டங்கள் மற்றும் சிவன்மலை,சென்னிமலை தேர்த் திருவிழாக்கள் அதில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றையும்,திருவிழாவை முன்னிட்டு அங்கு போடப்படும் கடைகளின் இயக்கங்களைக்கூட விலாவாரியாக நமக்குக் காட்சிப்படுத்துவதின் மூலம்,கதைக் களனோடு நாம் சுலபமாக ஒன்றிவிடச் செய்கிறது.
அதேபோல்,திருப்பூர் பனியன் கம்பெனிகள் குறித்து நமக்கு மேலோட்டமாக ஒரு சித்திரம் இருந்தாலும்,அங்கு சதா நிலவி வரும் தொழில்போட்டிகள்,ஆர்டர்களைக் கைப்பற்ற சிலர் மேற்கொள்ளும் சதி வலைகள்,தொழிலாளர்களின் ஸ்திரமற்ற தன்மைகள் என,நுணுக்கமாக கதைப்போக்கில் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளதை வாசிக்கும்போது,கொஞ்சம் அதிர்ச்சியூட்டவும் தவறவில்லை.
சந்தர்ப்பவசத்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் கதாநாயகன் சுந்தர்,தனது அன்றாட வாழ்க்கை,தொழில், காதல், உறவுகளுக்குள் ஏற்படும் மனவேறுபாடு என படிப்படியாக சந்திக்கும் சிக்கல்களே நாவலின் பிரதான கதைப்போக்காக இருக்கிறது.சந்தர்ப்ப சூழ்நிலைகள் என ஒரே வார்த்தையில் தவிர்த்துவிட முடியாமல்,அவனது குடிப்பழக்கமே அவனைச்சுற்றி சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் வகையில்,இதுபோன்ற நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற எச்சரிக்கையையும் மறைமுகமாக நமக்கு வழங்கிப் போகிறது நாவல்.
தனிமனித ஒழுக்கம் அவசியம் என்று வலியுறுத்தும் அதேநேரத்தில்,-- “இப்போதெல்லாம் மக்கள்,குளம் குட்டையென எதனையும் விட்டுவைப்பதில்லை.நிலம் என்று இருந்தால் போதும் அதில் விடுகட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.வருங்காலத்தின் மீதும்,நீர் நிலைகளின் மீதும் யாருக்குத்தான் அக்கறை இருக்கிறது.?”---
--“இப்போதெல்லாம் அறுநூறு அடி தாண்டியும் போர் போட வேண்டிய நிலைமை வந்தாயிற்று.அப்படியும் தண்ணீர் பற்றாக்குறைதான்.நிலத்தடி நீர் இருந்தால்தானே கிணற்றில் தண்ணீர் இருக்கும்..?”.--
---“இந்த ஆண்கள் பெண்களுடன் பழக நேர்ந்தாலே அவர்களை காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே வளர்த்துக் கொள்கிறார்கள்.நட்பையும் கூட காதலாய் மாற்றிவிடத் தயங்குவதில்லை.சிலநேரங்களில் பெண்ணின் தனிமையைப் பயன்படுத்தி காதலை திணிக்கும் வேலையிலும் ஈடுபட்டு,காரியத்தை சாதித்துவிடுகிறார்கள்.அங்கு காதலின் நோக்கமும் சிதைந்துவிடுகிறது..” -- கதைப்போக்கில் இயல்பாக நிகழ்த்தப்படும் உரையாடல்கள் அல்லது கதாசிரியரின் குரல் மூலம்,சமூக வாழ்வியலின் யதார்த்த அம்சங்களைக் குறித்தும்,அதன் கேடுகளைக் குறித்தும் ஆங்காங்கே பதிவு செய்திருப்பதின் மூலம், ஆசிரியரின் சமூக அக்கறையும் நமக்கு விளங்குகிறது. இந்தப்பதிவுகளை,இப்போதைய நிலையில் பொருத்திப் பார்த்தாலும்,அது நிகழ்காலத்தோடும் ஒத்துப் போவது இந்த நாவலுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
வெற்றிகரமான கவிஞராக உள்ள தோழர் ரத்தினமூர்த்திக்கு நாவல் வடிவமும் மிகநன்றாகவே கைவந்திருக்கிறது.அவரின் மேம்பட்ட இந்தத் திறன்,இனி வாழ்வியல் சிக்கல்கள் குறித்தும்,தாழ்நிலை மக்கள் மேம்பாட்டிற்கான வழிகளைக் குறித்தும் எழுதிச் செல்லப் பெரிதும் பயன்படும் என்று இனி உறுதியாக நம்பலாம்..! தொடர்ந்த அவரின் வெற்றிகரமான எழுத்துலகப் பயணத்திற்கு இனிய வாழ்த்துக்கள்..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி.
17.02.2015
------
தகவலுக்காக-
நாவல்-ஆவாரங்காடு-
ஆசிரியர்-ரத்தினமூர்த்தி
பக்கம்-280-விலை-230.00
தொடர்புக்கு-99444 22111
----