கடவுளின் நிழல்கள்-கவித்தா சபாபதி

(Tamil Nool / Book Vimarsanam)

கடவுளின் நிழல்கள்-கவித்தா சபாபதி

கடவுளின் நிழல்கள்-கவித்தா சபாபதி விமர்சனம். Tamil Books Review
கவித்தா சபாபதியின் கடவுளின் நிழல்கள்.!-பொள்ளாச்சி அபி

கவிஞர் கவித்தா சபாபதியின். “கடவுளின் நிழல்கள்..” கவிதை தொகுப்பின் தலைப்பு சற்றே நம்மை சிந்தனைக்குள் செலுத்துகிறது.கடவுள்..எனில்,அது கறுப்பா,சிகப்பா, நெட்டையா, குட்டையா..? என்று இதுவரை நமக்குள்ளிருக்கும் அனுபவத்தை,இன்னொருமுறை உரசிப்பார்க்கின்ற கேள்விகள் தொடர்ந்து துளைத்துக் கொண்டே போகின்றன.

“இந்த உலகத்தைப் படைத்தது யார்.?.” என்ற கேள்வியை எழுப்பி,“நான் வணங்குவது மட்டுமே உயர்ந்த கடவுள்..,என்பவர்களால்தான் இந்த உலகம் ஓயாத சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.பொருளாதாரத்தை முன்னிறுத்தி நடைபெறும் போர்களுக்குக்கூட,கடவுள் மற்;றும் அக்கடவுள் சார்ந்த மத நம்பிக்கைள் பின்னனி ஊக்க சக்தியாக இருந்துவருகிறது.இதனால் எந்த நாட்டிலும், ஏதோவொரு பிரிவு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை எண்ணி,கடவுளும் வேண்டாம்,மதங்களும் வேண்டாம் என்றொரு பிரிவினர் தங்கள் குரலை உரத்து எழுப்பி வருவது இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

ஆனால்,கவித்தா சபாபதியின் கடவுளின் நிழல்கள்..என்ன சொல்ல வருகிறது.?

கடவுள் எனும் கருத்தோ,உருவமோ,சக்தியோ..அப்படியொன்று இல்லையென சொல்பவர் களுக்கு பதிலாக,ஒரு கவிஞனுக்கேயுரிய அழகியல் அடிப்படையில், “கடவுளின் நிழல்” எனும் தலைப்பின் மூலம்,கடவுளின் இருப்பை உணர்த்துகிறார். ஆம்,ஒரு உருவம் அல்லது வடிவம் இருந்தால்தானே அதன் நிழலும் சாத்தியம்.! இப்புவியில் மட்டுமல்ல,தனது சிந்தனைக்குள் எட்டும் பிரபஞ்சமும்,அதில் காணப்படுகின்ற அனைத்தையும் “கடவுளின் நிழல்களே..” என்கிறார்.

“ஒரே பாடலைத்தான்
வேறுவேறாய் இசைக்கிறேன்.
அவை யாவும்
புதிது புதிதாகவே பூக்கின்றன.

ஒரே உணர்ச்சியைத்தான்
வேறுவேறு அதிர்வில் மீட்டுகிறேன்.
அவையாவும்
இனிதாகவே இருக்கின்றன..” – என்று ஒரு கவிதையில் தெரிவிக்கும் அவரின் குரலில், கடவுள் எனும் கருத்தில் உலகப் பொதுமையையும்,மற்றொரு கவிதையில்,

“உன் தியான மண்டபத்தில்
நானே ஒரு தீபமாய் எரிகிறேன்
மதங்களில்லாத உள்ளுலகத்திலிருந்து
ஊமைக் குரலெடுத்துக் கூவுகிறேன்.
எழுதப்படாத வேதவரிகளை
மவுனமாய் உச்சரிக்கிறேன்.
சடங்குகளின் சிறையிலிருந்து மீண்டு
நான் சமர்ப்பணமாகிறேன்..”---- என்று தனது வழிபாட்டு நிலையையும் விளக்குகிறார். இதன்மூலம்“கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபடவேண்டும்,ஜாதி மதவேறுபாடு கூடாது.” என சொன்ன வள்ளலார்,வாசகர்களின் நினைவில் இன்னொருமுறை வந்து செல்வார்.

மேலும்“நான் வணங்குவது மட்டுமே கடவுள்..” என்று அடம் பிடிப்பவர்கள் மத்தியில், “காண்பதெல்லாமே கடவுள்தான்” என்று அழுத்தமாக உரைக்கும் கவிஞர் கவித்தா சபாபதி.

அடம் பிடிப்பதால் எழுகின்ற சர்ச்சைகள் வெட்கப்படும்படி,தனது கவிதைகள் மூலம் அமைதிப்படுத்துகிறார்.கடவுள் என்ற சக்தியின் நிழலாய்த்தான்,நாம் காண்பதும், உணர்வதும், துய்ப்பதும் என அனைத்தும் இருக்கிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில்,

“இந்த உயிரின் கீதங்களை
நீயே எழுதுகிறாய்.
இந்த உயிரின் கீதங்களை
நீயே கேட்கிறாய்…-என்று,இயக்குகின்ற சக்தியாகவும்,வெளிப்படும் வினையாகவும் கடவுளே இருப்பதாக சொல்கிறார்.

இது ஒருவகையில்,“நன்றே வருகினும்,தீதே விளைகினும்,நான் அறிவது ஒன்றேயும் இல்லை,உனக்கே பரம்,எனக்குள்ள எல்லாம் அன்றே உனது என்று அளித்துவிட்டேன் அழியாக் குணக்குன்றே,அருட்கடலே,இமவான் பெற்ற கோமளமே..!” என்ற பாடலில் அபிராமி பட்டர் வெளிப்படுத்தும் சரணாகதி தத்துவத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

இந்த அடிப்படையில் நின்று கடவுளை அணுகி,தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்தில் தன் உணர்வு,தன் உடல் உட்பட,உயிருள்ள,உயிரற்ற..என அனைத்தும் கடவுளின் எண்ணப்படியே ‘இயங்குகின்றன’ என்ற ஒருநிலைக்கு வந்துவிடும் கவிஞர்,இந்த இயக்கத்தின்போது, அவர் அனுபவித்த உணர்வுகள்,காணுகின்ற காட்சிகள் என அனைத்தையும்,

“ஒவ்வொரு அணுவின் இயக்கமும்
உன்னுடைய இயக்கமே,
இப்பேருலகமே உன்மேனி
நீயதன் ஆன்மா..”-- என்பதாக,உரக்கச் சொல்கிறார்.

இவ்வாறு தான் ஏற்றுக் கொண்ட கடவுள் என்பதும்,வழிபாடு என்பதும் கவிஞரின் எண்ணத்தைப் பொறுத்தவரை,ஒரு குறிப்பிட்ட முறைமை சார்ந்ததோ,மதக் கருத்துக்கு உட்பட்டதோ அல்ல.அது,பழக்கவழக்கத்திற்குள்ளோ,பாரம்பரியத்திற்குள்ளோ,சிக்கிவிடாத மிகச் சுதந்திரமான ஒன்றாக இருக்கிறது.அதுமட்டுமல்ல,

“கம்பிகளே
கூண்டுக்கிளியின்
சுதந்திர எல்லைகள் ஆனதுபோல
புரியாத மந்திரங்களுக்குள்
என் பிரார்த்தனைகள் கட்டுப்படாது..” -என மற்றொரு கவிதையில் அவர் எழுப்பும் குரல்,
சம்பிரதாயமான,அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முயலாத நமது மந்திரச் சடங்குகளை நோக்கி வீசப்பப்படும் கட்டளையாகவே இருக்கிறது.

சிந்தித்து செயல்படுதல் என்பதற்கு மாற்றாக,மனிதன் உணர்ச்சி வசப்படுதல் என்பது,ஏதேனும் ஒன்றில் அவன் வைத்துள்ள அதீத நம்பிக்கை அல்லது அவநம்பிக்கையினால் ஏற்படுகிறது.
அப்போது மனிதன் மேற்கொள்கிற செயல்கள் அவனுக்கோ,அவனைச் சார்ந்தவர்களுக்கோ நன்மையைத் தருவதில்லை.அவனை வழிப்படுத்துகிற நல்ல நம்பிக்கைகளை திடமாக அவன் மேற்கொண்டால்,அவனுக்கு மட்டுமல்ல,அவனைச் சார்ந்தவர்களுக்கும் நன்மையே ஏற்படும்.

ஆயிரமாயிரம் காட்சிகள்,உணர்தல்கள் என்று மனிதன் அனுபவப் பட்டிருந்தாலும்,அஞ்ஞானம் எனும் பிடியிலிருந்து வெளியேற முனையாத மனிதர்கள்,மன இருளில் சிக்கித்தவிக்கும் நிலையிலேயே வாழ்ந்து,அப்படியே இறந்தும் போகிறார்கள்.தனது மனத்தை வெளிச்சப்படுத்திக் கொள்ளுமளவில் அவர்கள் எந்த நம்பிக்கையின் மீதும் பற்றுவைப்பதில்லை.பிறருக்கு தீமை தராத, கடவுள் என்ற நல்ல நம்பிக்கை,அனைவருக்கும் நன்மையே தரும் என்பதை,தன் முனைப்பிலிருந்து சொல்ல வரும் கவிதையாக,

“உணர்ச்சிக் குதிரைகள்
முரண்டு பிடிக்க
விலகியோடும் மனோரதம்,
உனது ஆளுகையே
அதை வழிப்படுத்துகிறது.

ஆர்ப்பாட்டமாய் மலரும்
ஆயிரம் பொய்களில்
உனது நினைவே
என் ப+மியில்
சத்தியத்தின் வேர் விடுகிறது.

இருள் மனவீட்டில்
அணைந்த தீபத்தின்
கருகிய திரிகளில்
உனது அருளே
ஓர் ஒளியாய்ப் ப+க்கிறது.” – கடவுளின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையானது, உணர்ச்சிகளால் மனிதர்கள் தடுமாறும்போதெல்லாம்,அவர்களைக் காத்து நிற்கிறது என்று நிஜம் எனும் தலைப்பில் உள்ள கவிதை சொல்கிறது.

இந்த உலகத்தில் தன்னை பொருட்படுத்துவார் இல்லை.தனக்கு மதிப்பளிப்பவரில்லை, சொல்லப்போனால் தான் இந்த உலகத்தில் பிறந்ததே வீண் என்று விரக்தியுடனே காலத்தைக் கழிப்பவர்கள் ஏராளம்.தனது அகத்திலே தன்னிரக்கம் எனும் இருளை வைத்துக் கொண்டு, இந்த உலகம் சரியில்லை என்றும்,இந்த உலகமே சூனியமாகிவிட்டதென்றும் பிதற்றிக் கொண்டே திரிபவர்களுக்கு, -“உன்னையன்றி இன்பமுண்டோ,உலகமிசை வேறே..?” -என்று பாரதி சுட்டிக்காட்டுவது போல,

“உலகம் சூனியமாயிருந்தது
உன்னை உணர்ந்தேன்
சிம்மாசனமானது..”- என, “சிம்மாசனம்”; எனும் கவிதையிலும்,

“போராடிப் பார்க்கிறேன்
வாழ்க்கை போர்க்களமாகிறது
நடித்துப் பார்க்கிறேன்
நாடகமேடையாகிறது
வெறித்துப் பார்க்கிறேன்
சூனியமாகிறது
ரசித்துப் பார்க்கிறேன்
ரம்மியமாகிறது..----என “எண்ணம்போல” என்ற கவிதையிலும் சொல்கின்ற கவிஞர்,உலகத்தை நீ எப்படிப் பார்க்க விரும்புகிறாய்.? என்று கேள்வியெழுப்புவதோடு, உலகத்தின் மீதான தருமனின் பார்வையையும்,துரியோதனனது பார்வையையும் நமக்கு நினைவுறுத்தும் கவிஞர்,கடவுளை உணர்ந்தவர்களுக்கு,இந்த உலகில் துன்பமில்லை என்றும் ஆற்றுப்படுத்துகிறார்.

தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையிலும் கடவுளின் இருப்பை,கம்பீரமாக,கொஞ்சலாக, ஆலோசனையாக,அனுபவமாக..,என ஒவ்வொரு கோணத்தில் கவிஞர் சொல்லிப்போவது வாசிக்க வாசிக்க ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே போகிறது.

“என் பிறப்பு,
படைப்பு எனும் கலையால்
ஆசிர்வதிக்கப்பட்டது..!,என்பதின் தொடர்ச்சியாக அவருடைய சொர்க்கம்,அவரது உறக்கம், திருமண நாள் என..ஆசீர்வதிக்கப்பட்டவற்றின் பட்டியல்,சிருஷ்டி எனும் கவிதையில் அழகாக வெளிப்பட்டுள்ளது.

“இதயத்தை-மெய்யெனும் ஆலையின் மின்சார அறையே”,
“மனம் வெறும் சதைச்சுவரென்றால்,எண்ணங்கள் சித்திரங்கள்”.
“விபத்துக்கும் தப்பித்தலுக்கும் இடையேயான தூரமே வாழ்க்கை”
“மௌனமே,சப்தத்தின் நிழலே..”
“ஏழையின் மௌனத்துக்குள் எரிமலையும் உறங்கிக் கிடக்கலாம்”- என்பது போன்று, தொகுப்பெங்கும் வந்து ஜாலம் காட்டும் அழகியவரிகள்,தமிழ்க் கவியுலகத்திற்கு கிடைத்த புதிய சிந்தனைகளாக ஜொலிக்கிறது. இத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளைக் குறித்தும்
எழுதுவதெனில்,அதுவொரு தனிநூலாகி விடுகின்ற அளவிற்கு சிந்தனைகள் கொட்டிக் கிடப்பது வெகுசிறப்பு.

ஒவ்வொரு கவிதையிலும் வரிசைகட்டி நிற்கும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால்,கவித்துவம் மிளர்கின்ற வகையில் யாத்திருக்கும் கவிதைகள்,அவருடைய கடவுளெனும் உள்ளடக்கத்திற்கு மிக வலிமை சேர்த்திருக்கிறது.“இந்த வலிமையும் எனதல்ல,அது கடவுள் அருளியது.” எனும் அவரின் சரணாகதி தத்துவ மனோபாவமே, வாசிக்கும் யாரையும் மிரட்டவோ,பின் தொடர வலியுறுத்தவோ இல்லை.“இருப்பதை உங்களுக்கு உணர்த்த முயன்றிருக்கிறேன்.உணர்வது உங்கள் விருப்பம்..”என்பதே இந்தத் தொகுப்பின் மூலம் நமக்கு அவர் விடுக்கும் வலிமையான செய்தி.

மேலும்,எல்லா நாடுகளிலும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும்,சிறுபான்மையினரை ஒடுக்குவதும்,கொலை புரிவதுமாக,இணக்கத்திற்கு வழிகாணாமல்,உலக அமைதிக்கு பங்கம் விளைந்து வருகின்ற இந்நாளில்,அமைதிப்படுத்துகின்ற,ஆற்றுப்படுத்துகின்ற இந்தத் தொகுப்பு வெளிவந்திருப்பது மிகவும் ஆறுதலளிக்கும் செய்தி.இந்தக் கவிதைகள் அனைத்திலும் உள்ள உள்ளுணர்வோடு,அதன் ஆன்மபலம் குன்றாத வகையில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படுமேயானால்,இந்தியச் சிந்தனை மரபுகளுக்கு உலக அளவில் மேலும் வலு சேர்க்கும் என்பதே எனது கருத்து.

பொருத்தமான படங்களுடன்,கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்,கவிஞர் நா.காமராசன் ஆகியோரின் அணிந்துரைகளோடும்,அழகிய அட்டைப்படத்தோடும் இந்நூலை வெளிக் கொணர்ந்திருக்கும் கவிஞர் கவித்தா சபாபதிக்கு,எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.!

இத்தொகுப்பில் எனக்கு பெரிதும் பிடித்த “மீண்டும் என் ஈடனுக்கு.” எனும் கவிதையிலிருந்து சில வரிகள் உங்களின் பார்வைக்காக,

“பிரிவினையாளர்கள் தீவிரவாதிகள்
குழந்தைகளைக் கொல்பவர்கள்
இவர்களைக் கடந்து
கற்பழிப்பு,கொலை
இனவெறி,வஞ்சனை
இவற்றைக் கடந்து
மதங்கள் வளர்த்த
‘மத’ங்களைக்கடந்து
மனிதன் நடந்துவந்த
யுகங்களின்
சுவடுகளையெல்லாம் கடந்து

பின்னோக்கிப் போகலாம்-ஒரு
புனிதவழிப் பயணம்..!
அதே ஆப்பிள்மரம் கனிந்த
ஈடன் தெரிகிறது.
அங்கே நான்
ஆதாம் ஆகிறேன்

என்பிரியத்திற்குரிய ஏவாளே..,
நிர்மலமான நம்இதயங்களில்
மீண்டும் நச்சு விதைக்க
அதோ அரவு வருகிறது.
அதை என்ன செய்யலாம்;.?..” – ஆதாமினுள்ளிருந்து கேட்கும்,கவிஞர் சபாபதியின் இந்தக் கேள்விக்கு,எனதருமை இளைய சமுதாயமே..என்ன பதில் சொல்லப் போகிறாய்..?

அன்புடன்
பொள்ளாச்சி அபி.
20.02.2015

சேர்த்தவர் : பொள்ளாச்சி அபி
நாள் : 20-Feb-15, 2:40 pm

கடவுளின் நிழல்கள்-கவித்தா சபாபதி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே