இசைத்தமிழ் அமுதசுரபியாம் ‘கருணாமிர்த சாகரம்’ நூலின் சமுதாயப் பின்புலம்

(Tamil Nool / Book Vimarsanam)

இசைத்தமிழ் அமுதசுரபியாம் ‘கருணாமிர்த சாகரம்’ நூலின் சமுதாயப் பின்புலம் விமர்சனம். Tamil Books Review
இசைத்தமிழ் அமுதசுரபியாம் ‘கருணாமிர்த சாகரம்’ நூலின்

சமுதாயப் பின்புலம்

சிலம்பில் மார்க்கம், தேசிகம் எனும் இரு நிலைகளில், அதாவது செவ்வியல் கலை, வட்டாராக் கலை எனும் நிகழ்ச்சிகளில் இசை உன்னத நிலை எய்தி இருந்தது. கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான களப்பிர மரபினரின் ஆட்சிக் காலத்தில் இசை, கூத்து முதலான நுண்கலைகள் ஆக்கமிழந்து ஆதரவற்றுப் போயின. தமிழ்நாட்டு முடிமன்னர்களான சேர, சோழ, பாண்டியர்கள,; கி.பி. 12-ஆம் நூற்றாண்டிற்குப் பின் வீழ்ச்சியுற்ற போது, தமிழ்க் கலைகள் பொலிவிழந்து, பிற மொழியினருக்கு அடிமையாயிருந்தன. தமிழ் மொழியானது முத்தமிழாக இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனக் கூறப்பட்டாலும், கி.பி 19-ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் இசை பற்றித் தமிழர்களுக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லுமளவுக்கு அதன் நிலை தாழ்ந்து சென்று விட்டது. இசைத்தமிழ் நூல்கள் பல காலவெள்ளத்தில் அழிந்து போய்விட்டன. இக்காலகட்டத்தில் கி.பி. 1917-இல் எழுந்த இசைத்தமிழ் நூல் ‘கருணாமிர்த சாகரம்’, இசை பற்றிய அறிவு பெறுதற்கும், பிற்கால இசை ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவதற்கும் வாய்பாக அமைந்துள்ளது. பின்புலம் என்பது படைப்பிற்கும், படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கின்ற இலக்கியம், அந்தச் சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ புலப்படுத்துகின்றது. இங்குக் கருணாமிர்த சாகரம் நூலின் சமுதாயப் பின்புலத்தை ஆய்வதே நோக்கமாகும்.
ஆசிரியர் குறிப்பு
கருணாமிர்த சாகரம் செய்த மு.ஆபிரகாம் பண்டிதர் (2-8-1859–31-8-1919), குற்றாலத்திலுள்ள சம்பவார்; வடகரை என்ற ஊரில் திரு.முத்துசாமிக்கும், திருமதி.அன்னம்மாளுக்கும் புதல்வனாக பிறந்தார். பண்டிதர், பல்துறையில் ஒளி வீசிய பல்துறை வித்தகர். தமிழ் ஆசிரியப் பணி, மருத்துவர், வேளாண் விஞ்ஞானி, இசை ஆய்வாளர், பாடகர், வீணை வித்தகர், வயலின் கலைஞர், கீர்த்தனை ஆசிரியர், ஓவியர், புகைப்படக் கலைஞர், சொற்பொழிவாளர்(இசை வழி நற்செய்தி), எழுத்தாளர், இசைப் புரவலர் எனப் பன்முகம் கொண்ட மாபெரும் அறிஞர் மற்றும் கலைஞர்.

கருணாமிர்த சாகரம் முதல் நூலின் அமைப்பு
பண்டிதர் பல்லாண்டு ஆராய்ச்சியால,; கி.பி. 1917-ஆம் ஆண்டு ‘கருணாமிர்த சாகரம்’ எனும் இசைத்தமிழ் நூலை வெளியிட்டார். தமிழிசை வரலாற்றில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு உருவான மிகப்பெரிய இசை இலக்கண நூலான கருணாமிர்த சாகரம், பண்டிதரின் அரும்பெரும் அருட்கொடையே என்று கூறலாம். 1346 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நான்கு பகுப்புகளாகப் பகுக்கப் பெற்றுள்ளது.
முதல் பகுதி - பண்டைய தமிழகம் பற்றியும், முத்தமிழிலக்கணம் பற்றியும் அறிமுகப்கடுத்துவதோடு இசைப்புலவர்களின் பெயரகராதியும் கொண்டுள்ளது.
இரண்டாம் பகுதி - இசைச் சுருதிகள் 24 எனவும், 22 சுருதி முறை பிழைப்பட்டது எனவும் விளக்குவது.
மூன்றாம் பகுதி - பெரும் பண்கள், திறப்பண்கள், பண்ணுப்பெயர்த்தல், ஆலாபனம், இராகங்களின் தொகை, இணை,கிளை,பகை,நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகளை விளக்குவது.
நான்காம் பகுதி - ஆயம், சதுரம், திரிகோணம், வட்டப்பாலை, யாழ் வகைகள், மாந்தரின் உடலுக்கும் யாழ் வடிவுக்கும் உள்ள ஒப்பீடு முதலியவற்றை விளக்குவது.
கருணாமிர்த சாகரம் இரண்டாம் நூலின் அமைப்பு
கி.பி. 1946-ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் நூல், இராகங்களைப் பற்றிய ஆய்வு நூலாகும். ஏழிசை, பன்னிரு கோவைகளாக அமையும் பொழுது கோவைகளுள் இணை, கிளை, பகை, நட்பு என்ற இசைபுணர் நிலைகள் தோன்றும் என்பதை சிலப்பதிகார உரை வழி நின்று பண்டிதர் விளக்கியுள்ளார்.
கருணாமிர்த சாகரத் திரட்டு நூலின் அமைப்பு
கி.பி. 1907-ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூலில் உள்ள 96 தமிழ்ப் பாடல்களில் கீதம், சுரஜதி, கிருதி, ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனைகள் முதலிய உருப்படிகள் உள்ளன. ஒவ்வொரு இசைப் பாடலுக்கும் சாகித்தியமும், சுரதாளக் குறிப்புகளும் பண்டிதர் தந்துள்ளார்.

அரசியல் பின்புலம்
கி.பி 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசர்கள், நாயக்கர்கள,; மராத்தியர்கள் காலகட்டங்களில், தமிழ் நாட்டில் நடைபெற்ற இசையரங்குகளில் தெலுங்கிலும், கன்னடத்திலும,; வடமொழியிலும் பாடல்கள் பாடப்பட்டு வந்தன. இசை வளர்த்த தஞ்சையி;லும் தமிழிசை அழிவுக்குக் காரணமாக, தமிழரல்லாத பிற மொழிசார்ந்த அரசியல் சூழ்நிலையும் நிலவி வந்தது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி நிலவினாலும், இக்காலகட்டங்களில் சங்கீதம் பாடிய பிராமண வித்துவான்கள் எல்லோரும், தெலுங்கு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராச சுவாமியின் சிறப்பு காரணமாக தெலுங்குப் பாடல்களையே பாடினார்கள். இச் சூழ்நிலையில் தெலுங்கிசை எவ்வாறு தமிழிசையை அப்பட்டமாகக் கவர்ந்து வளர்ந்தது என்பதையும், தமிழிசைக்கு இசை இலக்கணம் சரியாக இல்லை என்பதையும் கண்டுணர்ந்தார் ஆபிரகாம் பண்டிதர். தாய் மொழியில் தான் இசை சாகித்தியம் அமைய வேண்டும் என்பதை முதன் முதலாகச் சொன்னவர் பண்டிதர். ஆட்சி மொழி சார்ந்த பாடல்கள் கௌரவிக்கப்பட்டு, தமிழப் பாடல்களைத் ‘துக்கடாப் பாட்டு’ என்று இழிந்துரைத்த பின்புலமே கருணாமிர்த சாகரம் என்ற இசைத்தமிழ் நூல் தஞ்சையில் உருவாகக் காரணமாயிருந்தது.
சமுகப் பின்புலம்
புறச் சுழல்கள்
தமிழகத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகள் (19,20-நூற்), சமுகச் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் நிகழ்ந்த காலம் எனலாம். இவையெல்லாம் தானாக நடந்துவிடவில்லை. இவற்றிற்குப் பின்னணியாகத் தனி மனிதர்களின், பல்வேறு இயக்கங்களின் அர்ப்பணிப்போடு கூடிய மாகத்தான உழைப்புகள் தேவைப்பட்டன. அவை 19-ம் நூற்றாண்டில் கைம்பெண் பிரச்சனை, தேவதாசி முறை முதலியவற்றை அகற்றி விதவைகள் மறுமணம், கலப்பு திருமணம், சமபந்தி போஜனம் முதலியவற்றை நடமுறைப்படுத்துவதற்கு வழிவகுத்தன. இவற்றிற்கென்று தங்களை அர்ப்பணித்த மனிதர்களாக இராமலிங்கவடிகள், ஈ.வே.ரா பெரியார், வேதநாயகம் பிள்ளை முதலானவர்களையும், இயக்கங்களாக வைகுண்ட சுவாமிகளின் ஐயாவழி இயக்கம், பிரம்ம சமாஜம் முதலியவற்றையும் கொள்ளலாம். நவீனச் சமுகச் சீர்திருத்தச் சிந்தனைகளை அறிமுகப் படுத்தியவர்களில் கிறிஸ்தவ மதப்போதகர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றார்கள். மொத்தத்தில் 19-ஆம் நூற்றாண்டின் சமுகச் சீர்திருத்த இயக்கங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று, 20-ஆம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எனப் பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. மேற்கூறிய புறச் சுழல்களே, ஆபிரகாம் பண்டிதர் என்ற ஒரு தனி மனிதனின் வளர்ச்சியில் சங்கீத வித்தியா மகாஜன சங்கம், கி.பி. 1912 முதல் 1916–ஆம் ஆண்டு வரை ஏழு இசை மாநாடுகள் ஆகியவற்றை செயல்படுத்த பின்புலமாக இருந்து, கருணாமிர்த சாகரம் உருவாவதற்கும் துணை புரிந்தன.
அகச் சுழல்கள்
கருணாமிர்த சாகரம் உருவாவதற்குக் கி.பி.1892-இல் உ.வே.சாமிநாத ஐயர் அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரைகளுடன்; வெளியிட்ட சிலப்பதிகாரம் அடிப்படையாக அமைந்தது என்பதனைப் பல இடங்களில் பண்டிதர் குறிப்பிட்டுள்ளார். பண்டிதரின் இரண்டாம் மனைவி கோவில் பாக்கியம் அம்மாள், அவரிடம் பொதிந்திருந்த இசைஞானத்தையும், இசை ஆய்வையும் வெளிக் கொணர்ந்தவராக விளங்கினார். பண்டிதர் திண்டுக்கல் சடையாண்டி பத்தரிடம் பயின்ற இசைக் கலையைத் தஞ்சையில் உள்ள ஒரு நாதசுர வித்துவான் மூலம் வளப்படுத்திக் கொண்டார். கி.பி. 1916-இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில், பூர்வத்தமிழ் மக்கள் நுட்பச் சுருதிகளில் கானம் பண்ணினார்கள் என்பதனைத் தம் குமாரத்திகளால் செய்முறையில் விவரித்தார். மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான இசைப் புலமையுள்ளவர்களோடு கலந்து உறவாடி, பல்வேறு இசை குறித்த ஆழ்ந்த அறிவினைப் பெற்றதும் கருணாமிர்த சாகரம் எழுத பின்புலமாக இருந்தது. அவ்வாறு சிறப்பாகத் துணைபுரிந்தவர்களில், அரிகேசவநல்லூர் முத்தையாப் பாகவதரும், வீணை திரு.வெங்கடாசலம் ஐயர் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்கூறிய அகச் சுழல்கள் பண்டிதரின் இசைத்தமிழ் நூல் உருவாக்க உறுதுணையாக இருந்துள்ளன.
பொருளாதாரப் பின்புலம்
மருத்துவத்திலும், வேளாண்மையிலும் பண்டிதர் ஈட்டிய பெருந்தொகை இசை ஆய்வினை மேற்கொள்ளுவதற்கும், ஏழு இசை மாநாடுகள் தம் சொந்த செலவில் நடத்துவதற்கும், கருணாமிர்த சாகரம் நூல் அச்சிட்டு வெளியிடுவதற்கும் அவருக்கு உதவின.


இலக்கியப் பின்புலம்
நெடும்பல நூற்றாண்டுகள் தமிழ் இலக்கியங்களில் வெளியிடப்பட்டுள்ள இசைப் பகுதிகளைப் பெரும்புலவர்கள் ஆராய்ந்தாரில்லை. சிலப்பதிகாரமானது இசைத்தமிழ் மற்றும் தமிழிசை என்ற பெருமாளிகைக்கு முதல் தூணாகவும், 5-ம் நூற்றாண்டின் ஆதித் தமிழிசை மும்மூர்த்திகளின் (அப்பர், சம்மந்தர், சுந்தரர்) இசைப்பாடல்கள் இரண்டாம் தூணாகவும,; 7-ம் நூற்றாண்டில் தாளத்தை பிரதானமாக்கிப் பாடிய அருணகிரிநாதர் பாடல்கள் மூன்றாம் தூணாகவும,; பின்னர் முத்துத் தாண்டவர் (1560-1640) தோன்றி, இசையைக் கீர்த்தனை வடிவமாக்கியுள்ளது நான்காவது தூணாகவும் அமைத்து பண்டிதரின் முயற்சியை நிறைவு செய்தன. மேற்கூறிய நான்கு தூண்களும் பண்டிதருக்குப் பின்புலமாக இருப்பினும், கருணாமிர்த சாகரம் நூலில் கூறப்பட்டுள்ள இசைத்தமிழ் பற்றிய செய்திகள் பலவற்றிற்கும்; சிலம்பும் அதன் உரைகளுமே அடிப்படை என்பதைப் பண்டிதர் குறிப்பிடுகிறார்.
இசைப்பாடல் வடிவப் பின்புலம்
நெடும்பல காலங்களாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல் முதலிய இயற்பா வகைகள் இசைப்பாடல்களாகப் பாடப்பட்டு வந்தன. பின் தேவார காலத்திலும் திருவாசகக் காலத்திலும் கீதங்கள் கோவில்களில் மிகுதியாகப் பாடப்பட்டன. ஏராளமான தேவாரப் பாடல்கள் கீர்த்தனையின் வடிவு கொண்டவை. இன்றுள்ள கீர்த்தனையின் ஆதிமூலர்- முத்துத் தாண்டவர் (1560-1640) தொடங்கி, மாரிமுத்தாப் பிள்ளை(1712-1782), அருணாசலக் கவிராயர்(1711-1779), தெலுங்கிசை மும்மூர்த்திகள் (18-ஆம் நூற்), வேதநாயகம் பிள்ளை(1826-1889), முத்தையா பாகவதர்(1877-1945) மற்றும் பல சங்கீத வித்வான்களைத்; தொடர்ந்து மு.ஆபிரகாம் பண்டிதரும் கீர்த்தனைகள் இயற்றியவர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். கருணாமிர்த சாகரத் திரட்டு என்னும் நூலில் தமிழ்க் கீர்த்தனைகள் இடம் பெறுகின்றன. இங்குக் கீர்த்தனைகள் படைத்த முன்னோர்களின் தாக்கம் பண்டிதரையும் பாதித்துள்ளது என்பதனைக் காணமுடிகிறது.
ஒரு குறிப்பிட்ட இலக்கியம் தோன்றுவதற்குக் குறிப்பிட்ட சில பின்புலங்களே காரணமாகும். கருணாமிர்த சாகரம் உருவாக அரசியல் பின்புலம், சமூகப் பின்புலம், பொருளாதாரப் பின்புலம், இலக்கியப் பின்புலம், இசைப்பாட்டு வடிவப் பின்புலம் முதலான சில பின்புலங்கள் காரணமாக அமைந்துள்ளதைக் காணமுடிகி;றது.
தமிழிசை இலக்கண நூல் ஒன்று இல்லை என்ற குறைதீர்த்த முதல் நூல் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் ஆகும். ‘தமிழிசை ஒன்று இருந்தது என்பதை எழுத்து பூர்வமாக நிரூபித்து காட்டியவர் பண்டிதரே’ என்று தமிழிசைப் பேரகராதி எழுதிய நா.மம்மது அவர்கள் குறிப்பிடுகின்றார். இந்நூல் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல். பெருங்கடல் போன்ற கருணாமிர்த சாகரம், உண்மையில் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி. இந்நூல் பிற்கால இசை ஆய்வாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக ஒளியூட்டியது. ‘தமிழ்நாட்டில் தமிழிசையே பெரிதும் முழங்க வேண்டும்’ எனும் நோக்கில் தொடங்கி, இன்றும் இயங்கி வரும் தமிழிசை இயக்கம், தமிழிசைச் சங்கம் முதலானவற்றிற்கு வடிவு கொடுத்த அண்ணாமலைச் செட்டியாருக்கு அடிகோலியவரும் பண்டிதரே ஆவார். இத்தகைய தமிழிசை மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு ‘கருணாமிர்த சாகரம்’ வித்திட்டுள்ளது என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.

சேர்த்தவர் : ஆஷைலா ஹெலின்
நாள் : 2-Apr-15, 1:22 pm

இசைத்தமிழ் அமுதசுரபியாம் ‘கருணாமிர்த சாகரம்’ நூலின் சமுதாயப் பின்புலம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே