பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் 1908-1994

(Tamil Nool / Book Vimarsanam)

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் 1908-1994

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் 1908-1994 விமர்சனம். Tamil Books Review
நாவல் வடிவம் :

ஒரு நூல் வாசிக்கபடும் அதன் பெயர் அந்தக் கதையின் ஆன்மாவைப் பற்றிப் பேசவேண்டும். அடுத்து அதன் அட்டைப்படம் கதைக் கருவை ரகசியமாக வாசிப்பவனோடு பேச வேண்டும். அற்புதமாக இந்த இரண்டும் வேலையையும் செய்திருக்கிறது ”பிரிண்ட் ஸ்பெஷாலிட்டீஸ்”கதைக்கு ஏற்றது போலக் காலச்சுவடுப் பதிப்பகம் தானாவே ஒரு பலம் சேர்க்கிறது ஆமாம் கதைப் படித்து முடிக்கும் போது வாழ்வே காலத்தின் சுவடாக ஒரு பிரம்மைத் தானாவே தோன்றும்.

கதை மனம்:

இந்தக் குறு நாவலின் பெயரை வாசித்தவுடன் நம் மனதுக்குள் காதல் மொட்டு அரும்புகிறது .எந்தத் திசையில் என்ன மாதிரிக் காதல் இங்குப் பேசப்படப் போகிறது என்று எதிபார்ப்புடன் வாசிக்கத் துவங்குகிறோம் .
ஆனால் இங்கு ஒன்பது வயது மஜீதுவையும் - ஏழு வயது சுகறாவையும் வைத்துக் கதை ஆரம்பிக்கிறது .இந்த இரு ஜீவன்களின் வாழ்க்கை நதி, சிறு வயதில் செழிப்பான வயல்கள் ஊடேயும் இளம் வயதில் கொஞ்சம் வழிமாறியத் திசைகளோடும் வாழ்வு ஆரம்பிக்க வேண்டிய வயதில் பாலைவனச் சுடுமணலில் பாய்ந்துக் கடலைச் சென்று இளைப்பாராத நதியாக தொலைந்து போகிறது .

கதையோட்டம் :

பொதுவாய் மனிதன், தான் - சமூகம் - இயற்கை என்ற கூண்டிற்குள் அகப்பட்ட பறவைதான் .இதில் ஒன்றாவது பலமாக இருந்தால்தான் வாழ்வு நகரும் ஆனால் மஜீது என்ற ஒரு ஆத்மப் பறவை, வாழ்வின் கடைசிவரைத் தரையைத் தொடமால் தன் இறக்கைகள் தொலையும் வரை பறந்து கொண்டே இருக்கிறது .இந்தக் கதையின் தலைப்பு ‘இனி என்னிடம் இழக்க எதுவுமில்லை’ என்பதாக இருந்தால் கூடத் தப்பில்லை.அந்த அளவுக்கு மஜீதின் வாழ்வு நூலறுந்த பட்டமாய்த் திசையில்லாமல் பயணிக்கிறது !
சொந்த வீடு பொருளெல்லாம் இழந்துத் தன் இரண்டு சகோதரிகளுடன் தெருவுக்கு வரப்போகிறது என்பதையும், தான் விரும்பிய காதலிக் காத்து இருந்து சொல்ல வந்த ஏதோ ஓர் விசயத்தைச் சொல்ல வாய்ப்பு இல்லாமல் மரித்துப் போகிறாள் என்பதையும் ,தன்னுடைய ஒரு காலை விபத்தில் இழந்த நிஜத்தைக் கூடச் சொல்லாமல் வீட்டைக் காப்பாற்றப் போராடிக் கொண்டு இருக்கும் மஜீது , முடிவில்
“பிரபஞ்சம் சூனியம் “
என்று நொந்து கொள்கிறான் ஆனால் எனக்கு மட்டும்தான் இங்கு இதுவெல்லாம் வேறு எதுவும் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆகிவிடவில்லை அத்தனையும் இயல்பாக நடக்கிறது .’என் வாழ்க்கை அர்த்தமிழந்துப் போய் விட்டதாக கருணையான பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்த இறைவா ! (பக். 79) என்று கதுறுகிறான் அப்போதும் ’யா அல்லா உன் கருணைக் கரங்கள் நீளுமா ?’ என்ற ஒரே ஒரு நம்பிக்கை ஏக்கத்துடன் முடிகிறது நாவல்!

ஆசிரியர் : வைக்கம் முகமது பஷீர் (1908-1994 ):
ஓர் சமூகம் பற்றிய எதார்த்தத்தில் கதைப் பாசாங்கற்றுச் சொல்லப்பட்டதே இந்த நாவல் ஓட்டத்தின் பலம் .ஆசிரியரின் பார்வையில் அவரின் வாழ்வின் பாதிப்புக் கதையின் ஊடே பிண்ணிப் பிணைந்து இருக்கிறதோ என்ற பிரம்மையைத் தவிர்க்க முடியவில்லை.அவ்வளவு வலிகள் இந்தக் கதை வாசிக்கும் போது விடாது தொடர்கிறது நம்மை.காலம் கடந்த நாவல் என்பதாக இருந்தாலும் காதலைக் காலம் பாதிப்பதில்லை என்பதற்கு அழுத்தமான சாட்சி இந்த நாவல் .நான் படித்த தி.ஜாவின் மோகமுள்ளோ , ஸ்டெல்லா புருஸின் - அது ஒரு நிலாக் காலம் போன்ற நாவல்கள் ஏற்படித்திய வலிகளை விட ,இந்த நாவல் முடியும் போது மனதின் வலிகளை அதிகரிக்க வைக்கிறார் மறைந்த திரு முகமது பஷீர்.

மொழி பெயர்ப்பு :
மொழிப் பெயர்ப்பு நாவல் இது என்பது நமக்கு எவ்வித நெருடலும் இல்லாமல் கதையோட்டத்தில் நம்மை கரைந்து போகச் செய்யும் திரு .குளச்சல் மு.யூசுப் அவர்களின் மொழி (நடை ) மாற்றம் அசர வைக்கும் அபாரம்.

முடிவாக:
”பால்யகால சகி , வாழ்க்கையிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட ஓர் ஏடு .அதன் ஓரங்களில் இரத்தல் துளிர்த்து நிற்கிறது , - மரணத்தை விடக் கொடுமையான சோக அனுபவங்களும் வாழ்க்கையில் உண்டு என்பதை அவர்கள் ( வாசகர்கள் ) அப்போதுதான் ( நூல் வாசித்த பின் தான் ) உணர்ந்துக் கொள்வார்கள் “ ( பக்.7)

இந்தக் கதைக்கு முன்னுரை எழுதிய எம்.பி போள் சொல்லிய சில வரிகள் இந்தக் கதையைப் பற்றி நான் இவ்வளவு எழுதியும், சொல்ல முடியாத விசயத்தைச் சொல்லி விட்டது .

சேர்த்தவர் : krishnamoorthys
நாள் : 27-Jul-15, 8:28 pm

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் 1908-1994 தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே