பாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு” நூல் மதிப்புரை

(Tamil Nool / Book Vimarsanam)

பாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு” நூல் மதிப்புரை

பாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு” நூல் மதிப்புரை விமர்சனம். Tamil Books Review
சன் டிவியில் தீபாவளி , பொங்கலைக் கொண்டாடுகிறார்களோ இல்லையோ பட்டிமன்றங்களை இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் திரு.சாலமன் பாப்பையா,திருமதி.பாரதி பாஸ்கர்,திரு.ராஜா இவர்கள் கூட்டணியை நம்பியே இன்றும் சன் டிவி மக்கள் மனதில் நிரந்தரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்று வாய்க் கூசாமல் சொல்லலாம் ! இன்று இருக்கும் பிரபலத்துக்குப் பாரதி பாஸ்கரும் ,ராஜாவும் இன்னும் கூடத் தங்களை வளர்த்து விட்டவர்களானாலும் மேற்படித் தொலைக்காட்சியை எதோ ஒரு நன்றியுணர்வோடுதான் தாங்கிக் கொண்டு இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது !

பாரதி பாஸ்கர் ஆனந்த விகடன் மூலம் எழுதிய கட்டுரைத்தொகுதி அடங்கிய - ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு...” நூல் வாசிக்க நேர்ந்தது (விகடன் பிரசுரம்,96 பக்கங்கள், விலை 70 ரூபாய்..ஓவியங்கள் :ஷிவ்ராம்) அதைப்பற்றித்தான் இங்குப் பேசப்போகிறோம் .

எழுதத் தெரிந்தவர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது ஆனால் பேச தெரிந்தவர்கள் அற்புதமாக எழுதுவார்கள் என்பது திருமதி பாரதி பாஸ்கராலும் நிருபணமாகியிருக்கிறது ! மேடையில் முழங்குவது போலத் தனது எழுத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் .அதிலும் அவரின் பட்டிமன்ற அதே பேச்சுத் தொணியில் கொஞ்சமும் விட்டுத்தராத் தன்மை எழுத்திலும் அப்படியே இருக்கிறது . நுணுக்கமான பொருள் செறிவுடன் , மனிதாபிமான இழையோட்டத்துடன் இந்த நூலின் மூலம் சுமார் 89 பக்கங்களில் ( மொத்தப் பக்கம் 96 ) ஒரு மேடைப்பாடம் நடத்தியிருக்கிறார்.

ஆண்கள் நிற்க ...

இருபது தலைப்புகளில் அவர் படைத்த கட்டுரைகளில் பெரும்பகுதி ஆணாதிக்க விருட்சத்தின் வேர்களில் சுடு நீரை ஊற்றும் முயற்சியாகவே இருக்கிறது ! கட்டுரை 1,2,7,13,19 கணவர்களால் பாராட்டப்படாத பெண்கள் பற்றி
”வீடு பாராட்டாவிட்டாலும் , நேசிக்கிறது”என்ற தலைப்பில் பேசும் கட்டுரையில் சின்னச் சின்னப் பாராட்டுகளுக்கு ஏங்கும் பெண்களுக்கான பரிந்துரைத்துப் பேசும் அவர் “அங்கீகாரத்துக்கான ஏக்கம் ஆண்களின் குரோமோசோம்களை விடப் பெண்கள் குரோமோசோம்களில் அதிகம் என்று விஞ்ஞானம் சொல்கிறதாம்” (பக்.10). இது கிடைக்காதபட்சத்தில் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் பேசுகிறார் .

மேலும் “கயமை”என்ற கட்டுரையில் பெண்களைச் சமூகமே ஒருவித பயன்படும் பொருளாகப் பார்க்கிறது .எல்லா விளம்பர பொருள்களிலும் பெண்களே காட்சி பொருளாவதாகச் சொல்வதோடு ,அதிலும் திரைப்பாடல்களில் பெண்களை “மார்க்கெட் தோறும் கொட்டிக்கிடக்கும் காய்கறிகளோடு பெண் உடலைச் சம்பந்தப்படுத்தும் கருத்து நிறைந்த சினிமாப் பாடல்கள்” (பக்.14) என்ற நிலைதான் இன்று நிலவுவதாக விரக்தியில் பதிவிடுகிறார்.

சமூகத்தின் எல்லா விமர்சனப் பார்வைகளும் பெண் மீதே வைக்கப்படும் முட்டாள்தனம்பற்றியும் ,இளம் பெண்களை உடைகளிலும் நடைகளையும் கண்டிக்கும் சமூகத்தைத் தனது எழுத்து மூலம் கோபமாகப் பார்கிறார்,பணியிடங்களில் சக ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்கும் ‘பாலியல் சீண்டல்கள்’ பற்றிக் கொந்தளிக்கிறார். முடிவாகப் பெண்களின் வாழ்வே போராட்டம் இருந்தாலும் ஆண்கள் வாழ்வில் நடந்த அத்தைனையும் சாதனை என்று மட்டும் பதிவிடப்படுவதாக ஆதங்கப்படுகிறார்.

பெண்கள் கவனிக்க ...

”என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது !” என்று பெருமைப்படும் பாரதி பாஸ்கர் பெண்களுக்கெனெ நிறைய அக்கறையைக் கொட்டிக் கொட்டி எழுதிய கட்டுரைகள் 4,6,9,10,14,16,17 போன்றவை. சின்ன,சின்ன மனச்சுமைகளை அவர்கள் தூக்கிச் சுமப்பது ,விட்டில் குழந்தைகள் முதியோர்களிடம் நாம் சின்னச் சின்ன விசாரிப்புகளை அவர்கள் மேல் அக்கறையாக நீளும் ஒரு கையாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்! அழகு என்ற பெண்களின் கற்பனையான மன பிம்பம் ! கரைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறார்..

”அக்னி மூளையின் அறை … பெண்களுக்கெல்லாம் சிறை ! “ என்ற பதிவில் “திரும்பத் திரும்ப நிகழும் சமையல் வேலை கையில் அள்ளிய நிதி நீர் போல நம் கண் முன்னே நம் வாழ்வின் நேரத்தை எல்லாம் நம்மிடமிருந்து ஒழுகச் செய்கிறது” என்று கவித்துவமானப் பார்வையில் தன் வேதனையைப் பகிற்கிறார்.வீட்டின் நிதி நிலமையில் பெண்களின் அறியாமை பற்றிப் பேசும் அவர் ,

” பிரியாத நட்பென்னும் பெரு வரம் வாய்க்குமோ?” என்ற பதிவில் பெண்கள் தங்கள் நட்பை ,வாழ்ந்த இடத்தை இழக்கும் சோகத்தை “பெரு நதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்வு நதியின் பயணத்தை ஒன்றாகவே தொடங்கிய பல மரங்களில் ஒவ்வொன்றின் பயணமும் வேறு வேறாகிப் போவது போல ..என்று மனம் கசிகிறார்.

இரண்டாவது குழந்தைகள் வளர்ப்பினைப் பற்றிய தன்னுடைய பார்வையை 3,8,12,15 பதிவுகளில் மிகத் தீர்க்கமாகப் பதித்துள்ளார் .”அதிலும் வலி நிரம்பிய இழப்புகள்… வராமல் இருக்கக் கடவோம் ”.என்ற கட்டுரையில் ”குழந்தைகள் பிறந்தவுடன் அதை வளர்க்கும் திறமையை இயற்கைத் தமக்கு உடனடியாக வழங்கி விடுகிறது என்று எல்லாப் பெற்றோறுமே நம்புகிறோம் ! என்ற தவறை உணர்த்துகிறார் .

மேலும் பெற்றோர்கள் எப்படி ஆதரவாக நடந்து கொள்ளா வேண்டும் என்று “மௌன வாழ்த்து” என்ற கட்டுரையில்,
வீட்டுப் பெண்களிடம் அம்மாக்களின் குரல் எடுபடாமல் போனதற்கான காரணத்தைப் பேசுகிறார் இங்கு .” பிடிக்காததைப் பெண் செய்யும்போது உடனே கத்தி ஆர்பாட்டம் செய்து என் பேச்சை இந்த வீட்ல யாரு கேக்கிறாங்க வில் முடிக்கும் அம்மாக்கள் இங்கு ஜெயிக்கவே முடியாது .ஆறப்போட்டுத் தனியாகப் பேசி ,நீ சாதிக்கப் பிறந்தவள் என்று நினைவூட்டினால் மட்டுமே இந்தத் தலைமுறை பெண் குஅந்தைகளை வழி நடத்தல் சாத்தியம்” என்று இந்தக்கால அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இருபாலம் கடக்க...

இருபாலருக்கும் பொதுவாக அவர் பேசப்படும் கட்டுரைகள் 5,11,17 திருமணம் அன் பின் கணவன் மனைவிக்கு இடையே தொலைந்து போகும் காதலை அனுசரணையை ஆராய்கிறார். அடுத்து ஆண்களை விமர்சிக்கும் அவர் பார்வையைலிருந்து விலகி அல்லது பாவம் விடுங்கப்பா என்ற ரீதியில் முடிவாக ”பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான் என்ற கட்டுரையில் “பெண்களின் அக உணர்வில் ஒரு நாளும் ஆண் அவளுக்குப் போட்டியே அல்ல.இன்னொரு பெண்தான்”மன நல மருத்துவத் தோழி சொன்னதைப் பகிர்கிறார்.

மேலும் எதற்கெடுத்தாலும் பிரச்சனை, பிரச்சனை என்ற இருபாலருக்கும் ”ஷட் அப் அண்ட் மூவ் ஆன்”என்ற கட்டுரையில், 37 ஞாயிற்றுக் கிழமை செய்யாமல் தள்ளிப்போன கைப் பையையும் வீட்டு குளிர் சாதனப்பெட்டியையும் சுத்தம் செய்யும் வேலையைப் பற்றிய தனது மனப் போராட்டத்தையும் இப்படி நாம் மனதுக்குள் சேர்த்து வைத்து இருக்கும் தேவை இல்லாத விசயங்களைப் போக்க ஜப்பானிய .”ஷட் அப் அண்ட் மூவ் ஆன்” முறைப்படி ”மனசுக்குள் இருக்கும் கசடுகளை அப்படியே தள்ளி யாரிடமும் ஏன் நமக்குள்ளே கூட அதைப்பற்றிப் பேசாமல் புலம்பாமல் அடுத்த வேலை பார்க்கும் முயற்சிதான் இது” என்று ஒப்பிடுகிறார் !


என்னைப் பாதித்த இரண்டு கட்டுரைகள் 18,20 .

”அச்சம் தவிர்” என்ற கட்டுரையில் கண் பார்வைப் பறிக்கப்பட்ட யமுனா என்ற பெண்ணோடு ஏற்பட்ட நட்பையும் அவளைப் பார்த்து வியந்த தன்மைகளைப் பதிவு செய்யும் போது தன் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பாரதி பாஸ்கர் விவரிக்கும் போது கண்களில் நீ கசிகிறது ..

’அடுத்து அவர் தனது முன்னுரையில் ஓர் எழுத்தாளனின் எழுத்தனுபவம் எத்தனை மகத்தானது ’ என்று பேசும்போது உடல் நலமற்ற தன் அம்மாவை 2010 தீபாவளியன்றுப் பார்த்து விட்டு வந்து, அன்று இரவே எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பிய ”நேரில் நின்று … பேசும் தெய்வம் “ என்ற கட்டுரை எழுதிய இரண்டு நாளில் என் அம்மா உலக வாழ்க்கைப் பயணத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார் என்று எழுதி விட்டு ”அன்றுதான் உணர்ந்தேன் அந்தக் கட்டுரை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்று சொல்ல வேண்டும் என்கிறார் தனது மீளாத் துயரத்தைப் பதிவு செய்யும் கட்டுரை மிக உருக்கமானது .

முடிவுரை .

நிறைய இடங்களில் பெண்களுக்காக மட்டும் பேசும் இந்நூல் ஆசிரியர் பாரதி பாஸ்கர் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு கவித்துவத்துடன் பதிவிடுகிறார் .அவரின் ஆண்கள் பற்றிய கோபம் மேடைகளில் கொப்பளிப்பது போல இங்குச் சிதறிப் பரவினாலும் அவருக்குள் ஒரு பொதுப்பார்வை இருக்கிறது .பெண்ணாய் இருப்பதால் பெண் சமூகம் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற எல்லைகளைத் தாண்டியிருக்கிறார்.அதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் உண்மையான முகம்..

சேர்த்தவர் : krishnamoorthys
நாள் : 17-Mar-16, 8:00 pm

பாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு” நூல் மதிப்புரை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே