நீதியைத்தேடி நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்

(Tamil Nool / Book Vimarsanam)

நீதியைத்தேடி நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்

நீதியைத்தேடி நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் விமர்சனம். Tamil Books Review
மதிப்புரை: உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1 - 15, 2007

தமிழ்நாட்டில் சட்ட நூல்கள் பல தமிழில் வெளியிடப்பட்டிருந் தாலும், அவைகள் சாதாரணமாக எவருக்கும் புரிவதில்லை. இவைகளை புரிந்து கொள்ளும் விதத்தில் முடிந்த அளவு நடைமுறை பேச்சு வழக்கில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் வாரண்ட் பாலா.

இந்நூலில் சட்டம் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? நமக்குநாமே வாதாடுவதற்கான உரிமை எதன் அடிப்படை யில்? இப்படி வாதாடுவதால் ஏற்படும் தீமையில்லாத பயன்கள் என்னென்ன? ஒரு வழக்கை எப்படி கொண்டு சென்று திறமையாக நடத்துவது? ஒருவேளை நம்மீது வழக்கு நடவடிக்கை என வந்தால், எப்படி திறமையாக எதிர்கொள்வது? என்பன போன்றவற்றை சாதாரண மக்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கி உள்ளார்.

இந்நூலின் தலைப்பே நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் என்பதுதான். இதை மய்யக் கருத்தாக வைத்துதான் உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா? ‘சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்’, ‘நீதிமன்றம் எப்படி இருக்கும்?’, ‘விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்’, ‘அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு?’, காவல்துறைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’, ‘காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி?’ என 71 அத்தியாயங்களாகப் பிரித்து எளிமையான வகையில் விளக்கி யுள்ளார், ஆசிரியர்.

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்குநாமே எடுத்துக் கொள்வதாகும்.

உதாரணத்திற்கு உங்கள் அப்பா, அம்மாவோடு பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்கள் எண்ணப்படி அப்பா, அம்மாவோடு பேசுகிறீர்கள் அல்லது இந்நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லைதானே! இதான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது.

‘‘நீதிமன்றத்தில் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான். முன் அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போதுதான் வாங்க வேண்டும். நமக்குநாமே வாதாடும் போது தேவையில்லை. ஏன் என்றால், நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ) இன்படி, பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை’’ என்று நம்முடைய வழக்கில் நாமே வாதாடுவதற்கு உள்ள உரிமையை குறிப்பிடுகிறார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மனுக்களின் மாதிரி படிவங்கள், அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கோரும் அறிவிப்பு, நினைவூட்டு மாதிரி படிவங்கள், நீதிமன்றங்களில் நகல் கோரும் மனுக்களின் மாதிரி படிவங்கள், பொதுநல வழக்கு மனு மாதிரி போன்ற கூடுதல் விபரங்களையும் இறுதிப் பக்கங்களில் அமைத்துள்ளார்.

ஆசிரியருடைய முயற்சி மிகவும் பயனுள்ள முயற்சி. இதற்காக ஆசிரியரைப் பாராட்டுவதுடன் மேலும் சட்ட விழிப்புணர்வு குறித்த புத்தகங்களை எழுத வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவிக்கிறோம்.

இந்நூல் வெளிவர மத்திய சட்ட அமைச்சகம் உட்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ சட்ட ஆர்வலர்கள் நிதி உதவி செய்தமை முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

மதிப்புரை: துக்ளக் வார இதழ் 04-02-2009

இந்நூலாசிரியரின் நீதியைத்தேடி... வரிசையில் ஏற்கெனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘பிணை எடுப்பது எப்படி?’ என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன.

தவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வைப் பெற, இதுபோன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில், ‘சட்ட அறிவுக் களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப் பட்டுள்ளன.

சட்டங்கள் எப்படி இயற்றப்படுகின்றன? சட்டத்தில் ஓட்டை என்பது என்ன? வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன? குறுக்கு விசாரணை. சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? இப்படி சுமார் 155 தலைப்புகளில் கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது.

மக்களுக்குப் பயனுள்ள நூல்களில் இதுவும் ஒன்று.

மதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற அறைகூவலுடன் ‘‘சட்ட அறிவுக்களஞ்சியமாக’’ இந்நூலை பட்டறிவுடன் படைத்து உள்ளார், வாரண்ட் பாலா. மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள் சிறைச்சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.

‘‘நமக்காக நாம்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிறரை நம்பிப் பயனில்லை’’ என்ற அனுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங் களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.

மதிப்புரை: தினமணி நாளிதழ் 04-10-2007

அனைவருக்கும் சட்டக்கல்வி அவசியம் என்ற அடைப்படையில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதப்பட்ட நூல்.

ஒருவரை கைது செய்ய என்னென்ன முறைகள் பின்பற்றப்பட வேண்டும்? சாமானிய மனிதரும் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா? ஜாமீன் என்றால் என்ன? யாரையெல்லாம் ஜாமீனில் எடுக்கலாம்? யாரை எடுக்கக்கூடாது? என்று பலருக்கும் தெரியாத அடிப்படையான சட்ட விவரங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. பயனுள்ளநூல்.

மேலும், விரிவான விவரங்களுக்கு http://www.neethiyaithedy.org/p/no-patent-right.html

சேர்த்தவர் : வாரண்ட் பாலா
நாள் : 17-Jan-18, 3:20 pm

நீதியைத்தேடி நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே