வெளிச்ச விதைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள் விமர்சனம். Tamil Books Review
கவிஞர் பெ.அசோகனின் "வெளிச்ச விதைகள்"அனைத்துத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் ஒரு கவிதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது.சமூகத்திலுள்ள பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பது என்பது அரிது.கொள்கை கோட்பாடு கோசங்களால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.எல்லா மாற்றமும் ஒவ்வொரு தனிமனித ஒழுக்கத்தால் மட்டும் நிகழும் என்கிறார்.அன்பு,பாசம்,ஒழுக்கம்,நேர்மை பரிபூரணமாக இருந்தால் போதும் சமூகம் சரியாக இயங்கும் என்று கவிஞர் நம்புகிறார்.தற்கால கவிஞர்கள் படைப்பாளன் யார் என்று வாசகனைத் தேட வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக கவி வடிக்கின்றனர்.கவிஞர் பெ.அசோகன் தன்னை தமிழுக்குள்ளும் மொழிக்குள்ளும் மறைத்துக்கொண்டு வாசகனோடு பேசுகிறார்.

"மோகக் கொடியவரைக்
கண்டால்-அவர்
முகத்தை உடைத்திடு பாப்பா!
தேகம் தொடுவற்கு முன்பே அதை
தெருவோருக்குச்
சொல்லிவிடு பாப்பா!"
என்று புதிய பாப்பா பாட்டெழுதி குழந்தையாய் பேசுகிறார்.

"பெண்டு பிள்ளையைப் போகப்பொருளாய்
கண்டிடக்கூடாது பூமியிலே!
சுண்டு விரலாலும் தீண்டுபவன் தலை
நின்றிடக் கூடாது உடலினிலே!"
என்று நிமிர்ந்தெழுந்து பெண்ணாய் பேசுகிறார்.

"கடவுள் வடித்த
கவிதையின் எச்சம்
கருப்பை துப்பிய
கழிவின் மிச்சம்"
என்று திருநங்கையாய் பேசுகிறார்.

"ஓசோன் படலத்திலும்
ஓட்டை கண்டார்கள்
ஏழை உழவனின் வீட்டு ஓட்டை மட்டும்
எந்த விஞ்ஞானியின்
தொலைநோக்குப் பார்வையிலும்
தெரியவதேயில்லை"
என்று உழவனாய் பேசுகிறார்.

இப்படி அனைத்துத் தரப்பு மக்களோடும் கவிதையாய் பேசுகிறார்.கவிதையில் எதுகையும் போனையும் ஓசையும் அருவியாய் ஆர்ப்பரிக்கிறது.பாடுபொருள் பலவாறு மூலை முடுக்கெல்லாம் சென்று பேசுகிறது.ஆளுமைமிக்க கவிஞனாய் மிளிர்கிறார் கவிஞர் பெ.அசோகன்.

-கவிஞர் வெ. முனிஷ்

சேர்த்தவர் : கவிஞர் பெஅசோகன்
நாள் : 23-Dec-21, 4:15 pm

வெளிச்ச விதைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே