தமிழியக்கம் - கூத்தர்

வாய்ப்பாட்டுப் பாடிடுவோர்
பெரும்பாலோர் வண்டமிழ்க்குத்
தீமை செய்தார்!

போய்ப்பாரீர் படக்காட்சி!
போய்ப்பாரீர் நாடகங்கள்!
பொன்போல் மிக்க

வாய்ப்பாகத் தமிழ் ஒன்றே
பேசுகின்றார் பாடுகின்றார்
வாழ்க அன்னார்!

தாய்ப்பாலில் நஞ்செனவே
தமிழில் வடமொழி சேர்த்தார்!
தவிர்தல் வேண்டும்!

தமிழ்ப்புலவர் தனித்தமிழில்
நாடகங்கள் படக்கதைகள்
எழுத வேண்டும்.

தமிழ்ப்பகைவர் பார்ப்பனர்கள்
நாடகத்தில் படக்கதையைத்
தமிழர் எல்லாம்

இமைப்போதும் பார்த்திடுதல்
இனியேனும் நீக்கிடுதல்
வேண்டும் யாவும்

அமைப்பானும் செந்தமிழன்
அதைக்காண்பா னுந்தமிழன்
ஆதல் வேண்டும்.

ஆடுகின்ற மெல்லியலாள்
அங்கையினைக் காட்டுவது
பொருள் குறித்தே

நாடிடும் அப் பொருள் குறிக்கும்
சொல் தமிழாய் இருப்பதுதான்
நன்றா? அன்றித்

தேடிடினும் பொருள் தோன்றாத்
தெலுங்குவட சொல்லாதல்
நன்றா? பின்னால்

பாடுகின்றார் நட்டுவனார்
பைந்தமிழா? பிறமொழியா?
எதுநன் றாகும்?

கூத்தர் பலர் தமக்குள்ள
தமிழ்ப்பேரை நீக்கிவிட்டுக்
கொள்கை விட்டுச்

சாத்திக் கொள்கின்றார்கள்
வடமொழிப்பேர்! இந்திப்பேர்!
அவற்றி லெல்லாம்

வாய்த்திருக்கும் தாழ்வறியார்
புதி தென்றால் நஞ்சினையும்
மகிழ்ந்துண் பாரோ?

தாய்த்திருநா டுயர்வெய்தும்
நாள் எந்நாள்? தமிழுயரும்
நாள்எந் நாளோ?

என்னருமைத் தமிழ்நாட்டை
எழிற்றமிழால் நுகரேனோ
செவியில் யாண்டும்

கன்னல்நிகர் தமிழிசையே
கேளேனோ கண்ணெதிரில்
காண்ப வெல்லாம்

தன்னேரில் லாத தமிழ்த்
தனிமொழியாய்க் காணேனோ
இவ்வை யத்தில்

முன்னேறும் மொழிகளிலே
தமிழ்மொழியும் ஒன்றெனவே
மொழியே னோநான்!"


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:49 pm)
பார்வை : 97


பிரபல கவிஞர்கள்

மேலே