சுதந்திரம்

சுதந்திரம்

மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை

சூரிய நிலாக்களாய்க்
கண்ணுக்கழகிய பெண்கள்
கடந்தேகும் போதெல்லாம்
அழகி நீங்களென
வாயாரச் சொல்ல வலிமையில்லை

தண்ணீரே எண்ணெயாய்த்
தாமரைகள் விளக்கெரிக்கும்
குளம்கண்டால்
ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து
நீர் குடைந்தாட நேரமில்லை

நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
துண்டு தலைக்கு வைத்துத்
துயில் கொள்ள இயலவில்லை
நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்
நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை

ரயிலில் வரும் சில வியாபாரிகள்
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
ஆண்மையின்னும் கூடவில்லை

கடன்கேட்கப் போனவீட்டில்
உப்புக்கரிக்கும் உணவைத்
துப்பித் தொலைக்கத் துணிவில்லை

சிலரது மரணத்தை
தேசிய லாபமென்று
அறிக்கையிடத் திராணியில்லை

முதலமைச்சர் வேலைகோரி
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்
மூடப்பரிந்துரை மூட்டைகளை
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை

தேசியகீதம் இசைக்கும் நேரம்
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
வண்டலூர் அனுப்ப வசதியில்லை

இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை

எண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை

எழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை

வான்குடைய வேண்டும்
சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக்
கடன் கேட்டேன்

தரமாட்டான் மனிதனென்று தரவில்லை

கற்றை மேகமாய்க் காடுகடக்க
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள
நீண்ட கனவு... நிறைவேறவில்லை

குறைந்தபட்சம்
ஞாயிறு மட்டுமேனும்
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை

பழைய பெரியவரே
பாலகங்கார திலக்!
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது
சும்மா.


கவிஞர் : வைரமுத்து(11-Jul-12, 3:28 pm)
பார்வை : 16


மேலே