சரசுவதி தோத்திரம்

எங்ஙனம் சென்றிருந்தீர் -- எனது
இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் -- கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் -- கடல்
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே -- அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.
1

மாதமொர் நான்காநீர் -- அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்.
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன்
பாவமேலாங்கெட்டு ஞான கங்கை
நாதமொ டெப்பொழுதும் -- என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்! -- அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!
2

கண்மணி போன்றவரே! -- இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் -- சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர்! -- என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! -- இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ?
3

தானெனும் பேய்கெடவே, -- பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே, -- நல்ல
வாய்மையி லேமதி நிலைத்திடவே,
வானெனப் பொழிந்திடுவீர்! -- அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! -- நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!
4

தீயினை நிறுத்திடுவீர்! -- நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே -- உம்மை
மதிப்பது மறந்தனன் பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் --பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; -- இனி
மறக்ககிலேன் எனை மறக்ககிலீர்!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 3:55 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே