கண்ணம்மாவின் -- அங்க வர்ணனை
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ
எங்கள் கண்ணம்மா நுதல் பாலசூரியன்
சரணங்கள்
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறி குழல்; இவள் நாசி எட்பூ
.(எங்கள்) 1
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம்; இதழமிர்தம்
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய லரம்பை, சதுர் அயிராணி
(எங்கள்) 2
இங்கித நாத நிலைய மிருசெவி;
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்
வயிறா லிலை; இடை அமிர்த வீடு.
(எங்கள்) 3
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்
பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்.
(எங்கள்) 4