தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
தோத்திரப் பாடல்கள் கண்ணன் துதி
தோத்திரப் பாடல்கள் கண்ணன் துதி
காயிலே புளிப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
கனியிலே இனிப்பதென்னே?
கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?
கண்ண பெருமானே!
1
காற்றிலே குளிர்ந்ததென்னே?
கண்ண பெருமானே! -- நீ
கனலிலே சுடுவதென்னே?
கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே?
கண்ண பெருமானே! -- நீ
திக்கிலே தெளிந்ததென்னே?
கண்ண பெருமானே! 2
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே?
கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?
கண்ண பெருமானே! 3
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! -- நீ
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே! 4