வேண்டும் யாவையும் வேண்டும்
#வேண்டும் யாவையும் வேண்டும்..!
மனிதம் மறந்த மண்ணில்
மறுபடி வேண்டும் மனிதம்
புனிதம் இழந்த புவியில்
புத்தன் வேண்டும் வேண்டும்..!
காயும் கனியும் உண்டு
களித்தக் காலம் வேண்டும்
பாயில் படுத்து உறங்க
நோயற்ற வாழ்வு வேண்டும்..!
மஞ்சள் வண்ணம் முகத்தில்
மங்கை காண வேண்டும்
தொற்றுக் கிருமி யாவும்
தோல்வி காண வேண்டும்..!
கூட்டுக் குடும்ப மெங்கும்
கொண்டாடி மகிழ வேண்டும்.
இன்ப துன்பம் பகிரும் - அந்த
இனிய வாழ்வு வேண்டும்..!
தோப்புப் போன்ற வாழ்வில்
பசுமை காண வேண்டும்
மூப்புக் கண்ட போதும்
முனகா சேவை வேண்டும் .!
தாக மென்று வந்தால்
தணிக்கும் மக்கள் வேண்டும்
சோகம் நீங்கிய வாழ்வில்
சொர்க்கம் பூக்க வேண்டும்..!
பெண்ணைக் கண்ட ஆணின்
பித்தம் நீங்க வேண்டும்
கண்ணியம் கொண்ட பார்வை
காளை கொள்ள வேண்டும். !
நீதி தவறா மனிதன்
நாட்டையாள வேண்டும்
சாதி சண்டைக் கொடுமை
சாக்காடு போக வேண்டும். !
சமச்சீர் கல்வி எங்கும்
சரியாய்க் கிட்ட வேண்டும்
சல்லடை போடும் நீட்டுச்
சாபம் நீங்க வேண்டும்..!
இறந்து வாழு கின்ற
இவ்வுலகம் மாறவேண்டும்
இல்லை என்ற சொல்லே
இல்லா தொழிய வேண்டும்..!
எங்கும் அமைதி நிலவி
ஏற்றம் காண வேண்டும்
எல்லாம் கிட்டும் உலகில்
இன்பம் நீள வேண்டும்..!
#சொ.சாந்தி