தமிழினம்

வெண் ஊமத்தை பூ நிமிர்ந்து

சூரியனில் விடாய் அடங்கும்

பாதம் பதியாமல் பார்த்துப்போம்

சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி

காதில் அணிந்து போகக் கொஞ்சும்

பெரும்பித்தன் சடைமரத்

தவமியற்றும் வெள்ளெருக்கு

அதன் நீல நிறப் பங்காளி

ஏளனமாய்ச் சற்று சிரிக்கும்

தங்கரளி வெள்ளரளி செவ்வரளி

மாதர் சூடிக் கொடுக்காத தெனினும்

சுடர்கொடிகள்

பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில்

உட்புகுந்து தேன் கவரும் வண்டு

கொன்றை ஓய்ந்தபின்

களித்துப் பூச்சொரியும் வாதநாராயணன்

தொட்டாவாடி ஊதாப்பூவை

ஏதுறுஞ்சும் எனத் திகைக்கும்

துளசிபோற் பூத்த பார்த்தீனியம்

தானும் தொன்மைத்

தமிழினம்தான் என

வஞ்சமாய் மெல்ல நகைக்கும்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:16 pm)
பார்வை : 0


மேலே