கல்லும் கவியும்
மனதறிந்து குலவுகிறது காற்று
மரங்களுக்கும் மறுப்பில்லை
முன்னிரவில் சிலம்பிய புட்களெல்லாம்
பசியாறி சிறகோய்ந்து இறகின் கதகதப்பில்
பார்ப்புகளைச் சேர்த்தணைத்து
நாளைய பறப்பின் தூரங்களை
காத்திருக்கும்
பாம்புகள் வீடு தோறிரந்தும்
பசியறாது அயர்ந்த வெற்றராய்
தேரையும் சுண்டெலிகளும் பறவை முட்டைகளும்
தேடி ஊர்வது காண மனதிரங்கும்
கையும் காலும் சிறகும் அற்றது கட்செவி
விடம் சுமந்தும் நடப்பன சில
எனில் நெஞ்சில் மானுட வஞ்சமன்று
இறந்தும் போகிறார் விடத்தாலும் பயத்தாலும்
உலகில் பாம்பினங்களுக்குத்தான்
அத்தனைஅவப்பெயரும்
கல்லும் உயிரினந்தான்
உண்பதில்லை, தானாய் நகர்வதில்லை , வளர்வதில்லை
ஊழிக்கும் ஒரு உட்சுவாசம் கொள்வதில்லை
எத்தனை துகள்களாய் சிதறினாலும்
சாக மறுக்கும் சீவனது
கவி போல் காலம் வென்று நிற்பது
மண்மீது தீராக் காதலும் கொண்டது.