தமிழ் கவிஞர்கள்
    >> 
    குட்டி ரேவதி 
    >> 
    வீட்டிற்குள் வளரும் மரம்
வீட்டிற்குள் வளரும் மரம்
அகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில்
சுயவரலாற்றுப் புத்தகம் ஒன்று 
நூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது
அதை விரித்துப் பார்க்கும் துணிவில் 
வேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை
புத்தகம் தன்  இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு
நிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி
கைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள்
சில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி
அந்தகாரத்தில் மிதந்தலைகின்றன
காற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது
அதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது
கூரை இடிந்து போகும் வரை மரம் வளரட்டும்