தோத்திரப் பாடல்கள் மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளன
யாவையும் செய்பவளே! 1

பந்தத்தை நீக்கிவிடு -- அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு்
சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச்
செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே -- நெல்லாமென
எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று
இயங்கி யிருப்பவளே. 2

கள்ளம் உருகாதோ -- அம்மா
பக்திக் கண்ணீர் பெருகாதோ?
உள்ளம் குளிராதோ -- பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே -- அனைத்திலும்
மேவி யிருப்பவளே!
3

[பாட பேதம்]:
1. ‘யாவையும் செய்தவளே’
2. ‘உள்ளத் தெளியாதோ’
-- 1910 ஆம் வருட பதிப்பு.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:50 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே