பல்வகைப் பாடல்கள் வேய்ங்குழல்

எங்கிருந்து வருகுவதோ -- ஒலி
யாவர் செய்கு வதோ? -- அடி தோழி

குன்றி னின்றும் வருகுவதோ -- மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ -- வெளி
மன்றி னின்று வருகுவதோ -- என்றன்
மதிம ருண்டிடச் செய்குதடி -- இஃது (எங்கிருந்து) 1

அலையொ லித்திடும் தெய்வ -- யமுனை
யாற்றி னின்றும் ஒலிப்பதுவோ -- அன்றி
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப்போல் (எங்கிருந்து) 2

காட்டி னின்றும் வருகுவதோ -- நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ -- வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ
நாத மிஃதென் உயிரை யுருக்குதே -- (எங்கிருந்து) 3

பறவை யேதுமொன்றுள் ளதுவோ -- இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு
மறைவி னின்றுங் கின்னர ராதியர்
வாத்தியத்தி னிசையிது வோ--அடி (எங்கிருந்து) 4

கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடீ
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி (எங்கிருந்து) 5


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:20 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே