பல்வகைப் பாடல்கள் சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளியுண்டாம்; -- பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம்; -- பெண்ணே! 1

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ்சுடராம்; -- பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ்சுடராம்; -- பெண்ணே! 2

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்ற முறுஞ்சுடராம்; -- பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்னரிடுஞ்சுடராம்; -- பெண்ணே! 3

பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
பார்க்க வொளிர்ச்சுடராம்; -- பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன்றென்பதைக்
காண வொளிர்ச்சுடராம்; -- பெண்ணே! 4


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 12:29 pm)
பார்வை : 0


மேலே