நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? 1
தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
ஈரச்சுவையதி லூறிவருமதில்
இன்புறுவாய் மனமே!
சீரவிருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழகாக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டோ?
2
பன்றியைப் போலிங்கு மண்ணிடைச்
சேற்றில் படுத்துப் புரளாதே,
வென்றியை நாடியிவ் வானத்தில் ஓஒட
விரும்பி விரைந்திடுமே;
முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போலொரு
நல்ல மனம்படைத்தோம். 3
தென்னையின் கீற்றுச் சலசல வென்றிடச்
செய்து வருங்காற்றே;
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோர்
உள்ளம் படைத்துவிட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற்காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்
வெட்டொலி யேன்கொணர்ந்தாய்? 4
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி லிசைத்தவ் வொலிக ளனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
நண்ணி வருமணி யோசையும், பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னேஅன்னக் காவடிப் பிச்சை’யென்
றேங்கிடு வான்குரலும், 5
வீதிக் கதவை அடைப்பதுங் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும
மதலை யழுங்குரலும் --
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணுவாய் மனேம. 6