ஏ மிலேச்ச நாடே!

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!

ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!

தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!

வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...

அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.

நன்றி - கவிஞ்ர் தாமரை


கவிஞர் : தாமரை(6-Dec-12, 1:11 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே