தமிழ் கவிஞர்கள்
>>
கம்பர்
>>
சடகோபர் அந்தாதி - சிறப்புப் பாயிரம்
சடகோபர் அந்தாதி - சிறப்புப் பாயிரம்
தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவில் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்கநன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே.
ஆரணத் தின்சிர மீதுஉறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்த வனைக்குருக்ஷரனைப் பற்பலவா
நாரண னாம்என ஏத்திக் தொழக்கவி நல்குகொடைக்
காரண னைக்கம் பனைநினை வாம்உள் களிப்புறவே.
'நம்சட கோபனைப் பாடினையோ?' என்று நம்பெருமாள்
விஞ்சிய ஆதரத் தால்கேட்பக் கம்பன் விரைந்துஉரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும்வண்ணம்
நெஞ்சுஅடி யேற்குஅருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே.
நாதன் அரங்கன் நயந்துரை என்னநல் கம்பன்உன்தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படியெனக்கு உள்ளத் தனையருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப்பொரு ளேஇதுஎன் விண்ணப்பமே.