தமிழ்க் கனவு

தமிழ்நா டெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோல் குவியுது!!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின்றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
அங்கே கூடினார் அத்தனை பேரும்!
குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்!
உரக்கக்கேட்டான்: 'உயிரோ நம் தமிழ்?'
அகிலம் கிழிய ம்! ம்! என்றனர்!!
ஒற்றுமை என்றான்; 'நற்றேன்' என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,
தொழில் நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றிலெலாம் கலந்தது கீதம்!
சங்கீத மெலாம் தகத்தகாயத்தமிழ்!
காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர்தமிழ்க் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக்
கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
புகழ்ந்தாளென்று, பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழைய
நைந்த தமிழரொடு நானிருந் தேனே!


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 5:06 pm)
பார்வை : 0


மேலே