கடைசி மழைத்துளி..

அகதி முகாம்
மழையில் வருகிறது
மண் மணம்.
***
அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.
***
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.
***
விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.

***
தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.
***

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.
***
விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.
***
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.
***
எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.
***
தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.
***
பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.
***

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.
***
வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!

***
எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!
***

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.
***
நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.
***
பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

***
தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!

***
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.
***

ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.
***

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.
***
அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.
***
ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.
***
இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.
***
எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.
***

கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.
***
ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்
***
கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு
***
'இந்தியா டுடே'யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.
***
இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்
***
உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.
ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:27 pm)
பார்வை : 34


மேலே