தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!


கவிஞர் : வைரமுத்து(11-Apr-11, 11:38 am)
பார்வை : 166


பிரபல கவிஞர்கள்

மேலே