கல்லும் கலவையும்
கல்லும் கலவையும் கொண்டு
கரணையால் தடவித் தடவி
சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்
ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்
கட்டிடம் இல்லை பாலம்.
முன்னாளெல்லாம் பாலம்
தியானித்திருக்கும் நீருக்கு மேலே
இந்நாளெல்லாம் பாலம்…
நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.
ஆதியில் இந்தப் பாலம்
தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும்
போகப் போகப் போக
மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி
ஒருவாறாகிப் பிறந்தது பூமியில்
ஒருநாள் அதனுடன் பேசும் பொழுது
வேலியும் படியும் கம்பமும் ஏணியும்
தானே என்றது பாலம்
இன்னும் கொஞ்சம் நின்றால்
என்னையும் தானே என்று
கூறக்கூடும் பாலம்
என்கிற எண்ணம் உதிக்க
வருகிறேன் என்று புறப்படும் பொழுது
என்னைப் பார்த்துப் பாலம்
சிரிப்பில்லாமல் சொல்லிற்று
ஜாக்கிரதையாகப் போய் வா
எங்கும் ஆட்கள் நெரிசல்
உன்னைத் தள்ளி உன்மேல்
நடக்கப் போறார் பார்த்துக் கொள்.