உடலை விட்டு எப்படி வெளியேறுவது?

பகல் இரவு என்றில்லாது
எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட
ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன
கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை
வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே
நூறாண்டுகள் ஆயிற்று
இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது
இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை
புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி
தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து
எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே
வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்
கடக்க வேண்டியிருந்தது
மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்
செய்து கொள்ளமுடிந்தது
கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்
வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்
இன்னும் இன்றும் கூட
யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்
நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து
சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச்
செய்து கொண்டிருக்கும் உடல்
உன்னுடன் வெளிகளுக்கிடையே
வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்
நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று
நான் நினைத்திருப்பது போல
அது அற்புதமாய் இல்லாமலும் போகலாம்
அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை
இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே
எஞ்சியிருக்கிறேன்
என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ
அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து
உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்
இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்
ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு

சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 5:57 pm)
பார்வை : 0


மேலே