மெசியாவின் காயங்கள் - மௌனம்

கனக்கும் வாழ்வை
சுமக்கும் பக்குவமற்றவனை
முற்றுகையிடும் மௌனமே
விலகிப் போ.
கூச்சலிடவில்லையெனினும்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக நீ
கொன்று கொண்டிருக்கிறாய்
ஏழு ஏழு சென்டிமீட்டராய்
எவரெஸ்ட் சிகரம்
எங்கு நகர்ந்து போனால் எனக்கென்ன
நான் எழுந்து நடக்க வேண்டும்
அங்கொரு பிட்சு நூறு வருடங்களாக
கண் விழித்திருந்தால் நான் என்ன செய்யட்டும்
நான் கொஞ்ச நேரமேனும் உறங்கி எழ வேண்டும்.
கரையில் படகுகள் அடகில் இருப்பதாய்
குமுறும் கற்பனை என்னுடையதல்ல.
கடவுளுக்கு ஆள் தேடும்
கனவுகளுக்கு அஞ்சி
புயலாடிய ஏழுகடல் நடனங்கள்
கண்டு பிதுங்கிய விழிகள்
கைகளுக்கு எட்டாத தூரத்தில்.
எண்ணிக் கொண்டுதானிருக்கிறேன்
திருட்டுபோய் நான் மீளாத
ஏழாவது அதிகாலை இது.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 8:57 am)
பார்வை : 119


மேலே