தம்பிகாள்!

வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம்
வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்!
தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே!
தெய்வம் உண்டு நம்புங்கள்!
பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்!
போர்க்களம் எமக்கென்ன புதிதோ?
குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்!
கூத்தாடுவோம்! இது பொன்னாள்!

எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள்
இருட்சிறை ஆடுதல் இன்பம்!
வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து
வெல்லுதல் விடுதலை கண்டீர்!
சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்!
செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ?
வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்!
வைர நெஞ்சங்களோ வாழி!

ஆழமா கடலின் அலைகளே இருங்கள்!
அறம் காத்தல் நம்கடன் அன்றோ?
கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம்
குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்!
ஈழமா மண்ணில் எழில் விடுதலை நாள்
இருத்தாமல் நாம் மடிவோமா?
ஊழையும் வெல்லும் உளங்களே! இருங்கள்!
ஒருபெருஞ் செயல் செயப் பிறந்தோம்!

கொள்ளையாம் வீரம் கொந்தளித்தாடும்
குட்டுவன் தமிழ்க்குலச் சேய்காள்!
உள்ளம் மகிழ இசை ஓதுமின்கள்!
உவகையில் ஆடிக் களிப்பீர்!
பிள்ளைகளா பெற்றாள்? எமைப் பெற்றாள்
பெருமைகள் அல்லவா பெற்றாள்?
வெள்ளம் படைப்போம்! புயல்படைப்போம்! நாம்
விடுதலை படைப்போம்! இருங்கள்!

நெடும்போர் ஆடும் நிமிர்ந்த உயிர்களே!
நெருப்பினில் பூத்த நெஞ்சங்காள்!
கொடுங்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்
குடியிருக்கும் உங்கள் அண்ணன்
இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!
இன்னுயிர்தான் விலை எனினும்
கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!
கூத்தாடுவேன் உடன்பிறப்பே!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:37 pm)
பார்வை : 206


பிரபல கவிஞர்கள்

மேலே